
சிங்கம்பட்டியை தலைநகராகக் கொண்டு, சிற்றரசு ஒன்றுக்கு மன்னராக இருந்தவர்-, பெரியசாமி தேவர். மகோதரம் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, மிகவும் துன்பப்பட்டார்.
என்ன வைத்தியம் செய்தும் பலனில்லை. கடைசியாக, தன் பரிவாரங்களுடன் சிதம்பரம் சென்று, நடராஜப் பெருமானிடம் சரண் புகுந்தார்.
தினமும், சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி, திருநீறு அணிந்து, நமசிவாய மந்திரத்தை ஓதியவாறு உபவாசம் இருந்தார், மன்னர். 48 நாட்கள் விரதம் இருந்தும், நோய் தீர்வதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாததால், மனம் உடைந்தார்.
'ஆடல்வல்லானே... இதற்கு மேலும் என் நோய் தீராவிட்டால், உன் புகழுக்குக் கெட்ட பெயர் வராமல், சிவகங்கை தீர்த்தத்தில், என் உயிரை மாய்த்துக் கொள்வேன்...' என்று, சபதம் செய்தார், மன்னர்.
அன்றிரவு, மன்னர் கண்ணயர்ந்த நேரம். அவர் கனவில் தோன்றிய நடராஜப் பெருமான், 'பக்தனே, வருத்தப்படாதே. பசுவந்தனை என்ற ஊரில், எம் அடியவன் சங்கு சுவாமி என்பவன் இருக்கிறான். அவனைப் போய் பார். அவன் உன் நோயை தீர்ப்பான்...' என்று கூறி, மறைந்தார்.
மறுநாளே பசுவந்தனைக்குப் புறப்பட்டார், மன்னர்.
தங்கள் ஊர் தேடி வந்த மன்னரை, மக்கள் அனைவரும் மிகுந்த மரியாதையோடு வரவேற்றனர்.
'இந்த ஊரில் சங்கு சுவாமிகள் என்பவர் இருக்கிறாரா? அவரைப் பார்ப்பதற்காகவே வந்தேன்...' என்றார், மன்னர்.
மக்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தனர்.
'மன்னா... நீங்கள் சொன்னபடி இங்கு சுவாமிகள் யாருமில்லை. சங்கு என்ற பெயரில் பைத்தியக்காரன் ஒருவன், அங்கே நந்தவனப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறான்...' என்றனர்.
அவர்கள் பேச்சைக் கேட்டு வருந்திய மன்னர், 'அப்படி எல்லாம் பேசாதீர்கள். ஞானிகளைப் பழிப்பது பெரும் பாவம்...' என்று சொல்லி, நந்தவனம் நோக்கிச் சென்றார்.
நந்தவனத்தில், நிஷ்டையில் இருந்தார், சங்கு சுவாமிகள். தான் எடுத்து வந்த மலர்கள், பழங்கள் மற்றும் கற்கண்டு ஆகியவற்றை, அவர் முன் வைத்து, சாஷ்டாங்கமாக விழுந்து, வணங்கி எழுந்தார், மன்னர். அவரை அறியாமலே அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. கைகளைக் கூப்பி நின்றார்.
நிஷ்டை கலைந்து, எதிரில் இருந்த மன்னரைப் பார்த்தார், சங்கு சுவாமிகள்.
'மன்னா, வைத்தியநாதனான தில்லைக்கூத்தன், உன் நோயைத் தீர்க்க என்னிடம் அனுப்பினாரா? விந்தை தான். சரி இந்தா, இந்த பழத்தை சாப்பிடு...' என்று, தட்டிலிருந்த பழம் ஒன்றை எடுத்து வழங்கினார், சங்கு சுவாமிகள்.
மன்னர் பழத்தை சாப்பிட்ட, அடுத்த நொடி, தன் உடலில் புத்துணர்ச்சி பரவுவதை உணர்ந்தார். அவரைப் பீடித்திருந்த நோய், அப்போதே நீங்கியது.
உண்மையில் நடந்த வரலாறு இது. துாத்துக்குடி - -கயத்தாறுக்கு அருகில், பசுவந்தனை என்ற ஊர் இருக்கிறது. அங்கே, சங்கு சுவாமிகள் சித்திஅடைந்த இடத்தில் கோவிலும் உள்ளது. இங்கு வந்து வேண்டுபவர்களுக்கு, நோய் தீர்த்து அருள் புரிகிறார், சங்கு சுவாமிகள்.
யார் மூலமாகவாவது தெய்வம் நம் குறை தீர்க்கும் சந்தேகமே இல்லை.
பி. என். பரசுராமன்