PUBLISHED ON : டிச 27, 2015

தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், நேரு சிலை சந்திப்பில் அமைந்துள்ளது, எவரெஸ்ட் ஓட்டல்!
இந்த ஓட்டல் பெயரைக் கேட்டாலே, மொறு மொறு பரோட்டா தான் நினைவுக்கு வரும். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, தேனியில் இருந்து ஆம்னி பஸ்சில் சென்னை செல்வோரும், இந்த ஓட்டல் பரோட்டாவை பார்சல் வாங்கி செல்கின்றனர். அந்த அளவுக்கு எவரெஸ்ட் பரோட்டா, 'பாப்புலர்!'
பரோட்டா தயாரிப்பதற்கென்றே, இவர்கள் பசையுள்ள மைதா மாவை கொள்முதல் செய்கின்றனர். இந்த மாவுடன், வெண்ணெய் மற்றும் முட்டை கலந்து பிசைந்து மெலிதாக வீசி, கடலை எண்ணெய் ஊற்றி, ஊற வைத்த பின், பக்குவமாக வேக வைத்து எடுக்கின்றனர். ஒரு பரோட்டா, 17 ரூபாய்! மதியம், 3:00 மணியிலிருந்து இரவு, 12:00 மணி வரை, பரோட்டா கிடைக்கிறது.
அத்துடன், இந்த ஓட்டல் மட்டன் பிரியாணியும், தனித்தன்மை வாய்ந்தது. பொதுவாக எல்லா ஆட்டுக்கறியும், ஒரே சுவை கொண்டதல்ல; கரிசல்காடு, மலைக்காடுகளில் மேயும் ஆடுகளின் கறிதான் மிகவும் சுவையாக இருக்கும்.
இதனாலேயே, பிரியாணிக்கு தேவையான ஆடுகளை, விருதுநகர், அருப்புக்கோட்டை, வருஷநாடு, மயிலாடும்பாறை, திண்டுக்கல், வடமதுரை மற்றும் கன்னிவாடி போன்ற கரிசல்காடு மற்றும் மலைப்பகுதிகளில் வளர்ந்த ஆடுகளை மட்டுமே வாங்குகின்றனர். இதுவே, இந்த ஓட்டல் பிரியாணியின் தனிச் சுவைக்கு காரணம்!
தேனி எவரெஸ்ட் ஓட்டலின் மற்றொரு சிறப்பு அம்சம், இரவு, 12:00 மணி வரை, சூடான சாப்பாடு கிடைக்கும். பகல், 11:00 மணி முதல், 6:00 மணி வரை, சாப்பாட்டிற்கு, துவரம் பருப்பு சாம்பாரும், இரவு சாப்பிடுவோருக்கு பாசிப்பருப்பு சாம்பாரும் பரிமாறுகின்றனர்.
எவரெஸ்ட் ஓட்டல், அக்., 1946ல் துவங்கப்பட்டது. இதன் உரிமையாளர் ராஜேந்திரன் கூறும் போது, 'தேனி மாவட்டத்திற்கு வரும் கேரள மக்கள், எங்கள் ஓட்டல் சாப்பாட்டையும், மீன் குழம்பையும் விரும்பி சுவைக்கின்றனர்; இவர்களுக்காகவே இரவு, 12:00 மணி வரை சாப்பாடு தயாரிக்கிறோம்...' என்கிறார்.
மேலும், 'சமையல் பணியாளர்களின் உழைப்பே, உணவின் தரத்தை உறுதி செய்யும். அதனால், பணியாளர்களுக்கு நல்ல சம்பளம் வழங்குகிறோம். எங்கள் ஓட்டல் உணவின் தரத்திற்கு இதுவும் முக்கிய காரணம்...' என்றார்.
எம்.பாண்டியராஜ்

