PUBLISHED ON : அக் 11, 2020

''ஜானகி, உள்ளே என்னம்மா செய்யற... வந்து, கதவைத் தாழ் போட்டுக்க. நான் கிளம்பறேன்,'' குரல் கொடுத்தார், வாசுதேவன்.
தாங்கி, தாங்கி நடந்த கால் வலியின் தன்மை கண்களில் தெரிய, மெல்ல நடந்து வந்தாள், ஜானகி.
''வலி அதிகமாக இருக்கா, ஜானகி,'' வாஞ்சையுடன் மனைவியை பார்த்தார்.
''எப்போதும் போல் தான். இனி தான், தைலம் தடவி, வெந்நீர் ஒத்தடம் தரணும். உங்களுக்கு, முதுகு வலின்னு சொன்னீங்களே... இன்னைக்கு ஒரு நாள், 'லீவ்' போட்டால் என்ன... ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்குப் போகணுமா,'' ஆதங்கத்துடன் கேட்டாள், ஜானகி.
''என்னம்மா செய்யறது, 15 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வருது. இரண்டு பேருக்கும் குடும்பம் நடத்த போதலையே... மருந்து, மாத்திரை, டாக்டர் செலவே, மாசம் கணிசமான தொகை வந்துருது...
''கோவில், குளம்ன்னு போக ஆசைப்படறவ நீ... உன்னை, நாலு மாசத்துக்கு ஒருமுறை, வெளியூர் கோவிலுக்கு கூட்டிட்டுப் போக முடியலை... இரண்டு மாசம் சேர்த்து வச்சா, மூணாவது மாசம் ஏதாவது செலவு வந்துடுது. இதையெல்லாம் யோசித்து தான், டவுனில் இருக்கிற கடையில் கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்ந்தேன். மாசம், 6,000 தர்றாங்க.
''நமக்கு ஒரு விதத்தில் உதவியா இருக்கு. உடம்பில் தெம்பு இருக்கிற வரை உழைக்கப் போறேன். எனக்கு, முதுகு வலி பரவாயில்லை. நீ, அதையே நினைச்சுட்டு இருக்காம, சாப்பிட்டு ஓய்வு எடு,'' என, கிளம்பினார்.
கட்டிலில் உட்கார்ந்தாள், ஜானகி.
திருமணமான திலிருந்து பொறுப்புடன் குடும்பத்தை நடத்தியவர், வாசுதேவன். தீனதயாளன், குணசீலன் இரண்டு பிள்ளைகள். அப்பாவின் பொறுப்புணர்ந்து, பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து, அவர்களுக்கான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அவர்களும் மனைவி, குழந்தைகள் என, 'செட்டில்' ஆகி விட்டனர். ஒருவன் சேலத்திலும், மற்றொருவன் சென்னையிலும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க, ஓய்வு பெற்ற பின், பூர்வீக ஊரான திருவையாறுக்கு வந்து விட்டார், வாசுதேவன்.
பிள்ளைகளிடம், எப்போதுமே எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை, வாசுதேவனுக்கு.
வரும் ஓய்வூதியம், குடும்பம் நடத்த போதவில்லை. இரண்டு பிள்ளைகளும் ஏதாவது உதவக் கூடாதா... இது, ஏன் அவர்களுக்கு புரியவில்லை.
ஒருமுறை பெரியவனிடம், போனில், 'தீனா, கடைத் தெருவில் கணக்கெழுதும் வேலைக்கு அப்பா போறாருப்பா...' என்றாள்.
'அதனாலென்னம்மா... நல்லது தானே... வீட்டில் சும்மா இருப்பதற்கு போயிட்டு வரட்டுமே... பொழுது போகும் இல்லையா...'
'பொழுது போறதுக்கு இல்லைப்பா... தேவைக்காக தான் போக வேண்டியிருக்கு...' என, சொல்ல வந்ததை, மனதுக்குள் விழுங்கினாள்.
வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள், ஜானகி.
பழப்பையுடன் காரிலிருந்து இறங்கினான், தீனதயாளன்.
''வாப்பா தீனா... வர்றதா போன் பண்ணலையே.''
''ஆபீஸ் வேலையா, தஞ்சாவூர் வந்தேன்... அப்படியே உன்னையும், அப்பாவையும் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்மா.''
அவன் தந்த பையை வாங்கி மேஜையில் வைத்தவள், ''சொல்லுப்பா... காயத்ரி, பிள்ளைகள் எப்படி இருக்காங்க... என்ன சாப்பிடற, நீ வர்றது தெரிஞ்சா, உனக்கு பிடிச்ச மீன் குழம்பு செய்திருப்பேன்... மிளகு குழம்பும், காய்கறி கூட்டும் தான் இருக்கு... அப்பளம் வறுத்து, சாப்பாடு வைக்கட்டுமா?''
''வேண்டாம்மா... 'கம்பெனி மீட்டிங்'ல பிரியாணி, மட்டன்னு சாப்பிட்டு தான் வந்தேன். வயிறு நிரம்பியிருக்கு. ஆமாம், அப்பா எப்ப வருவாரு?''
''நாலு மணிக்கு வந்துடுவாருப்பா... நீ வந்துருக்கேன்னு போன் பண்ணட்டுமா?''
''இல்லம்மா... அவர் வர்றபடி வரட்டும், நீ சாப்பிட்டியாம்மா?''
''ஆச்சுப்பா... உங்கப்பா, பக்கத்து மெஸ்சில் சாம்பார் சாதம், தயிர் சாதம்ன்னு ஏதாவது வாங்கி வயிறை நிறைச்சுக்கிட்டு, ராத்திரி தான் வீட்டில் சாப்பிடுவாரு.''
''சரிம்மா, நான் கொஞ்ச நேரம் படுக்கறேன். அப்பா வந்ததும், எழுப்பு. அவரைப் பார்த்துட்டு தான் கிளம்பணும்.''
''ஏன்ப்பா இன்னைக்கு இருந்துட்டு போகக் கூடாதா?''
''இல்லம்மா, எனக்கு நிறைய வேலை இருக்கு.''
மகனுக்குப் பிடித்த வாழைக்காய் பஜ்ஜி, தேங்காய் சட்னி அரைத்து வைத்தாள்.
''என்னங்க... தீனா வந்திருக்கான்.''
''வாசலில் கார் நிற்குதே பார்த்தேன்... எங்கே அவன்?''
''துாங்கறான்... நீங்க வந்ததும் எழுப்பச் சொன்னான்.''
இரண்டு பேருக்கும் தட்டில் பஜ்ஜியும், தேங்காய் சட்னியும் வைத்து, அவர்கள் அருகில் உட்கார்ந்தாள்.
''சாயந்திரம் டிபன் எல்லாம் கிடையாது, தீனா. நீ வந்ததால் ஸ்பெஷல். பிள்ளைகள் எப்படி இருக்காங்க, நல்லா படிக்கிறாங்களா,'' என்றார், வாசுதேவன்.
''அதையேன்பா கேட்கறீங்க, நானும், உங்க மருமகளும் காலில் சக்கரம் கட்டாத குறையா ஓடறோம்... இரண்டு பேரும் வேலைக்குப் போயிட்டு, பிள்ளைகளையும் கவனிச்சுக்கிட்டு, 'டியூஷன்' அது, இதுன்னு அவங்க பின்னாடி ஓடி, கார் லோன், படிப்பு செலவுன்னு எல்லாத்தையும் சமாளிச்சு, சரியா இருக்குப்பா... வாங்கற சம்பளம் எங்கே போகுதுன்னு தெரியலை...
நீங்க உங்க கடமைகளை முடிச்சுட்டு நிம்மதியா இருக்கீங்க.''
''இதுதான்பா வாழ்க்கை... பிள்ளைகளை ஆளாக்குறது பெத்தவங்க கடமை இல்லையா?''
''ஆமாம்பா... நீங்க சொல்றது வாஸ்தவம் தான். காயத்ரியும், உங்க பேத்தி பெயரில், 'டிபாசிட்' போட்டுட்டு வர்றா... நாளைக்கு அவ திருமணத்துக்கு உதவும் இல்லையா... சரிப்பா, நீங்களும், அம்மாவும் உடம்பைப் பார்த்துக்குங்க... 'லீவு' கிடைச்சால் பிள்ளைகளைக் கூட்டிட்டு வரேன்,''
என, காரை, 'ஸ்டார்ட்' செய்து கிளம்பினான்.
''என்ன ஜானகி... மகனைப் பார்த்த சந்தோஷம் முகத்தில் தெரியலையே, ஏன் வாட்டமா இருக்கே?''
''அவன் குடும்பத்தைப் பத்திப் பேசி, கவலைப்பட்டானே தவிர, நம்மைப் பத்தி ஏதும் விசாரித்தானா... வயசான காலத்தில், ஏன்ப்பா வேலைக்குப் போறீங்க... ஓய்வூதியப் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கா... ஒரு வார்த்தை கேட்கலையே,'' என்றாள், ஆதங்கத்துடன்.
''இந்த வருத்தம் நமக்கு தேவையில்லாதது, ஜானகி. நல்லா சம்பாதித்து குடும்பத்தை நிர்வகித்தவன் தான், நான். இப்ப, காய்ப்பு ஓய்ந்த மரமாக நிற்கிறேன். காய்த்துக் குலுங்கிய மரத்தில், இப்ப காலம்
தப்பி, ஒன்று, இரண்டு பழங்கள் தான் காய்க்குது. அது நமக்கு போதுமானதாக இல்லை...
''அதை இட்டு நிரப்பதான் இந்த கணக்கெழுதற வேலை. என்னால் சமாளிக்க முடியும். எதையும் நேர்மறையாக சிந்திப்பதில் தான், வாழ்க்கையின் சந்தோஷமே இருக்கு. நாம எப்படி நம் பிள்ளைகளுக்காக ஓடி, ஓடி சம்பாதித்தோமோ... அதை அவங்க செய்யறாங்க; குடும்பத்தை நல்லபடியாக நிர்வகிக்கிறாங்க...
''அதை நினைச்சு சந்தோஷப்படு... யார்கிட்டேயும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்துட்டு போவோம், ஜானகி. உனக்கு, என்னைக்கும் நான் இருக்கேன்,'' என்றார், வாசுதேவன்.
கண்ணீர் ததும்ப, ஜானகி, கணவனைப் பார்க்க, அவள் கண்களைத் துடைத்து, ''போம்மா, போய் உன் மகன் வாங்கிட்டு வந்த பழங்களை எடுத்துட்டு வா, சாப்பிடுவோம்.''
கணவனை நினைத்து பெருமிதப் பட்டாள், ஜானகி.
பிரவீணா