தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/டெஹ்லி பொங்கா!

டெஹ்லி பொங்கா!

டெஹ்லி பொங்கா!


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொங்கல் திருநாளை ஒட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துகிறோம். அதுபோல், இன்னும் சில மாநிலங்களிலும் வித்தியாசமான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. பொங்கல் விழாவின் பெயரும் இங்கு மாறுபடுகிறது.

மேஷம், ரிஷபம் வரிசையில் மகரம் என்பது, 10வது ராசி. சூரிய பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் இருப்பார். சித்திரை மாதம், முதல் ராசியான மேஷ ராசியில் அவர் இருப்பதால், அம்மாதத்தின் முதல் நாளை சித்திரை விசு என்கிறோம். இதேபோல், 10வது ராசியான மகரத்திற்கு வரும்போது, அதை மகர சங்கராந்தி என்கின்றனர்.

சங்கராந்தி என்றால், 'ராசியுடன் இணைதல்' என, பொருள். தை மாதத்தில் இந்த இணைப்பு நடக்கும். மற்ற சங்கராந்திகளை விட, மகர சங்கராந்திக்கு முக்கியத்துவம் தர காரணம் உண்டு.

இந்த நாளில் தான் சூரியன், தன் வட திசை பயணத்தை துவங்குகிறது. உத்ராயணம் என இதைச் சொல்வர்.

உத்ராயணம் என்பது, தட்சிணாயணம் எனும் தென் திசை பயணத்தை விட உயர்ந்தது. காரணம், சூரியனின் வட திசை பயண கால துவக்கமான தை முதல் ஆனி வரை, தொடர்ந்து சுப மாதங்களாக இருக்கும்.

இந்த ஆறு மாதங்களிலும் திருமணம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்யலாம்.

மகர சங்கராந்தியை வடமாநில மக்கள் கங்கை, யமுனை ஆகிய புண்ணிய நதிகளில் நீராடி, பாவம் தீர்க்கும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் பட்டம் பறக்க விடுவது, அவர்களது வழக்கம். வீர விளையாட்டுகளும் நடக்கும்.

தமிழகத்தில் பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டு நடத்துவது போல, அசாமில், 'டெஹ்லி பொங்கா' எனும் பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவர்.

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடக்கும் உறியடி நிகழ்ச்சி போல, பானைகளை உடைக்கும் நிகழ்ச்சி இது. எருமை சண்டையும் நடத்துவர். இவ்விழாவுக்கு, 'மாஹ் பிஹு' என்று பெயர். இதற்கு, 'அறுவடைத் திருநாள்' என, பொருள்.

கோவாவில், பொங்கலை, 'சங்க்ராத்' என, அழைப்பர். புதிதாக திருமணமான பெண்கள், சுங்கத் எனப்படும் ஐந்து களிமண் பானைகளில் கருப்பு நுாலை சுற்றி அலங்கரிப்பர். அவற்றில் தானியங்களை நிரப்பி, வெற்றிலை, பாக்கு வைத்து சூரியனுக்கு படைப்பர்.

சில மாநிலங்களில் கட்டைகளை அடுக்கி நெருப்பு வைத்து, அதை சுற்றி அமர்ந்து குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவர்.

உத்தர பிரதேசத்தில், இந்நாளில் தீபமேற்றி பூஜை செய்வர். தமிழகத்தில், வெட்ட வெளியில் பொங்கலிட்டு மகிழ்வர்.

மாநிலத்துக்கு மாநிலம் வழக்கங்களில் மாறுபட்டாலும், இந்தியா முழுவதும் கொண்டாடும் பண்டிகையாக பொங்கல் உள்ளது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us