தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண் என்றால் இளக்காரமா?

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், எங்கள் பகுதி மாவட்ட கவுன்சிலராக, வெற்றி பெற்றிருந்தாள், என் தோழி. அவளை வீட்டில் சந்தித்து, என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து, பணி சிறக்க வாழ்த்தினேன்.

'நீ நினைப்பது போல, நான் எந்த பணியையும் சுதந்திரமாக செய்துவிட முடியாது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், பெயருக்காக என்னை நிறுத்தி, வெற்றிபெற வைத்துள்ளார், கணவர். ஏதாவது கையெழுத்து போட வேண்டுமென்றால், என்னைப் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் செய்வது, அவரே தான்.

'கமிஷனுக்காக கணவர் செய்யும் காரியங்களில், எனக்கு உடன்பாடே இல்லை. அதேபோல், அவரை எதிர்த்து செயல்படவும் இயலவில்லை. நான் மட்டுமல்ல, இதுபோன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பெரும்பான்மையான பெண்களின் நிலையும் இது தான்.

'ஆணாதிக்கத்தோடு சர்வாதிகாரத்துடனும் செயல்படும் கணவர்களை மீறி, மனைவியரால் எதுவுமே செய்ய முடிவதில்லை...' என வருந்தி, கண் கலங்கினாள். இத்தனைக்கும், முதுகலை வரை படித்தவள், அவள். கல்லுாரியில் பயிலும்போது, மாணவர் பேரவை தலைவராக திறம்பட செயல்பட்டவள்.

என்ன தான் சட்டங்கள் வழி செய்து, பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தந்தாலும், அவற்றை ஆணாதிக்க முட்டுக்கட்டை தடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலை மாறணும்...

- கே.கல்யாணி, விக்கிரவாண்டி.

வாசிப்பை வளர்க்கும், குடியிருப்பு!

சமீபத்தில், மாநகர் ஒன்றின் குடியிருப்பில் வசித்து வரும் உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றேன். நான் சென்ற நேரம், அக்குடியிருப்பின் செயலர் பொறுப்பில், குடியிருப்பு வளாகத்திலேயே புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நகரிலுள்ள பல பதிப்பகங்களின் கிளைகளிலிருந்து வந்திருந்த, பல்வேறு வகையிலான புத்தகங்களை, காட்சிக்கு வைத்து, விற்பனை செய்து கொண்டிருந்தனர். வயதான பெரியவர்களிலிருந்து, சின்னஞ்சிறு குழந்தைகள் வரை, குடியிருப்பிலிருந்த பலரும், தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை, மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்வதைக் கவனித்தேன்.

இதுபற்றி, உறவினரிடம் விசாரித்ததில், 'இக்குடியிருப்பின் செயலராக ஓய்வுபெற்ற கல்லுாரி பேராசிரியர், இருக்கிறார். வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, குடியிருப்பு வளாகத்திலேயே, புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்கிறார்.

'அவரின் இந்த நல்ல முயற்சியால், குடியிருப்பிலுள்ள அனைவருமே வாசிப்புப் பழக்கத்தைத் தொடர்ந்து வருகிறோம்...' என்றார். மற்ற குடியிருப்புவாசிகளும், அவ்வப்போது புத்தகக் கண்காட்சி நடத்தி, வாசிப்பை வளர்த்தெடுக்க உதவலாமே!

- ஆர்.ஜெயசங்கரன், வானுார்.

மண் பானை பொங்கல்!

மண் பானை மற்றும் பித்தளை பானைகளில் பொங்கலிடுவது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். தமிழகத்தில், பெரும்பாலும், மண் பானைகளிலேயே பொங்கலிடப்படுகிறது. பொங்கல் பானை வாங்கும்போது, அதன் மூன்று பக்கங்களிலும் விரல்களால் சுண்டிப் பார்த்து வாங்க வேண்டும். நாம் சுண்டும்போது, மூன்று பக்கமும் ஒரே மாதிரியான ஒலி வரவேண்டும்.

சில பானைகளில் ஒலியால் மாற்றத்தை அறிய முடியாத நிலை இருக்கலாம். அப்போது, பானையின் உள்புறமாக கூர்ந்து பார்த்து ஓட்டை உள்ளதா என, பரிசோதித்து கொள்ள வேண்டும். பொங்கல் பானையில் தண்ணீர் விட்டவுடன், நீர் கசிவு ஏற்பட்டால், பயப்பட வேண்டாம். மண்ணின் தன்மை மற்றும் அது வேக வைக்கப்பட்ட நிலை காரணமாக இருக்கும்.

சீதனமாக கொடுக்கப்படும் பானைகளில் கரும்பு, மஞ்சள், கோல ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். பொங்கலுக்கு மண் பானை, மண் சட்டி, மண் அடுப்பு என, மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி, மண்பாண்ட தொழிலை ஆதரிப்போம்; சுற்றுச்சூழலை காப்போம்.

- ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us