
மருத்துவமனையை விட்டு வெளிவந்த, கஸ்துாரியின் முகத்தில், ஏக்கமும், கவலையும் ஒருசேர, அவளை சோர்வுறச் செய்திருந்தது.
இடுப்பிலிருந்து நழுவிய தன், 10 வயது மகன் கவினேஷை, இழுத்துப் பிடித்து இறுக்கிக் கொண்டாள். எச்சில் வழிய தன் தோள் மீது தலை சாய்ந்து கொண்டிருந்தவனைப் பார்க்கப் பார்க்க, மனதில் பாரம் கூடியது.எதிரே சென்ற ஆட்டோவை அழைத்தாள். அருகில் வந்த ஆட்டோக்காரன், ''எங்கம்மா போகணும்?'' கவினேஷை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டே அவளிடம் வினவினான். அவன் முகத்தில் பரவிய ஏளனத்தை ஜீரணிக்க இயலாமல், கண்களை தாழ்த்திக் கொண்டாள்.
இடத்தைச் சொல்லி ஆட்டோவின் உள்ளே கவினேஷை அமர வைக்க, துள்ளிக் கதறினான். அவளது முந்தானைப் பிடித்து இழுத்து விநோத சத்தம் எழுப்ப, ஆட்டோக்காரன் கொஞ்சம் பீதி அடைந்து, பயத்துடன் பார்த்தான்.''கவி... அம்மாவும் கூட உட்காந்துக்கறேன். இரு இரு,'' இழுத்த முந்தானையை சரி செய்து, அருகில் அமர, அவளை ஒட்டிக்கொண்டு தலை சாய்ந்தான், கவி. ஆட்டோவை கிளப்பியவன், அதற்கு மேல் பொறுமை தாளாது, ''பையனுக்கு ஒடம்பு சரியில்லையா?'' என்றான்.
''ம்ம்ம்...'' பழக்கப்பட்ட கேள்வியால் சுவாரசியமின்றி தலை அசைத்தாள்.வீட்டை ஆட்டோ அடைய, கவியை ஒரு கையால் அணைத்தவாறு இறங்கினாள், கஸ்துாரி.வீட்டிற்குள் நுழைந்தவள், அவனுக்கென அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு அறையில் அமர வைத்து, அடுத்த வேலைகளை பார்க்கச் சென்றாள்.
தனக்கு பிடித்த அந்த வெள்ளை நிற யானை பொம்மையை, தரையில் தேய்த்து தேய்த்து, விளையாட ஆரம்பித்தான், கவினேஷ்.சமையல் வேலைகளை முடித்து, அவனுக்கு, கிண்ணத்தில் சாதத்தை பிசைந்து எடுத்து வந்தாள். ஒருவாய் அவனுக்கு ஊட்ட, குதப்பியவன் எச்சிலுடன் துப்பினான்.'எனக்கு மட்டும் ஏன் இறைவன் இப்படி ஒரு வரத்தை அளித்தான்...' என, நினைத்தாள். பெருமூச்சுடன் கீழே கொட்டிய சாதத்தை சுத்தம் செய்து, சேலை தலைப்பால் கவியின் முகத்தை அழுந்தத் துடைத்தாள்.
மனம் பின்னோக்கி நகர்ந்தது.ஐந்து வயது கவினேஷை, கதறியபடி துாக்கிக் கொண்டு, மருத்துவரிடம் ஓடினாள், கஸ்துாரி. பின் தொடர்ந்தான், முகேஷ்.'டாக்டர்... நேத்திலேர்ந்து குழந்தை கண்ணே திறக்கல. ராத்திரிலேர்ந்து ஒடம்பெல்லாம் அனலா கொதிக்குது. ஒரு வாரமா சரியா சாப்பிடல, துாங்கறது இல்ல. ரெண்டு நாளா சாப்பிட்டதெல்லாம், வாந்தி எடுக்கறான். எனக்கு பயமா இருக்கு டாக்டர், ப்ளீஸ்...' கைகுவித்து நின்றவளை, ஆசுவாசப்படுத்தினார்.
கவினேஷின் கண்களை சோதித்தார், டாக்டர். கண்ணெல்லாம் மஞ்சள் பூத்துக் கிடந்தது. உடம்பில் மெல்லிய மஞ்சள் படலம் பரவிக் கிடக்க, அவன் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையில் மென்காவி படர்ந்திருந்தது.
'உங்க குழந்தைக்கு, மஞ்சள் காமாலை உருவாகி, கொஞ்சம் தீவிரமா இருக்கு. உடனே, 'அட்மிட்' பண்ணிடுங்க...' என்று கூற, இருவரும் அதிர்ந்து போயினர்.அந்த உயர் ரக ஆஸ்பத்திரியில், லட்சங்களுக்கு குறையாத முன் பணம் செலுத்தி, கவினேஷை, 'அட்மிட்' செய்தனர்.
இரவு பகல் பாராமல் கண் விழித்து, அவனை கவனித்துக் கொண்டாள், கஸ்துாரி. ஒரு வாரத்திற்கு பின், மெதுவாக கண் விழித்தான். ஆனால், அதன்பின் அவனது உலகம் சுருங்கிப் போனது.வெளியுலகைக் காண விரும்பாது அறைக்குள்ளே அடைந்து கிடந்தான். பேசுவதைப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாது, பேச்சுத் திறனற்று, சிந்திக்கும் திறனும் கொஞ்சம் கொஞ்சமாய் மங்கியது. குழந்தையானவன் அப்படியே அந்நிலையில் ஐக்கியமாகிப் போனான்.
புதிய மனிதர்களைக் கண்டால் பயம் கொள்வதும், தனக்குத் தானே சங்கேத பாஷையில் பேசியபடி, ஓர் தனி உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தான். நாட்கள் செல்ல செல்ல, அவன் உடல் மற்றும் மன நிலை மாற்றத்தை உணர ஆரம்பித்த கஸ்துாரிக்கு, சந்தேகத்துடன் பயம் அடிமனதை பிராண்டியது. இரவு உறக்கமின்றி, கண் இமைக்காமல், மோட்டு வளையத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள், கஸ்துாரி.அருகில் படுத்திருந்த முகேஷ் புரண்டு திரும்ப, கண்களில் பொங்கிய நீருடன் கஸ்துாரி படுத்திருப்பதைக் கண்டு அதிர்ந்தான்.
'கஸ்துா, என்னாச்சுமா... எதுக்கு அழற...' புரியாமல் அவன் கேட்க, மெல்ல அவன் புறம் புரண்டு, அவன் மார்பில் தலை சாய்ந்தாள்.'எனக்கு பயமா இருக்குங்க... கவினேஷுக்கு எதோ வியாதி இருக்குமோன்னு பயமா இருக்குங்க!'
'சே... அதெல்லாம் ஒண்ணுமில்ல. தவமிருந்து பெத்த புள்ள, அவனுக்கு ஒண்ணுமில்ல... நல்லாத்தான இருக்கான்!''இல்லைங்க... இந்த வயசுக் குழந்தைங்க மாதிரி அவன் இல்லையே...''கஸ்துா, இது சின்ன விஷயம். அவனுக்கு அஞ்சு முடிஞ்சு ஆறுதான ஆகப் போகுது... கொஞ்சம் கொஞ்சமாத்தான் பழக்கம் வரும். இதுக்கெல்லாம் போய் அழுதுக்கிட்டு...' சமாதானம் செய்தான், முகேஷ்.
'இல்லைங்க... இது சின்ன விஷயமா எனக்கு படல. சீரியஸான விஷயமாத் தோணுது. ப்ளீஸ்... டாக்டர்ட்ட, 'செக்' பண்ணிடலாம்ங்க...''ஆஸ்பத்திரி, டாக்டர்னு போனா, அது இதுன்னு எதாவது பொய்யச் சொல்லி காசப் புடுங்குவானுங்க...' சலித்துக் கொண்டான்.
'எனக்காக ப்ளீஸ்ங்க...' அவள் கெஞ்ச, அரை மனதுடன் ஒப்புக் கொண்டான்.வார இறுதியில் -அந்த ஹாஸ்பிடலில் மருத்துவரைக் காண சென்றனர். 'உட்காருங்க... என்ன பிராப்ளம்?' வினவினார், டாக்டர்.
கஸ்துாரி விஷயம் கூற, கவினேஷிடம், 'உங்க பேரு கவினேஷ்தான... இங்க வாங்க, இந்த சீட்ல ஒக்காருங்க...' சிரித்த முகத்துடன் டாக்டர் அழைக்க, பயந்து, கஸ்துாரியிடம் ஒட்டிக் கொண்டான்.
'இப்படித்தான் டாக்டர்... வெளியாளைக் கண்டா பயந்து கத்தறான். யாரோடையும் ஒட்ட மாட்டேங்கறான். சரியா பேசத் தெரியல, சாப்பிடத் தெரியல...' அவள் கூறிக் கொண்டே போக, அவளை முறைத்து, கையை பிடித்து அழுத்தினான், முகேஷ்.
'அதெல்லாம் ஒண்ணுமில்ல டாக்டர்... புது ஆளக் கண்டா பயம். அவ்ளோதான்...' சிரித்து மழுப்பினான், முகேஷ்.
அவனைக் கூர்மையாக பார்த்த டாக்டர், 'மிஸ்டர் முகேஷ்... டாக்டர்கிட்ட பொய் சொல்லக் கூடாது. வந்ததுலேர்ந்து அவனோட நடவடிக்கைகளை பார்த்துகிட்டிருக்கேன். சிஸ்டர், இந்த பையன கொஞ்சம் பிடிச்சுக்கோங்க, அம்மா நீங்களும்...' நர்சும், கஸ்துாரியும், கவியை பிடித்துக் கொண்டனர். அருகில் வந்து ஸ்டெதஸ்கோப்பை மார்பில் வைக்க, கோபமும், அழுகையும் ஒருசேர விநோத சத்தம் எழுப்பி, வெறியுடன் கை, கால்களை உதைக்க ஆரம்பித்தான், கவினேஷ்.
'மிஸ்டர் முகேஷ்... உங்க பையனுக்கு மூளை வளர்ச்சியில குறைபாடு இருக்கும்ன்னு தோணுது... ரெண்டு மூணு டெஸ்ட் எடுத்தாத்தான் உறுதி செய்ய முடியும். இந்த டெஸ்ட்லாம் எடுத்துட்டு, அடுத்த வாரம், 'ரிப்போர்ட்' எடுத்து வாங்க. 'ஹெல்த் டாப்லெட்ஸ்' எழுதி இருக்கேன்...' என கூறியபடி, மருந்து சீட்டை நீட்டினார்.
கொஞ்சம் கோபத்துடன் அதைப் பெற்று, வெளியேறினான், முகேஷ்.'பார்த்தியா, நான் சொல்லல... ஒண்ணுமில்லாததுக்கு ஆயிரத்தெட்டு டெஸ்ட். சே... தண்ட செலவு...' அவளை முறைத்தான்.'ஏங்க... அவரு ஸ்பெஷலிஸ்ட்டுங்க... சும்மாவா சொல்வாரு... கவிக்கு எதோ ப்ராப்ளம் இருக்குங்க...'முகத்தை திருப்பிக் கொண்டு நடந்தான்.
மறுவாரம், டாக்டர் முன் அமர்ந்திருந்தனர், இருவரும். வாயில் எச்சில் வடிய கலவரக் கண்களுடன் கஸ்துாரியின் மடியில் குறுகி அமர்ந்திருந்தான், கவினேஷ்.
'மிஸ்டர் முகேஷ், 'ரிப்போர்ட்' எல்லாம் பார்த்துட்டேன். நான் சொல்லப் போறதக் கேட்டு கலவரமோ, பயமோ அடையாதீங்க. உங்க பையன், 'ஆட்டிசம்'கற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கான்...
'அவங்களால் தன்னிச்சையா சிந்தித்து, செயல்பட முடியாது. சொல்றத புரிஞ்சுக்க முடியாது. முறையா பேச முடியாது...''எப்படி டாக்டர், இந்த நோய் எம் பையனுக்கு வந்தது...' அதிர்ச்சி மீளாமல் கேட்டாள், கஸ்துாரி.
'பல காரணங்கள் இருக்கும்மா... இதுதான்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது. மூளை அமைப்புல இருக்கற மாறுபாடு, மூளை சுரப்பிகளின் அசாதாரணமான நிலை, மஞ்சள் காமாலையில பாதிப்படைஞ்ச குழந்தைகளுக்கு, மூளையில் ஏற்படும் பாதிப்பு, மரபியல் ரீதியான குறைபாடு, தாமத திருமணம், உணவு முறைன்னு, இப்படி பல காரணங்கள் இருக்கு...'
'அப்போ இத குணப்படுத்த முடியாதா டாக்டர்?' கவினேஷை கட்டிக் கொண்டாள், கஸ்துாரி.'மருந்துகளால் மட்டும் குணப்படுத்த முடியாது. ஆரம்ப நிலைன்னா பயிற்சி மூலமா குணப்படுத்தலாம். தீவிர பாதிப்புன்னா கஷ்டம் தான். இப்படிப்பட்ட குழந்தைகள தனிமையில விடக்கூடாது. எப்போதும் கூடவே இருந்து பேச்சு குடுத்துகிட்டே இருக்கணும்.
'அதுபோக, 'ஸ்பீச் தெரபி, பிகேவியர் தெரபி, பிசியோ தெரபி' ரெகுலரா குடுத்துட்டே வந்தா, ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரலாம். ஆனா, இத முழுமையா குணப்படுத்த முடியாதும்மா...'
டாக்டர் கூறக் கூற, ஸ்தம்பித்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான், முகேஷ். கண்களில் மெல்ல நீர் எட்டி பார்த்தது.
'அப்போ... என் பையன் மத்த பசங்கள மாதிரி நார்மலா வளர மாட்டானா, டாக்டர்?''சாரி, மிஸ்டர் முகேஷ். பயிற்சிகளால முயற்சிக்கலாம். ஆனா, அவனால தன்னிச்சையா செயல்பட முடியாது. சுத்தி இருக்கற நாமதான் அவன அரவணைச்சு போகணும். வாழ்க்கை முழுக்க, எப்பவும் அவனுக்கு ஒரு துணை வேணும்...' என்றார். குபுக்கென கண்ணீர் பொங்க குலுங்கியவள், 'இருப்பேன் டாக்டர்... சாகறவர என் குழந்தைக்கு பாதுகாப்பா நான் இருப்பேன்...' கவினேஷை இறுக்கி அணைத்து, தலையில் முத்தம் பதித்தாள், கஸ்துாரி.
கண்களில் நீர் பொங்க பழைய நினைவுகளிலிருந்து மெல்ல வெளிவந்தாள், கஸ்துாரி.இரவு, களைப்புடன் வீட்டை அடைந்தான், முகேஷ்.கஸ்துாரியின் மடியில் கவினேஷ் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, மெல்ல அவளருகில் அமர்ந்து, ''கவி சாப்டானா கஸ்துா... டாக்டர்ட்ட போயிட்டு வந்தியா... எதாவது முன்னேற்றம் இருக்குன்னு சொல்றாங்களா,'' என, கலக்கத்துடன் கேட்டான்.
''ஹும்... கொஞ்சம் கொஞ்சம் சொல்லித்தரத பேசறான். ஆனா, முழுசா பேச வரலைங்க.'' ''கவலப்படாத கஸ்துா... கடவுள் நம்பள கைவிட மாட்டான். கண்டிப்பா கவி, ஒரு நாளைக்கு நல்லாயிடுவான். மனச தளர விடாத.''
''நா மனசு தளரலைங்க... வெளில பார்க்கறவங்க பார்வையும், கேலி, சிரிப்பும்தான் என்ன ரொம்ப காயப்படுத்துது.'' மெல்ல அழுதவளை தேற்ற இயலாது, அணைத்துக் கொண்டான்.
''ஹும்... நமக்கு கெடச்ச வரம் அவ்வளவுதான்னு நெனச்சுக்க வேண்டியதுதான். சரி வாங்க, நேரமாச்சு சாப்பிடலாம்,'' கவினேஷை படுக்கையில் கிடத்தி, எழுந்தாள்.
படுக்கையில் இருவரும் படுத்திருக்க, தீவிர சிந்தனையில் கண் விழித்தான், முகேஷ். கேட்கலாமா வேண்டாமா என்ற தயக்கம் அவனை உறங்கவிடாமல் செய்தது. அவன் புரண்டு புரண்டு படுப்பதைக் கண்ட கஸ்துாரி, எழுந்து அமர்ந்தாள்.
''என்னங்க, துாக்கம் வரலையா?''''ஒண்ணுமில்ல கஸ்துா... அது... நான் ஒண்ணு சொன்னா நீ கேட்பியா.''
''என்ன விஷயம்?'' குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.''நாம இன்னொரு குழந்தை பெத்துக்கலாமா?'' விலகாத கண்களுடன் அவளை நோக்க, அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.
''என்ன பேசறீங்க... கவி இப்படி இருக்கற நேரத்துல, இன்னொரு குழந்தைய பெத்துக்கலாமான்னு கேக்கறீங்க... உங்க மனசு என்ன கல்லாயிருச்சா... கவிய முழுசா கவனிக்க முடியாம நானே தடுமாறிட்டு இருக்கேன்.
''இன்னொரு குழந்தைய பெத்தா, அத கவனிப்பேனா இல்ல, கவிய கவனிக்கறதா... கவிய அப்படியே விட்டுட சொல்றீங்களா... உங்களுக்கு ஈரமே இல்லியாங்க?''
''கஸ்துா... நான் சொல்றத புரிஞ்சுக்கோ, இன்னொரு குழந்தை பெத்தா கவிக்கு...''
''நிறுத்துங்க... இனிமே இந்த மாதிரி எதுவும் யோசிக்காதீங்க. என் குழந்தைக்கு நான் தான் துணை. வாழ்க்கை முழுக்க அவன கவனிக்கிறது மட்டும் தான். என் உசுரு போற வரை எம் பையன நான் பார்த்துப்பேன்.''
'இல்ல கஸ்துா... நாம போயிட்டா அவனுக்கு...''உணர்ச்சிப் பெருக்குடன் இருக்கும் அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் தவித்தான், முகேஷ்.
நாட்கள் உருண்டோடியது. அன்று, ஒரு சிறுவனுடன் உள்ளே நுழைந்தான், முகேஷ்.
''யாருங்க இது?'' குழப்பத்துடன் கேட்டாள், கஸ்துாரி.
''இவன் பேர் பிரபு. இனிமே இவன் நம் பையன். வயசு ஏழாகுது. அனாதை ஆஸ்ரமத்துல பேசி, தத்து எடுத்துட்டு வந்தேன்.'' கஸ்துாரியின் முகம் கோபத்திலும், வெறுப்பிலும் வெளிறியது.
''உங்களுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு... இப்ப எதுக்கு நமக்கு இன்னொரு பையன்... அப்போ, கவியை தல முழுகிட்டீங்களா... என் பையன் பைத்தியம்ன்னு வெளியில சொல்ல கூசிப் போயி இவன கூட்டிட்டு வந்தீங்களா...''சே... நீங்க இப்படி இருப்பீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைங்க... எனக்கு என் குழந்தைய தவிர, வேற யாரும் புள்ள இல்ல... மொதல்ல இவன கொண்டு போயி விட்டுட்டு வாங்க,'' கத்தினாள்.
முகேஷ் முகம் இறுகியது.
''கஸ்துா... இனிமே இவனும் என் பையன். இவன படிக்க வெச்சு, நல்ல நிலமைக்கு கொண்டு வரவேண்டியது, என் பொறுப்பு. இனி, இவன் இங்கதான் இருப்பான்,'' அவளது பதிலை எதிர்பாராது, கவினேஷின் அறைக்கு பிரபுவை அழைத்துச் சென்றான்.
''பிரபு, இங்க பாரு... இனிமே இதுதான் உன் வீடு. நான் தான் உன்னோட அப்பா. இதோ பார்... இதுதான் உன் அண்ணன். பேரு கவினேஷ். கவி அண்ணனுக்கு உடம்பு கொஞ்சம் சரி இல்ல... அவன் குழந்தை மாதிரி... அவனோட அன்பா இருப்பியா...'' என்றவன், கவியிடம், ''இங்க பாரு உன் தம்பி பிரபு...'' என, அவன் கைகளை பிடித்து, பிரபுவை தொடச் செய்தான்.
கண்கள் ஒளிர வாயைத் திறந்து சத்தமாகச் சிரித்தான், கவி. பிரபுவை தடவித் தடவிப் பார்த்தான்.
''பிரபு கண்ணா... அண்ணன பிடிச்சிருக்கா. அவனோட விளையாடு...'' முகேஷ் சொல்ல, மெல்ல தலையசைத்து, அவனுடன் அமர்ந்து கொண்டான், பிரபு.
வேண்டா வெறுப்பாய் பார்த்தாள், கஸ்துாரி.ஆண்டுகள் வேகமாய் உருண்டோடின.
பிரபு வளர்ந்து, படித்து, வேலையில் அமர்ந்தான். தன் அண்ணன் கவினேஷிடம் அதீத அன்பு காட்டினான்.கொஞ்சம் கொஞ்சமாய் பிரபுவையும் தன் பிள்ளையாய் ஏற்றுக் கொண்டிருந்தாள், கஸ்துாரி. துாய அன்புடன் பிரபு, கவியை கவனித்துக் கொள்வது, அவளை நெகிழச் செய்திருந்தது.
''அம்மா - அப்பா... கவியோட பிறந்த நாளுக்கு பரிசு வாங்கிட்டு வந்திருக்கேன்... எப்படி இருக்கு பாருங்க...'' என, உயர்ரக வாட்சை எடுத்து காண்பித்தான், பிரபு.''ரொம்ப அழகா இருக்குடா பிரபு... எதுக்குடா இப்ப இவ்ளோ விலையில...''
''இது விலை அதிகமில்லை. மை டியர் பிரதர் கவிக்கு இது நல்லா இருக்கும்,'' என்றவன், ''கவி... கவி...'' என, அழைக்க, உள்ளிருந்து நிறைந்த சிரிப்புடன் தட்டுத்தடுமாறி நடந்து வந்தான், கவினேஷ்.
அழகிய இளைஞனாய் வளர்ந்து, தடுமாறி அவன் நடந்து வர, வேகமாக ஓடி, அவன் கைகளை பிடித்து வந்து அமர வைத்தான், பிரபு.
அவன் கையில் கட்டிய வாட்சை பார்த்து, அதீத மகிழ்ச்சியுடன் பிரபுவை கட்டிக் கொண்டான்; வாய் குழற சங்கேத மொழியில், தன் அன்பை வெளிப்படுத்தினான், கவினேஷ்.
''அம்மா... நானும், கவியும், என் நண்பர்களுடன், 'ரெஸ்டாரன்ட்' போறோம். போயிட்டு வந்துட்டு நாம இங்க, 'பார்ட்டி' கொண்டாடலாம். ஓ.கே., கவி, வா கிளம்பலாம். போய்ட்டு வரோம்மா!'' ''பார்த்து ஜாக்கிரதையா கூட்டிட்டு போயிட்டு வா கண்ணு...'' தவிப்புடன் கூறினாள், கஸ்துாரி.
''நான் இருக்கேன், அவன நான் பார்த்துக்கிறேன். நீ கவலப்படாத. பை...'' கண்களை சிமிட்டியபடி சிரித்தான், பிரபு.
நிறைந்த மனதுடன் கண்களில் நீர் வழிய முகேஷை பார்த்தாள், கஸ்துாரி. அவன் பார்வையில் தெரிந்த ஆயிரம் அர்த்தங்களை, அவளால் உணர முடிந்தது.
''பார்த்தியா... அன்னிக்கு பிரபுவ கூட்டிட்டு வரும்போது வேண்டாம்ன்னு வெறுத்தியே... எனக்கு அப்போ வேற வழி தெரியல. ஆனா, எந்த வேறுபாடும் இல்லாம, அவன என் புள்ளையாத்தான் வளர்த்தேன்.
''இனிமே நாம செத்தாலும், கவிக்கு துணையா, பிரபு இருப்பான். வாழ்க்கை முழுக்க துணையா... அந்த நிம்மதியோட நான் கண்ண மூடுவேன்,'' என, நா தழுதழுக்க முகேஷ் கூறியதை முழுவதும் ஆமோதித்து, நெஞ்சம் நெகிழத் தலை அசைத்து, அவன் தோள் சாய்ந்தாள், கஸ்துாரி.
எல். மாதவன்

