
விஜய்க்காக, கதை கேட்கும் தயாரிப்பாளர்!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான, ஆர்.பி.சவுத்ரி, விஜய் நடிப்பில் திருப்பாச்சி, ஜில்லா உட்பட, சில படங்களை தயாரித்திருக்கிறார். இந்நிலையில், தன், 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின், 100வது படத்தை, விஜயை வைத்து, பிரமாண்டமாக தயாரிக்கப் போகிறார்.
அதற்காக கடந்த சில மாதங்களாகவே தென் மாநில சினிமாவைச் சேர்ந்த பல இயக்குனர்களை அழைத்து, விஜய்க்கு பொருத்தமான, 'ஆக் ஷன்' கதையை தேடி வருகிறார். 'இது, என் நிறுவனத்தின், 100வது படம் என்பதால், 100 கதைகள் கேட்டு, அதில் ஒன்றை தேர்வு செய்து தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், ஆர்.பி.சவுத்ரி.
சினிமா பொன்னையா
தலைசுற்ற வைக்கும், சமந்தா!
சினிமாவில் ஒவ்வொரு நடிகையரின் அழகுக்கு பின்னாலும் அவர்களின், 'மேக் - அப் மேன்'கள்தான் இருக்கின்றனர். இதனால், திறமையான, 'மேக் - அப் மேன்'களை முன்னணி நடிகையர் வசப்படுத்தி வைத்துக் கொள்வர்.
இந்த விஷயத்தில், தன், 'மேக் - அப் மேனு'க்கு ஒரு நாளைக்கு, 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறார், சமந்தா. ஆனால், அந்த சம்பளத்தை அவர் தன் பாக்கெட்டில் இருந்து கொடுப்பதில்லை. அதை, அந்தந்த படங்களின் தயாரிப்பாளர் தலையிலேயே கட்டி விடுகிறார்.
'மேக் - அப் மேனுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டுமா... குறைவான சம்பளத்தில் வேறு ஒருவரை ஏற்பாடு செய்கிறேன்...' என்று சொன்னால், அதை அவர் ஏற்பதில்லை.
'என், 'மேக் - அப் மேன்' இல்லையென்றால், இந்த படத்தில் நடிக்க மாட்டேன். என் அழகின் ரகசியமே அந்த, 'மேக் - அப் மேன்' தான் என்பதால், அவருக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க யோசிக்கும் தயாரிப்பாளர்களின் படங்களை தியாகம் செய்ய கூட தயாராக இருக்கிறேன்...' என்கிறார், சமந்தா.
— எலீசா
சூரிக்கு ஏற்பட்ட, அச்சம்!
சினிமாவில், 'சீரியஸ்' காட்சியில் காமெடியனான, புரோட்டா சூரி நடித்தாலும், ரசிகர்கள் சிரிப்பர். இந்நிலையில், விடுதலை படத்தில், 'சீரியஸான' கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், ரசிகர்களை கண்களை கலங்க வைக்கும் காட்சிகள் நிறைய உள்ளதாம். அந்த காட்சிகளில் மிக உருக்கமாக, 'பீல்' பண்ணி நடித்துள்ளாராம், சூரி.
ஆனால், இப்படி தான் நடித்துள்ள காட்சிகள் மீது, தற்போது சூரிக்கு பெரும் பயம் ஏற்பட்டுள்ளது. 'இதற்கு முன், காமெடியனாக, 'சீரியஸாக' நான் நடித்த காட்சிகளை பார்த்து சிரித்த ரசிகர்கள், இந்த படத்தை பார்த்ததும், வழக்கம் போல் சிரிப்பாய் சிரித்து விடுவரோ என்று, இனம்புரியாத கவலையில் உள்ளேன்...' என்கிறார்.
— சி.பொ.,
தனுஷின் புதிய கொள்கை முடிவு!
தன் படங்களில், மலையாள நடிகையர்தான் இடம்பெற வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறார், தனுஷ். தற்போது, 'என் ஒவ்வொரு படங்களிலும், 'கிளுகிளு'ப்பான, 'பாஸ்ட் பீட்' பாடல் இடம்பெற வேண்டும். அந்த பாடலுக்கு நான் அதிரடி நடனம் ஆட வேண்டும்...' என்று, இயக்குனர்களிடத்தில் கேட்டு வருகிறார்.
மேலும், 'இரண்டு முறை தேசிய விருதுகளை பெற்று விட்ட எனக்கு, ரசிகர்களை குஷி படுத்த வேண்டும் என்ற எண்ணம், தற்போது மேலோங்கியுள்ளது. அதனால், கடந்த காலங்களில், 'பர்பாமென்ஸ்'சுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்த நான், இனிமேல், ஆட்டம் பாட்டம் என்று, படத்துக்கு படம் அமர்க்களபடுத்தப் போகிறேன்.
'அது மட்டுமின்றி, கமல் பாணியில், உதட்டு முத்த காட்சிகளையும் இடம் பெற வைத்து, இளவட்ட ரசிகர்களை பதம் பார்க்க போகிறேன். இதை ஒரு புதிய கொள்கை முடிவாக எடுத்துள்ளேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* விக்ரமுடன், கோப்ரா படத்தில் நடித்துள்ள, கேஜிஎப் பட நாயகி, ஸ்ரீநிதி ஷெட்டியும், விஜயுடன், வாரிசு படத்தில் நடித்து வரும், ராஷ்மிகாவும் தமிழில் முன் வரிசை, 'ஹீரோ'களுடன் நடிப்பதற்கு தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால், திரை துறையில் ராஷ்மிகாவுக்கும், ஸ்ரீநிதி ஷெட்டிக்கும், கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
* தனுஷ் நநடித்த, மாரி படத்தில் வில்லனாக நடித்த, பாடகர் விஜய் யேசுதாஸ், அதன் பிறகு, படைவீரன் என்ற படத்தில், 'ஹீரோ'வாக நடித்தார். தற்போது கிளாஸ் என்ற படத்தில், மீண்டும் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை, 10ம் வகுப்பு படிக்கும், சின்மயி நாயர் என்்ற மாணவி இயக்குகிறார்.
அவ்ளோதான்!

