தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தான - தர்மம் தலை காக்கும்!

தான - தர்மம் தலை காக்கும்!

தான - தர்மம் தலை காக்கும்!


PUBLISHED ON : ஜூலை 31, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்வியாளர்களை ஆதரித்து, நாட்டில் அற்புதமான கவிகள் பெருகக் காரணமாக இருந்தவர், காசியை ஆண்ட, மன்னர். அப்படிப்பட்ட மன்னரின் சபையில் இருந்த கவிஞர் ஒருவர், ஒருநாள், கடும் வெயில் நேரத்தில், கிழிந்து போன செருப்புகளை அணிந்து, வீதியில் போய்க் கொண்டிருந்தார்.

அவ்வழியே, கால்களில் செருப்பு இல்லாமல் முதியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். வெயிலின் கொடுமை தாங்காமல் தவித்தபடி வந்த, அந்த முதியவரைப் பார்த்தார், அரச கவி. உடனே, 'பகவானே பகவானே...' என்று புலம்பியபடி, தன் கால்களில் இருந்த செருப்பைக் கழற்றி அந்த முதியவரின் முன் வைத்து, 'ஐயா... இந்தச் செருப்பைப் போட்டுச் செல்லுங்கள்...' என்றார்.

முதியவருக்கு மெய் சிலிர்த்தது. 'தெய்வமே வந்து உதவி செய்வதைப் போல் இருக்கிறது. நன்றாக இருங்கள்...' என்று மனதார வாழ்த்தி, கவிஞர் தந்த செருப்புகளை கால்களில் அணிந்து, நிம்மதியாகச் சென்றார்.

மனத் திருப்தியோடு சற்று துாரம் போயிருப்பார், கவிஞர்.

பட்டத்து யானையை குளிப்பாட்டி, அந்தப் பக்கமாக வந்த யானைப்பாகன், கால்களில் செருப்பில்லாமல் வெயிலில் நடந்து வந்து கொண்டிருந்த அரச கவியைப் பார்த்தார். 'ஐயா... வாருங்கள், யானை மீது ஏறுங்கள்...' என்று, ஏற்றிக் கொண்டார். பட்டத்து யானையில் அமர்ந்தபடி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார், கவிஞர். அப்போது அந்தப் பக்கமாக, தன் ரதத்தில் வந்த மன்னர், 'தங்களுக்கு யானை சவாரி எப்படி கிடைத்தது?' என, கேட்டார்.

'ஒன்றுமில்லை மன்னா... நான் செய்த தானத்தின் மகிமை இது...' என்று புன்னகைத்தபடி பதில் சொன்னார், கவிஞர்.

'என்ன தானம் செய்தீர்?' என, மன்னர் கேட்க, 'முதியவர் ஒருவர், கொளுத்தும் வெயிலில் கால்களில் செருப்பில்லாமல், தவித்தபடி வந்து கொண்டிருந்தார். என் பழைய செருப்புகளை அவருக்கு தந்து விட்டு, வெறுங்காலுடன் வந்து கொண்டிருந்தேன். இந்த யானை சவாரி கிடைத்தது. தானம் ஒரு போதும் வீண் போகாது மன்னா...' என்று விவரித்தார், கவிஞர்.

ஆம்... தானம் ஒரு போதும் வீணாகாது. விதைப்பது, பன் மடங்காக விளைந்து பயன் அளிப்பதைப் போல, செய்யும் தான - தர்மங்கள் பன் மடங்காகப் பலனளிக்கும்; சந்தேகமே இல்லை. இதன் காரணமாகவே, நம் பண்டிகைகள் அனைத்திலும் ஏதாவது ஒரு விதத்தில், தானம் இடம்பெறச் செய்தனர்.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us