
'கொடுத்து வாழ்ந்தவன் கெட்டதும் இல்லை; பிறருக்கு கொடுக்காமலே வாழ்ந்தவன் வாழ்ந்ததுமில்லை' என்பது கிராமத்து சொலவடை. தர்மம் என்பது நம் கர்மா எனும் உண்டியலில் சேமிக்கப்படும் பொற்காசுகள். எவ்வளவு சேமிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் பிறப்பு அமையும்.
கிஞ்சன்வாடி எனும் கிராமத்தில், கேசவதாசர் என்பவர் ஹரி கதாகாலட்சேபம் செய்து வந்தார். அவருக்கு தட்சணை கொடுப்பதற்காக, பாண்டுரங்கனின் அடியாரான துக்காராம் ஏற்பாட்டின்படி, ஊர் பெரியவர்கள் வசூல் செய்தனர். அப்போது, மாதவன் என்ற வியாபாரியிடம் பொருள் கேட்டனர். அவரோ, 'அட போங்க... எப்ப பாரு இந்த துக்காராம் பஜனை, கதாகாலட்சேபம் அது, இதுன்னு கத்திக்கிட்டே இருப்பார். இப்ப, அவர் கூட கேசவதாசர்ன்னு இன்னொருத்தர் வேற சேர்ந்துட்டாரு. எதுவும் கொடுக்க மாட்டேன் போங்க...' என்று விரட்டினார்.
பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் சாமர்த்தியசாலியாக இருந்தார் மாதவன். தன் மனைவி எதையாவது கொடுத்து விடுவாள் என நினைத்து, விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைத்து விட்டார். அதன் காரணமாக, பொருள் கேட்டு வந்த அடியவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லாததால், வீடெங்கிலும் தேடி, உடைந்து போன ஒரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்து, 'ஐயா... இதை விற்று, அதன் மூலம் கிடைப்பதை, உங்கள் நல்ல காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்றாள் மாதவனின் மனைவி.
அவர்களும் அப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றனர்.
அதை கண்ட மாதவன், 'அடடே...என் மனைவி தங்கப் பாத்திரத்தை தந்திருக்கிறாளே... கொண்டு போங்கள்...' என்று சிரித்துக் கொண்டே ஏளனமாக கூறினார்.
அடியவர்களிடம் இருந்து பாத்திரத்தை வாங்கிய துக்காராம், 'அந்த பெண்மணி மிகுந்த பக்தி கொண்டவர்; தர்ம சிந்தனை கொண்ட அந்த உத்தமி தந்த இந்த அலுமினியப் பாத்திரம், தங்கப் பாத்திரத்திற்கு இணையானது...' என்றார். அதே வினாடியில், துக்காராம் கையில் இருந்த அலுமினியப் பாத்திரம், தங்கமாக மாறியது.
இந்தத் தகவல் ஊரெங்கும் பரவியது. வியாபாரி மாதவன் அதை கேள்விப்பட்டு ஓடோடி வந்தார். 'இந்த ஊர்க்காரர்கள், என் மனைவியை ஏமாற்றி, தங்கப் பாத்திரத்தை வாங்கி வந்து விட்டனர்; அதைத் திருப்பித் தாருங்கள்...' என்றார்.
துக்காராமும் அப்பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்தார். அதை மாதவன் வாங்கியதும், பழையபடியே அலுமினியமாக மாறியது. எரிச்சலோடு அவர், அதை துக்காராமிடமே திருப்பித் தந்தார். இவர் கைக்கு வந்ததும் அது தங்கமாக மாறியது.
மாதவன் திகைக்க, 'மாதவா... உத்தமியான உன் மனைவி, தர்ம சிந்தனையுடன் தந்த இந்த பாத்திரம் அவள் மனதைப் போலவே தங்கமாக மாறியது...' என்றவர், 'மாதவா... நாம் சம்பாதிக்கும் செல்வத்திற்கு அரசு, (வரி மற்றும் இதர அரசு காரியங்கள்) இயற்கை, (பஞ்சம், வெள்ளம், காற்று, நெருப்பு ஆகியவைகளால் விளையும் சேதம்) திருடர்கள், (திருட்டு, மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகியவை மூலமாகவும்) தர்மம் (தெய்வ காரியங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவுவது) இந்த நான்கு பேரும் பங்காளிகள்.
'இந்த நான்கிலும், நான்காவதாகச் சொல்லப்பட்ட தர்மத்தை நாம் செய்தால், அந்தப் புண்ணியத்தின் பலத்தால், மற்ற மூன்று பங்காளிகளும், நம்மை நெருங்க மாட்டார்கள்; ஆகையால், இருக்கும் போதும், இறந்த பின்பும் நன்மை தரக்கூடியது தர்மம் மட்டுமே...' என்றார்.
இவ்வாறு சொல்லி முடித்ததும், துக்காராமின் காலில் விழுந்து வணங்கிய மாதவன், 'என் செல்வங்களை எல்லாம், இனி, தர்மத்திற்கே பயன்படுத்துவேன்...' என்றார்.
'ஈயார் தேட்டை தீயார் கொள்வர்' என்று அவ்வையார் இடித்துரைப்பதை மனதில் வைத்து, தர்மம் செய்வது நம் வாழ்வியல் கடமைகளில் ஒன்று என்பதை நினைவில் வைப்போம்!
பி.என்.பரசுராமன்
விதுர நீதி!: எவன் (அரசன்) மற்றவர்களின் நம்பிக்கையை பெற்று விடுகிறானோ, குற்றவாளிகளுக்கு பொருத்தமான தண்டனை கொடுக்கிறானோ, தண்டனையின் அளவை சரியாக தெரிந்து வைத்துள்ளானோ, எப்போது, கருணை காட்டி, மன்னிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறானோ - அவனை, செல்வமும், செல்வாக்கும் தேடி வரும்.
— என்.ஸ்ரீதரன்.

