
டிச., — 5 திருக்கார்த்திகை தீபம்
நட்சத்திரங்களில், அசுவினி நட்சத்திரத்தை, முதலாவதாக குறிப்பிடுவோம். ஆனால், வேத காலத்தில் கார்த்திகை நட்சத்திரத்தை முதலாவதாகவும், பரணி நட்சத்திரத்தை கடைசியாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஜோதிட சாஸ்திரம் பிறந்த பின்னரே அசுவினி, முதல் நட்சத்திரமானது.
வேதகால மக்கள் கார்த்திகையை முதல் நட்சத்திரமாக கொண்டதற்கு காரணம், அந்த நட்சத்திரத்திற்குரிய தேவதை அக்னி. யாகம், ஹோமம் செய்ய அக்னி இன்றியமையாதது. அக்னி இல்லாமல் சமைக்க முடியாது; அந்த அக்னிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கார்த்திகையை முதல் நட்சத்திரமாகக் கொண்டனர்.
அது மட்டுமல்ல, முருகன், சிவனின் நெற்றிக்கண்ணான அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், அவருக்கு கார்த்திகை நட்சத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதனால் தான், கார்த்திகை மாதத்து, கார்த்திகை நட்சத்திரம் சிவனுக்கும், ஆடி மாதம் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரம் முருகனுக்கும் சிறப்பானதாக உள்ளது.
இருளில் தீபம் ஏற்றினால் ஒளி பிறக்கிறது; இதனால், ஒளியையே இறைவனாகக் கருதினர். ஜோதி வடிவில் இறைவனை வணங்கியவர்கள், திருக்கார்த்திகை அன்று, திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை, சிவனாக கருதி வழிபட்டனர்.
கார்த்திகையன்று வீடுகளில் கிளியஞ்சட்டியில், (களிமண்ணில் செய்த சிறிய விளக்கு) பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு, பஞ்சு திரி போட்டு அதில் விளக்கு ஏற்றுவதுடன், வீட்டின் முன், லட்சுமியின் அம்சமான குத்துவிளக்கில் தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்ற பசு நெய் பயன்படுத்துவதற்கு காரணம், தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, விளக்கில் பசு நெய் இடுவதால், அது, சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து, 'சிவசக்தி' சொரூபமாகிறது.
இந்த தீபத் திருவிழா, தந்தை, மகன்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கும் விழாவாகவும் உள்ளது. முருகனை வளர்த்த ஆறு முனிபத்தினிகள், நட்சத்திரமாக மாறினர். அந்த நட்சத்திரம் பரிபூரண ஒளி பெற்று, 'கார்த்திகை' என பெயர் பெற்றது. எனவேதான், முருகன் கோவில்களில், 'கார்த்திகை' பிரதான இடம் பிடிக்கிறது. அன்று, பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுகின்றனர். தந்தைக்குரிய திருவண்ணாமலையிலும் விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது. அதாவது, தந்தைக்கும், மகனுக்கும் ஒரே நாளில் விழா நடத்தப்படுகிறது.
திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருக்க விரும்புவோர், பகலில் சாப்பிடாமல் இருப்பது மரபு. அன்று மாலை, 6:30 மணிக்கு, வீடுகளில் ஏழு விளக்குக்கு குறையாமல் தீபம் ஏற்ற வேண்டும். விநாயகர், முருகன், சிவன் படங்கள் முன், இலை விரித்து பிடி கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை, பால் படைத்து பூஜை செய்து, பின், பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். அன்று இரவு, கோவில்களில் நடக்கும் சொக்கப்பனை நிகழ்ச்சியை தரிசிக்க வேண்டும்.
இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களின் வாழ்வு என்றும் ஒளி மிக்கதாக இருக்கும்.
தி.செல்லப்பா

