
ஏமாற்றுவதில் இது புது விதம்!
சென்னை புறநகரில் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிக்கு, சமீபத்தில், ஒரு நாள், காலை நேரத்தில், ஒரு இளைஞனும், இரு இளம் பெண்களும் வந்தனர். எங்கள் குடியிருப் பில் நான்கு வீடுகள் மட்டுமே உள்ளன. வீட்டுக்கு ஒருவராக சென்றனர். அதில், என் வீட்டுக்கு வந்த பெண், தான் காஸ் ஏஜென்சியில் இருந்து வருவதாகவும், அவர்கள் கூறியதன் பேரில் தான் கொண்டு வந்துள்ள இரு பொருட்களை பயனீட்டாளர்கள், கட்டாயம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன், இப்பொருட்களை வாங்கியவர்களின் பெயர் பட்டியலை தான் ஏஜென்சியில் கொடுப்பதாகவும், அவர்கள் பட்டியலில், பெயர் உள்ள நபர்களுக்கு மட்டுமே, வருங் காலத்தில் பதிவு செய்யப்படும் புதிய சிலிண்டர்களை, 'டெலிவரி' செய்வர் என்றும் கூறினார்.
அதில் முதல் பொருளானது, நம் ஆட்காட்டி விரல் நீளமே உள்ள சிகப்பு நிற பிளாஸ்டிக் சிலிண்டர் பொம்மை. அதனுள், இருபுறமும் இரு காந்தத் துண்டுகளை பொருத்தியிருந்தனர். அந்தப் பொம்மை சிலிண்டரை, நீளவாக்கில் சமமாக திறந்து, நம் அடுப்பையும், சிலிண்டரையும் இணைக்கும், 'டியூபில்' பொருத்திவிட வேண்டும் என்றும், இதன் பெயர், 'மேக்னட் சேவர்' என்றும், இது காஸ் தீரும் தருவாயில், சற்று முன்னதாகவே சீட்டி ஒலி எழுப்பி எச்சரிக்கும் என்றும் கூறினார். இதன் விலை, 470 ரூபாய்!
இரண்டாவது பொருளின் பெயர், 'காஸ் சேவர்!' அதாவது, வட்ட வடிவிலான, தகர வளையத்தில் குறுக்கும், நெடுக்குமாக கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. இதை அடுப்பின் பர்னர் மீது வைத்தால், அடுப்பு எரியும் போது, தகர வளையம் விரைவிலேயே சூடாகி, சமையலை துரிதமாக்கி, எரிபொருளை சேமிக்க உதவும் என்றும் கூறினார். இது, அடுப்பு, 'பர்னரி'ன் அளவுக்கு ஏற்ற வகையில், இரு விதமாக வழங்கப்படுவதாகவும் கூறினார்.
ஒரு ஜோடி, 'கேஸ் சேவரின்' விலை, 490 ரூபாய்; மொத்தம், 960 ரூபாய். மேலும், கடந்த இரு நாட்களாக, தாங்கள் விற்பனை செய்து, ரசீது போட்டு கொடுத்துள்ள, எங்கள் பகுதி மக்களின் கையெழுத்துடன் கூடிய, ரசீதுப் புத்தகத்தையும் காட்டினாள்.
முதலாவது, இதை வாங்காவிட்டால், எங்கே இனி காஸ் சிலிண்டர் கிடைக்காதோ எனும் பதற்றம். இரண்டாவது, அலுவலகம் செல்லும் அவசரம். மூன்றாவது, ரசீது புத்தகத்தில் எங்கள் பகுதி மக்களின் கையெழுத்திடப்பட்ட ரசீது கிழிக்கப்பட்ட கவுன்ட்டர் பாயில்கள்.
எனவே, நான், நம்பி மொத்த பணத்தையும் கொடுத்து, அப்பொருட்களை வாங்கினேன். என் பக்கத்து வீட்டில் உள்ளவர், நான்கு, 'பர்னர்' மற்றும் கூடுதலாக ஒரு, 'மேக்னட் சேவரை'யும் வாங்கினார். அவர்கள் சென்றபின் பொருத்திப் பார்த்து பரிசோதித்த போது தான் தெரிந்தது, நாங்கள் நன்றாக ஏமாந்தது!
நடைபாதைக் கடைகளிலேயே கிடைக்கக் கூடிய பத்து ரூபாய்க்கும் பெறாத பொருளை, நூறு மடங்கு விலையில், ஏமாற்றி விற்று, எங்களுக்கு ஏமாளி பட்டமும் கொடுத்துள்ளனர்.
வாசகர்களே... இது போன்ற மோசடி ஆசாமிகளிடம் இனிமேல் உஷாராக இருங்கள்!
— டி.ஹேமா பிரியா, பள்ளிக்கரணை.
அரசுக்கு ஒரு யோசனை!
திருவிழா நேரங்களில், குற்றம் மற்றும் திருடு போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவும், 'பிக்பாக்கெட்' திருடர்கள், செயின் திருடர்கள் மற்றும் சில முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை முக்கிய இடங்களில் மாட்டி வைத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்வர் காவல்துறையினர்.
இதைப்போலவே, மது போதையில் விபத்துக்குள்ளானவர்கள், குடித்து குடித்து குடல் அழுகி, பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இறந்தவர்களின் புகைப்படங்களை சேகரித்து, மதுக்கடை, பார்கள் மற்றும் பொது மக்கள் பார்வை படும் முக்கிய இடங்களில் ஒட்டி வைத்தால், மதுப்பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சமாவது யோசிப்பர்.
மதுபாட்டிலில், 'குடி குடியை கெடுக்கும்' என்று எழுதியுள்ளதை எத்தனை பேர் படிக்கின்றனர். இப்படி இறந்தவர்களின் புகைப்படத்தை ஒட்டி வைத்தாலாவது அதை பார்க்கும் ஒரு சிலருக்காவது, பயம் கலந்த விழிப்புணர்வு உண்டாகுமே!
அரசு மனம் வைத்தால் இது சாத்தியமே!
— ஆர்.நாகராஜ், மதுரை.
இறைச்சியின் தரத்தை மேம்படுத்தவே மின்சாரம்!
நவ., 9, 2014 வாரமலர் இதழில், இ.உ.இ., பகுதியில், கோவை வாசகர் எஸ்.கோவிந்தராஜன் எழுதிய, 'மின்சாரம்... இது புது சமாசாரம்' என்ற கடிதம் வெளியாகியிருந்தது. அது சம்பந்தமாக, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் இறைச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் டாக்டர் ராபின்சன் ஜே.ஜே.ஆபிரகாம் அளித்துள்ள விளக்கம் இதோ:
நம் நாட்டில் பெரும்பாலான இறைச்சி அறுவை கூடங்களில், இறைச்சிக்காக, கால்நடைகள், 'ஹலால்' (இஸ்லாமிய) முறைப்படி அறுக்கப்படுகிறது. இவ்வாறு அறுக்கப்பட்ட இறைச்சியை, கறி கடைகள் மூலம் நுகர்வோருக்கு வினியோகம் செய்வது வழக்கம்.
உலக முழுவதும் உள்ள கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் சங்கங்கள், கால்நடைகளை அதிகம் வதைக்காமல் அறுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆகையால், பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் கால்நடைகளை அறுப்பதற்கு முன், வலி அறியாமல் உணர்விழக்க செய்ய பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில், 75 வோல்ட் மின்சாரம் கொண்டு, கால்நடைகளை உணர்விழக்க செய்யும் முறையும் ஒன்று. இம்முறையை ஆராய்ச்சியாளர்கள், கால்நடை நல ஆர்வலர்கள் மற்றும் பல சங்கங்கள் அங்கீகரித்துள்ளனர்.
மின்சாரத்தை கால்நடைகளின் மீது, 7 வினாடிகளுக்கு குறையாமல் செலுத்துவதால், கால்நடைகள் உணர்விழந்து விடும். கழுத்து அறுக்கப்படும் போது, வலியின்றியும், அறுப்போருக்கும் எந்த பாதகமும் ஏற்படாமலும் இருக்கும். இப்படி செய்வதால், ரத்தத்தை முற்றிலுமாக வெளியேற்றி, இறைச்சியின் தரத்தை மேம்படுத்தவும் வழி வகுக்கிறது. எனவே, இந்த குறைந்த அளவு மின்சாரம் பாய்வதால், இறைச்சியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி அளிக்கிறோம்.
இத்தொழில் நுட்பத்தை பற்றி மேலும் விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், இறைச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை - 600 007 என்ற முகவரியில் அணுகலாம். அல்லது 044 - 2530 4000, மொபைல் எண்: 9443411598 எண்களிலும் அழைக்கலாம்.
தேச பக்தியா, என்ன விலை?
சில மாதங்களுக்கு முன், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, எதிர் வரிசையில் அமர்ந்திருந்தவர், அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர், எட்டி எட்டி பார்த்து படிக்கலானார். இதனால், பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவர் எரிச்சல் அடைந்து, 'சை...'ஓசி' கிராக்கி ஜென்மங்கள்...' என்று முணுமுணுத்தார்.
உடனே அந்த பெரியவர், 'பத்திரிகையில் வெளியிட்டிருந்த சுதந்திர தின தகவல்களும், தேசியக் கொடியும் என்னை ஈர்த்தது; தொந்தரவா இருந்தா மன்னிச்சுக்கங்க...' என்றார்.
இந்த இருவருடைய செயல்பாடுகள் மற்றும் உரையாடலை கவனித்த நான், அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்ற போது இறங்கி, அதே நாளிதழ் ஒன்றை வாங்கி, அந்த பெரியவரிடம் தந்தேன். அவரும் படித்து மகிழ்ந்து, சிரத்தையாக மடித்து, தன் பையில் சந்தோஷமாக வைத்துக் கொண்டார்,
'ஓசி கிராக்கி' என்று கமென்ட் செய்த அந்த பயணி, படித்து முடித்த அந்த பத்திரிகையில் தன் பாத்ரூம் செருப்பை சுருட்டி வைத்து, ஷு அணிந்து, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிப் போனார்.
தேசிய கொடியுடனான பேப்பரை, செருப்பு சுருட்டி வைக்க உபயோகப்படுத்தியதைக் கண்டு வேதனையடைந்தேன். ஆனால், அதேசமயம், நான் வாங்கி கொடுத்த அதே பத்திரிகையை பொக்கிஷமாக பத்திரப்படுத்தி எடுத்துச் சென்ற அந்த பெரியவர், எனக்கு தெய்வமாக தெரிந்தார். 'தேச பக்தியா, என்ன விலை?' என்று கேட்கும் இதுபோன்ற ஜென்மங்கள் என்று தான் திருந்துவரோ!
— ஏ.ராமன், சென்னை.

