/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (9)
/
கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (9)
PUBLISHED ON : நவ 30, 2014

ஒரு நாள் காலை, பவானி ஆற்றில் நாங்கள் எல்லாரும் (200 பேர்) குளித்துக் கொண்டிருந்தோம்.
வெள்ளம் வரப்போவது பற்றி ஊர் தலையாரி தமுக்கடித்து சொல்லியிருந்தது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அங்கு போவதற்கு முன்தினம் சொல்லி இருப்பாரோ என்னவோ!
திடீரென வெள்ளம் வந்து விடவே, நாங்கள் திக்குமுக்காடிப் போனோம். கரைக்கு ஓடி வருவதற்குள் வெள்ளம் எங்களை சூழ்ந்து விட்டது. நாங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைக் கண்ட, சில பெரியவர்கள் உடனே ஆற்றில் குதித்து, எங்களை தோளில் தூக்கி கரை சேர்த்தனர். அன்று, அவர்கள் அப்படி செய்திராவிட்டால், எங்களில் பலர், வெள்ளத்துடன் போயிருப்பர்; நானும் போயிருப்பேன். நல்லவர்களின் ஆசியே எங்களைக் காப்பாற்றியது.
ஊட்டியில் நல்ல குளிர், எங்களுக்கெல்லாம் கம்பளிச் சட்டை, போர்வை, மப்ளர் எல்லாம் வாங்கித் தந்தனர்.
காலையில் பல் தேய்க்க, வெந்நீர் போட்டுத் தருவர். 'புளு மவுண்டன் டாக்கீஸ்' என்ற கொட்டகையில் தான் எங்கள் நாடகங்கள் நடந்தன. அதன் கீழே ஒரு பெரிய உருளைக்கிழங்கு கிடங்கு இருந்தது. நாடக நாட்களில் எங்களுக்கு அங்கு நல்ல வேட்டை. தினசரி உருளைக் கிழங்கு இல்லாமல் சாப்பாடே இருக்காது.
ஊட்டியில், 'தோடர்கள்' என்ற மலை ஜாதியினர் உள்ளனர். நாங்கள் தங்கி இருந்த வீட்டுக்கு சிறிது தூரத்தில் தான் அவர்கள் வசித்து வந்தனர். அவர்களை நாங்களும், எங்களை அவர்களும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டோம்.
காலையில் பாடம் படித்து முடித்ததும், நாங்கள் அவர்கள் இடத்திற்குப் போய் விடுவோம். அவர்களது உடை, வசிக்கும் வீடு, பேசும் மொழி இவை எல்லாம் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. அவர்களை பாடச் சொல்வோம்; அவர்களும் பாடுவர். பட்டாபிஷேகம் நாடகம் முடிந்து, ஊட்டியை விட்டுக் கிளம்புவதற்கு முன்பாக, அங்கு நடைபெற்ற மலர் கண்காட்சியையும் பார்த்தோம்; ரொம்பவும் அருமையாக இருந்தது.
ஊட்டிக்கு அடுத்து சிங்காநல்லூருக்கு வந்தோம். இதே சமயம் கோவையில் டி.கே.எஸ்., சகோதரர்கள் நாடகங்களை நடத்தி வந்தனர்.
இந்த ஊரில் தான் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் பல படங்கள் தயாராகி வந்தன. ஒரு நாள் ராதா அண்ணன், முதன் முதலாக என்னை சினிமாவில் சேர்த்து விடுவதற்காக அழைத்துப் போனார். எனக்கு ஒரே சந்தோஷம்!
ஆனால், என்னைப் பார்த்ததும் அந்த வேஷத்திற்கு நான் உயரமாக இருப்பதாகச் சொல்லி அனுப்பி விட்டனர்; ஏமாற்றத்துடன் திரும்பினேன். பின், இந்த வேஷத்திற்கு காகா ராதாகிருஷ்ணன் பொருத்தமாக இருக்கிறார் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
கலைவாணர் என்.எஸ்.கே.,யுடன் நடிக்க வேண்டிய படம் என்பது நினைவு!
சிங்காநல்லூரில் பழையபடி கம்பெனிக்கு கஷ்ட நிலை வந்து விட்டது. இரவோடு இரவாக வண்டியில் நாடக சாமான்களை ஏற்றி, கம்பெனியில் இருந்தவர்களில் பாதி பேர் கால்நடையாகவே கிளம்பினோம்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில் என்.எஸ்.கே.,யுடன் படத் தயாரிப்பு விஷயமாக கோவைக்கு வந்திருந்த எஸ்.வி.சகஸ்ரநாமம் இந்தக் கட்டத்தில், எங்கள் உதவிக்கு வந்தார். அவர் ஒரு காரை எடுத்து வந்து, சின்னப் பையன்களை அதில் ஏற்றி, பொள்ளாச்சியில் கொண்டு போய் விட்டு வந்தார். இப்படி இரண்டு, மூன்று முறை அவர் வண்டியில் ஏற்றி பொள்ளாச்சிக்கு எங்களைக் கொண்டு போய் சேர்த்தார்.
அவரது பெருந்தன்மையான செயல், எங்கள் உள்ளத்தில் நன்றியுணர்வை உண்டாக்கியது.
பொள்ளாச்சி முகாமை என்னால் மறக்க முடியாது. இங்கு தான் என் வாழ்க்கையில் ஒரு சிறு திருப்பம் ஏற்பட்டது. தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஊருக்குப் போவதற்காக, கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று, நானும், திருச்சி தங்கவேலுவும் ஊருக்குக் கிளம்பினோம்.
என் வீட்டாருக்கு என்னைக் கண்டதில் பெரும் மகிழ்ச்சி; தீபாவளியை அந்த வருஷம் கோலாகலமாகக் கொண்டாடினோம். நாங்கள் கம்பெனிக்கு திரும்ப வேண்டிய நாட்களும் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஒரு நாள் எம்.ஆர்.ராதா அண்ணன், என் வீட்டிற்கு வந்தார்.
ராதா அண்ணனைப் பார்த்ததில், எங்கள் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். 'உன்னைப் பாக்க தான் வந்தேன்...' என்று, அவர் சொன்னதைக் கேட்டதும், எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ராதா அண்ணன், என்னைத் தேடி வந்த காரணத்தைச் கூறினார். அவர் தனியே நாடகக் கம்பெனி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதில், என்னைச் சேரச் சொல்லி அழைப்பு விடுத்தார். என்னுடன் ஊருக்குப் புறப்பட்டு வந்த தங்கவேலுவையும், தன்னுடன் சேர்ந்து விடும்படி அழைத்தார். அப்போது தான் ராதா அண்ணன், எங்கள் கம்பெனி முதலாளியுடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து வந்த விவரம் எங்களுக்கு தெரிய வந்தது.
ஆனால், அது என்ன காரணத்திற்காக என்பது தெரியவில்லை; கேட்கவும் தைரியம் வரவில்லை. இரு நாட்கள் அவர் எங்கள் வீட்டிலேயே தங்கினார்; அந்த இரு நாட்களிலும் பலவாறு யோசித்துப் பார்த்தேன். 'கம்பெனியிலேயே பழையபடி போய்ச் சேர்ந்து விடுவதா அல்லது ராதா அண்ணனுடன் போவதா?' என்று!
கடைசியில், 'ராதா அண்ணன் பெரிய நடிகர்; சினிமாவில் நடித்துப் புகழ் பெற்றவர். அவரே என் வீட்டுக்கு வந்து கூப்பிடும்போது, போகாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? தவிர, ராதா அண்ணன் கம்பெனியில் பெரிய வேடங்கள் போடுவதற்கு, சீக்கிரத்திலேயே சந்தர்ப்பமும் கிடைக்கும்...' என்றெல்லாம் எண்ணிய நான், ராதா அண்ணனுடன் செல்வதென்ற முடிவுக்கு வந்தேன்.
வீட்டாரிடம் சொன்னேன்; என்னுடைய முடிவுக்கு அவர்கள் தடையாக நிற்கவில்லை. ராதா அண்ணனிடம், அவருடன் வருவதாகச் சொன்னோம்; எங்கள் முடிவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டார். நானும், தங்கவேலுவும் அவருடன் கிளம்பினோம்.
சென்னையைப் பற்றி பலவாறாக பிரமாண்டமாகக் கற்பனை செய்து வைத்திருந்ததால், நான், முதன் முதலாக அந்தச் சென்னையில், ஒருவகை புல்லரிப்புடன் காலடி எடுத்து வைத்தேன்.
கோவிந்தப்ப நாயக்கன் தெரு என்று நினைக்கிறேன். அங்கு ஒரு வீட்டில் தங்கினோம். மறுநாள் காலை, அங்கிருந்து டிராம் வண்டியில் (அப்போது சென்னையில் டிராம் ஓடிய காலம்) ஏறி, புகழ்பெற்ற மூர் மார்க்கெட்டுக்கு வந்தோம். எனக்கும், தங்கவேலுவுக்கும் புதுச் சட்டை, துணிகளை வாங்கிக் தந்தார் ராதா அண்ணன். அப்போது, மூர்மார்க்கெட்டில் பானு ஓட்டல் பிரபலம்; அங்கே தான், நாங்கள் தினமும் சாப்பிடுவோம்.
எங்கள் ரெண்டு பேருக்கும் ஒரு ரிக் ஷாவை ஏற்பாடு செய்து, ரிக் ஷாக்காரனிடம் சென்னையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடத்திற்கெல்லாம் எங்களை அழைத்துச் செல்லும்படி சொல்லி. செலவுக்கு கைநிறைய காசும் கொடுத்து அனுப்புவார் ராதா அண்ணன்.
உயிர் காலேஜ் (மிருகக் காட்சி சாலை), செத்த காலேஜ் (மியூசியம்), லைட் - ஹவுஸ், துறைமுகம் என, புதிதாக சென்னைக்கு வருபவர்கள், எந்த இடங்களை எல்லாம் பார்க்க விரும்புவார்களோ, அந்த இடங்களை எல்லாம், ஒன்று விடாமல் பார்த்தோம். காலையில் கிளம்பும் நாங்கள், நன்றாக இருட்டிய பின் தான், வீடு திரும்புவோம்.
ராதா அண்ணன், தான் தயாரிக்கவிருந்த நாடகங்களுக்கான உடைகளையும், மற்ற பொருட்களையும் வாங்குவதற்காகவே சென்னை வந்தார். குறிப்பாக, சில சினிமா கம்பெனிகளிடமிருந்து அவர்கள் தயாரித்து வெளியிட்ட படங்களில் உபயோகித்திருந்த உடைகளை வாங்கினார். மாத்ரு பூமி படத்தை வெளியிட்டிருந்த கம்பெனியிலிருந்து, நிறைய உடைகளை வாங்கினார்.
ஒரு நாள் ராதா அண்ணன், எங்கள் இருவரையும் ஒரு கம்பெனிக்கு அழைத்துப் போனார். பிரகதி ஸ்டுடியோவை சேர்ந்த கம்பெனி வீடு என்று நினைவு.
அங்கே...
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

