
அந்த அதிகாரி வீட்டில், இத்தனை லட்சம் ரூபாய் பிடிபட்டது... இந்த அதிகாரி வீட்டில், இவ்வளவு கிலோ தங்க நகை சிக்கியது என்றெல்லாம் செய்திகள் வரும்போது, மனம் மிக வேதனைப்படும். அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகளே, இப்படி ஊழல் மிகுந்தவர்களாக இருந்தால், நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் வெகுவாக பாதிக்கப்படுமே என்ற கவலை ஏற்படுவதுண்டு.
லென்ஸ் மாமாவும், நானும் இது குறித்து ஆழமாக விவாதிப்பது உண்டு.
சமீபத்தில் ஒரு நாள், அதிகாலை பீச் வாக்கிங்கின் போது, (டாக்டர்களின் அறிவுரைப்படி, உடம்பை குறைக்க, லென்ஸ் மாமா வாக்கிங் போகிறார். இவருக்கு பின்பாட்டுக்கு என்னையும் அழைத்துச் செல்கிறார். அவருக்குத் தான், 'வெயிட்'டை குறைக்க வேண்டும்... அவருடன் நானும் நடந்து, ஓமக்குச்சி நரசிம்மன் போல ஆகி விடுவேன் போலிருக்கு... காலை நாலு மணிக்கே வீட்டிற்கு வந்து எழுப்பி, தூக்கத்தைக் கலைத்து விடுகிறார் மனிதர்.) எதிர்பட்ட ஒரு அதிகாரியைப் பார்த்ததும், மணி... அரசு அதிகாரிகளின் ஊழல் பற்றிப் பேசிக் கொண்டிருப்போமே... இவர்களிடம் ஊழல் பற்றுதல் குறைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து, டில்லி டெவலப்மென்ட் அத்தாரிட்டி கமிஷனராக இருந்த கே.ஜே.அல்போன்ஸ் என்பவர், ஒரு புத்தகம் எழுதி இருக்கிறாராம்... அப்புத்தகத்தின் சுருக்கத்தை ஆங்கில இதழ் ஒன்றில் படித்தேன்.
அதில், அவர் சொல்கிறார்...
மக்கள் நலனுக்காக அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும், 16 காசு தான் மக்களைச் சென்று அடைகிறது என்று, 1984ல், பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி சொன்னார். இன்றைய நிலையில், இந்த காசு இன்னும் குறைந்து விட்டது. மீதமுள்ள பணமெல்லாம் எங்கே போகிறது... ஒரு பகுதி அதிகாரிகளுக்கும், இன்னொரு பகுதி இடைத்தரகர்களுக்கும், பெரும்பகுதி அரசியல்வாதிகளையும் சென்றடைகிறது.
வருமானமுள்ள துறைகளில் பதவி பெற, அதிகாரி ஒருவர் அரசியல்வாதிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார் என்றால், அந்த அதிகாரி தன் பதவி காலத்திற்குள், 100 லட்சம் ரூபாய் சம்பாதித்து விடுகிறார்.
அரசியல்வாதிகள் முட்டாள்கள் அல்ல; ஆனால், அதிகாரிகள் புத்திசாலிகள். சில அதிகாரிகள், அடிக்கும் கொள்ளையில் அரசியல்வாதிகளுக்கு உரிய பங்கை கொடுப்பதே இல்லை எனவும் கேள்விப்படுகிறேன். மிக முக்கியப் பதவிகளில் உள்ள சில அதிகாரிகள், 1,000 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாகவும், இன்னும் சில அதிகாரிகள், 3,000 கோடி சொத்து சேர்த்துள்ளதாகவும் கேள்விப்படுகிறேன். ஆனால், இவர்களை கையும், களவுமாகப் பிடிக்க முடியாது. அவ்வளவு சாதுர்யமாக முதலீடு செய்துள்ளனர். உ.பி.,யில் உள்ள ஒரு அதிகாரிக்கு, 'பண்டிட் குயின்' (பூலான் தேவி) என்றே பட்டப் பெயர் சூட்டி உள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அதிகாரிகள் ஏன் லஞ்சம் வாங்குகின்றனர்? ஆரம்பத்தில், அடிப்படைத் தேவைக்காக வாங்க ஆரம்பிக்கின்றனர். பிறகு அதுவே, அவர்களை பேராசையில் தள்ளி விடுகிறது. ஒரு முறை கை நீட்டி விட்டால், அதன்பின் கையை பின்னுக்கு இழுக்கவே தோன்றாது.
என்னை எடுத்துக் கொள்ளுங்கள்...
பதினாறு ஆண்டுகளாக, மிகப் பெரிய பதவிகளில் இருந்து விட்டேன். பிடித்தம் எல்லாம் போக, இன்று நான் வாங்கும் சம்பளம் வெறும், 25,000 ரூபாய் தான். ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருகிறோம் என, சில தனியார் நிறுவனங்கள் வேலைக்கு அழைக்கின்றன. ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷனில் லோன் போட்டு, அடுக்கு மாடி வீடுகளில் சிறிய வீடு ஒன்று வாங்கினேன். அதற்கு மாதத் தவணையே, 10,000 ரூபாய் கட்ட வேண்டியுள்ளது.
கதை இப்படியானால், ஒரு பைசா கூட வீட்டுக்கு கொடுக்க முடிவதில்லை. தவணைத் தொகையில் துண்டு விழும்,1,000 ரூபாயை என் கையில் இருந்து கொடுக்கிறேன். எப்படி முடிகிறது இது? என் தந்தை கொடுத்துச் சென்ற சொத்துகளை ஒவ்வொன்றாக விற்று, கை நீட்டாமல் மானத்தோடு வாழ்ந்து வருகிறேன். இன்னும் விற்பதற்கு சொற்ப சொத்தே உள்ளது!
தனியார் நிறுவன உயர் அதிகாரிகளை போலத் தான், அரசிற்காக தினமும், 15 மணி நேரம் உழைக்கிறேன்; 'ரிசல்ட்' கொண்டு வருகிறேன். எனக்கு ஏன், 'டீசன்டான' வாழ்வு நடத்தும் அளவில் அரசு சம்பளம் தரக் கூடாது?
நான், 'பைவ் ஸ்டார்' ஓட்டல்களுக்கு போய் உணவு சாப்பிட வேண்டும் என எண்ணவில்லை; ஆனால், ஏதாவதொரு சமயம், சாதாரண ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வரக் கூடாதா? 'டீசன்டான' உடைகள் அணிய எனக்கு பிடிக்கும்; என் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்கும்... அதுவும் எப்போதாவது தான். எப்போதாவது என் மனைவி, தனக்கு உடைகள் வாங்கிக் கொள்வாள்.
ஆனால், இதற்கெல்லாம் நான் வாங்கும் சம்பளம் போதாது; இந்த சம்பளத்தில், என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க முடியாது.
இந்த நாட்டில் வேலைகள் நடக்க வேண்டுமென்றால், அதிகாரிகளைப் பிடிக்க வேண்டும்; அவர்களை மடக்க, பணம் கொடுக்கின்றனர். அதனால், அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம் கொடுங்கள். லஞ்சம் வாங்கும் ஆசை அவர்களிடம் குறையும். ஏற்கனவே வாங்கிப் பழக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வாங்கினாலும், நேர்மையாக வாழ நினைத்து பதவியில் அமரும் இளைஞர்களாவது, லஞ்சப் பேயின் மடியில் விழாமல் இருப்பர்.
தொழிலதிபர் டாட்டா அன்றே சொன்னார்... 'அரசு அதிகாரிகளுக்கு மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். அப்போது தான் அவர்கள் லஞ்சம் வாங்கத் தூண்டப்பட மாட்டார்கள். நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இவர்களை ஊழல் சூழ்ந்து கொண்டால், நாடு கெட்டு குட்டிச் சுவர் ஆகிவிடும்...' என்றார். அவர் கூறியதை இன்று கண் முன் காண்கிறீர்கள்.
அகில இந்திய சர்வீசில் உள்ள அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு மாத சம்பளம், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஆண்டிற்கு, 1,000 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியது வரும். ஒரு ஆண்டு நம் நாட்டு பட்ஜெட் தொகையான, இரண்டு லட்சம் கோடி ரூபாயில், இந்த, 1,000 கோடி ரூபாய் என்பது சுண்டைக்காய்!
இரண்டு லட்சம் கோடி ரூபாய் பணத்தில், 60 சதவீதம் மக்களைச் சென்று அடைகிறது என எடுத்துக் கொண்டால், நாட்டில் ஏற்படும் மறுமலர்ச்சியை எடுத்துச் சொல்லவே முடியாது.
ஆண்டிற்கு, எட்டரை லட்சம் பேர் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் ஆண்டுக்கு, 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்க்கப்படுகின்றனர். எட்டரை லட்சத்தில் தேர்வான இந்த, 80 புத்திசாலிகளுக்கு என்ன கொடுக்கிறீர்கள்? 'ஸ்டார்ட்டிங் சேலரி' சில ஆயிரங்கள் மட்டுமே!
— 'இப்படி எல்லாம் அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் அல்போன்ஸ் என்ற அதிகாரி...' என்று மாமா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒரு முழு ரவுண்டு நடையை முடித்து, காந்தி சிலையை அடைந்திருந்தோம். அங்கே, வல்லாரை காபி வாங்கி அருந்தியபடியே, அதிகாரி அல்போன்ஸ் கூறியுள்ளதை அசை போட்டேன். என்ன... நீங்களும் அவர் கூறியது பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்களா?

