
செய்தித்தாளைப் படித்து முடித்ததும், குளிப்பதற்காக கிளம்பினார், அருணாசலம். அப்போது, மொபைல் போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தார்; நண்பர், கதிரேசனிடமிருந்து அழைப்பு!
''கதிரேசா... ஏதாவது அவசர விஷயமா... மணி, 11:00 ஆகப் போகுது... குளிச்சுட்டு வந்து பேசட்டுமா...'' என்றார்.
'சரி' என்று அவர் கூறியதும், குளியல் அறைக்குள் நுழைந்தார், அருணாசலம்.
அருணாசலமும், கதிரேசனும் நண்பர்கள். தங்கள் கடமைகளை எல்லாம் முடித்து, பணி ஓய்வு பெற்று, அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள்.
குளித்து முடித்து, நெற்றியில் திருநீறு இட்டு வந்தவர், பின், மொபைல் போனை எடுத்து நண்பர் கதிரேசனை அழைத்தார்.
''ஹலோ கதிரேசா... என்னப்பா விஷயம்...'' என்றார்.
''என்ன விஷயமா... என்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டே இல்ல...'' என்றார் எடுத்ததும் கதிரேசன்!
அருணாசலத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. ''கதிரேசா... முதல்ல என்ன விஷயம்ன்னு சொல்லு. உன்கிட்ட அப்படி என்னத்தை மறைச்சேன்...''
''நீ ஆதரவற்றோர் ஆசிரமம் ஆரம்பிச்சிருக்கற விஷயத்தை தான்...''
''என்னது... ஆதரவற்றோர் ஆசிரமமா... என்ன உளர்ற... 'சரக்கு' ஏதாவது அடிச்சுருக்கியா...'' என்றார், அருணாசலம்.
''நான் ஒண்ணும் சரக்கடிக்கல; என் ரெண்டு கண்ணால, 'அருணாசலம் ஆசிரமம்'ங்கிற, 'போர்டை' பாத்துட்டுத் தான் கேட்கிறேன்.''
''ஏண்டா... உனக்கு ஏதாவது அறிவு இருக்கா... ஊருல நான் ஒருத்தன் தானா அருணாசலம்... அந்த ஆண்டவன் பெயர்ல கூட, யாராவது ஆரம்பிச்சிருக்க மாட்டாங்களா...'' என்றார்.
''அது எனக்கு தெரியாதா... ஆசிரம வாசல்ல உள்ள போர்டுல உன் போட்டோ எப்படிப்பா வரும்...''
திடுக்கிட்ட அருணாசலம், ''என்ன... என் போட்டோ இருக்கா... என்னப்பா சொல்றே...'' என்றவர், ''எந்த இடத்திலே...'' என்றார், ஆர்வத்துடன்!
''செம்பாக்கம் முருகேசன் நகர்ல... மெயின் ரோடை ஒட்டி...''
''உள்ளே போய் பாத்தீயா...''
''இல்ல; டூ - வீலர்ல என் பையன் கூட வந்துட்டு இருந்தேன்; ஒரே டிராபிக் ஜாம். அதனால, இறங்கி போய் விசாரிக்கவோ, உனக்கு உடனே தகவல் தரவோ முடியல,'' என்றார்.
''போர்டுல மொபைல் நம்பர் ஏதாவது எழுதி இருந்தாங்களா...''
''அதக் கவனிக்கல,''என்று கதிரேசன் சொன்னதும், உடனே, அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது, அருணாசலத்திற்கு!
தன் மனைவியிடம், ''கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்,'' என்று சொல்லி, காலில் செருப்பை மாட்டி, வாசலுக்கு வந்தவர், ஆட்டோவில் ஏறி, செம்பாக்கம் நோக்கி விரைந்தார்.
முருகேசன் நகரில் இறங்கியவர், சுற்றுமுற்றும் பார்வையை சுழல விட, எதிரில் அந்த, 'போர்டு' தென்பட்டது. அருகில் சென்று, அதை, உற்றுப் பார்த்தார்.
'அருணாசலம் ஆதரவற்றோர் ஆசிரமம்' என்று எழுதப்பட்டிருந்த அந்த போர்டில், சாட்சாத் அவருடைய புகைப்படம் தான் இருந்தது.
'எப்படி இது சாத்தியம்...' எனக் குழம்பியவர், இல்லத்தினுள் நுழைந்தார். வரவேற்பு அறையில் இருந்தவர், அருணாசலத்தை சில வினாடிகள் உற்றுப் பார்த்து, ''சார் நீங்க தானே... இந்த இல்லத்தின்...'' என்று வார்த்தையை முடிக்கும் முன், ''நான், இந்த இல்லத்தோட நிர்வாகிய பாக்கணும்,''என்றார், அருணாசலம்.
''உள்ளே இருக்கார்; வாங்க அவர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்,'' என்றார்.
''இல்ல... நான் இங்கேயே இருக்கேன். அவரை வரச் சொல்லுங்க; நான் அவர பாக்கணும்...'' என்றவாறு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
இரண்டு நிமிடங்களில், அங்கு வந்த ஒரு வாலிபன், அவர் காலில் விழுந்து, ''என்னை ஆசீர்வாதம் செய்யுங்க சார்...'' என்றான்.
ஒன்றும் புரியாமல், ''அடடே... என்னப்பா இது... நல்லா இரு...'' என்று, அவன் தோள்களைத் தொட்டுத் தூக்கினார். பின், ''நீ தான் இந்த இல்லத்தை நடத்துறயா...'' என்று கேட்டார்.
''நான் நடத்தல சார், அந்த ஆண்டவன் நடத்துறான்; அதுக்கு காரணம் நீங்க... அதனால, நீங்க தான் இந்த இல்லத்தோட ஸ்தாபகர்,'' என்றான்.
''என்னப்பா சொல்றே... நான் ஸ்தாபகரா... எனக்கு ஒண்ணும் விளங்கல... எல்லாத்தையும் தெளிவா சொல்லு,'' என்றார் அருணாசலம்.
''கண்டிப்பா...'' என்றவன், ''உள்ளே வாங்க...'' என்று அவரை, தன் அறைக்குள் அழைத்து, காபி வரவழைத்து கொடுத்தான். பின், ''சார்... இந்த இல்லத்தை ஆரம்பிக்கிறதுக்கு, நீங்க காரணம்ன்னு சொன்னேன் இல்லயா... அதை விட, இன்னிக்கு நான் உயிரோட, உங்க முன் உட்காந்து பேசுறதுக்கு காரணமே நீங்க தான்,'' என்றவன், தொடர்ந்து, ''சார்... என் பெயர் சரவணன்; எனக்கு விபரம் தெரியறதுக்கு முன், காலமாகிட்டார், என் அப்பா. படிப்பறிவில்லாத எங்கம்மா, கஷ்டப்பட்டு என்னை வளர்த்தாங்க. நானும் முன்னேறணும்ங்ற வெறியோட தான் படிச்சேன். ஆனா, பொருளாதார கஷ்டத்துல, பிளஸ் 2க்கு மேல படிக்க முடியல.
''ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ்ல வேலைக்குப் போனேன். என் அம்மாவோட முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்க, துடிச்சேன்; ஆனா, உழைச்சு உழைச்சு உடம்பு தேய்ஞ்சதும் இல்லாம, நான் படிச்சு, பெரிய ஆளா வர முடியலங்கற கவலையில போய் சேர்ந்துட்டாங்க, எங்கம்மா.
''அந்த துக்கத்தில இருந்து நான் மீண்டு வர ரொம்ப நாள் ஆச்சு. இதற்கிடையே, என் வேலைத் திறமைய பாத்து, மேனேஜரா நியமிச்சார், டிபார்ட்மென்ட் ஸ்டோர் முதலாளி.
''அங்க அடிக்கடி வந்த ஒரு பணக்கார பெண், என்னை விரும்ப ஆரம்பிச்சா... 'இதெல்லாம் சரி வராது... நான் ஏழை; நீ பணக்காரி'ன்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்; கேட்காம, 'நான், உங்கள மனசார விரும்புறேன்'னு வற்புறுத்தி, என் மனச கரைச்சா. நானும், அவளை தீவிரமா காதலிச்சேன். அவ இல்லாம, என்னால உயிர் வாழ முடியாதுங்குற நிலைமைக்கு வந்தேன்.
''இந்நிலையில், அவ, எங்க காதல தன் அப்பா கிட்ட சொல்லியிருக்கா. அவர் ஒத்துக்காம, எங்க ரெண்டு பேருக்கும் உள்ள சமூக, பொருளாதார நிலையை புரிய வச்சுருக்கார். அதன்பின், என்னை சந்திச்சு, 'என்னை மறந்துடுங்க சரவணன்... என் ஸ்டேட்டசுக்கு உங்கள கல்யாணம் செய்தா ஒத்து வராது'ன்னு சொல்லிட்டு போயிட்டா.
''அப்படியே ஆடிப் போயிட்டேன்; அதிர்ச்சியில் கடையிலேயே மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அதுக்கப்புறம், நான் அங்க வேலைக்குப் போகல.
''என் ரூமிலேயே மூணு நாளா, கூரையை வெறிச்சுப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். இந்த உலகத்துல வாழப் பிடிக்கல; தற்கொலை செய்துக்கலாம்ன்னு தோணுச்சு. இந்நிலையில தான், அன்னைக்கு, பக்கத்துல இருக்கிற ஓட்டல்ல இட்லி சாப்பிட்டுட்டு, ஓட்டல் வாசல்ல நின்னு, போற வர்றவங்கள வேடிக்கை பாத்துட்டு இருந்தேன். அப்போ தான், நீங்க அந்த ஓட்டலுக்கு வந்தீங்க. ஒரு பெண் தன்னோட, மூணு குழந்தைகளோட உங்க கிட்ட வந்து பசிக்குதுன்னு பிச்சை கேட்டா.
''அவங்க நாலு பேருக்கும் டிபன் வாங்கிக் கொடுத்து சாப்பிடச் சொன்னீங்க. என் மனசுல, ஏதோ ஒன்று தோன்ற, உங்களுக்கு தெரியாம, உங்களையும், அந்த குழந்தைகளையும் மொபைல்ல வீடியோ எடுத்தேன்.
''சாப்பிட்டதும் அந்த குழந்தைங்க முகத்தில தெரிஞ்ச திருப்தி... உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுட்டுப் போன அந்த பெண்... அப்பத்தான், என் மனசுல ஒரு பொறி தட்டியது. நாம ஏன் ஆதரவற்றோர் இல்லம் ஆரம்பிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அந்த எண்ணத்துக்கு வலுச் சேர்க்க, அப்பப்ப, நான் எடுத்த அந்த வீடியோவ மொபைல்ல பார்த்தேன்.
''ஸ்கூல்ல என் கூட படிச்ச, வசதியான நண்பர்கள்கிட்ட என் எண்ணத்தை சொல்ல, அவங்களும் உதவி செய்ய முன் வந்தாங்க. ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுக்க, அவங்க உதவியாலயும், என்னோட விடா முயற்சியாலயும், 'டொனேஷன்ஸ்' வர ஆரம்பிச்சிருக்கு. இப்ப, இங்க பத்துப் பசங்க தான் இருக்காங்க; அவங்களுக்கு சாப்பாடு போட்டு, துணி வாங்கிக் கொடுத்து, படிக்க வைச்சு... ஏதோ, என்னால முடிஞ்சத செய்ய ஆரம்பிச்சிருக்கேன்.
''வெளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து, அதுல வர்ற வருமானத்தை, என் பங்கு பணமா இதுல போடுறேன். இன்னும் இதை பெரிசாக்கி, நிறைய ஏழைக் குழந்தைங்கள படிக்க வைச்சு, பெரிய ஆளாக்கணும்கறது என்னோட லட்சியம். ஆண்டவன் அருளாலயும், உங்க ஆசீர்வாதத்தாலயும் இதெல்லாம் நடக்கணும்...'' என்றான் உணர்ச்சியுடன்!
கண் கலங்க, அவன் கைகளைப் பற்றி, ''இவ்வளவு பெரிய காரியத்தை நீ செய்துட்டு, ஏதோ, நான் நல்ல காரியம் செய்யற மாதிரி என் பெயர், என் போட்டோவ போட்டிருக்கேயேப்பா... '' என்றார், உணர்ச்சிவசப்பட்டவராய்!
''சார், அன்னிக்கு எனக்கு இருந்த மனநிலையில், உங்க செயல் தான், ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழி காட்டியது. உங்களால தான், நான், இன்னைக்கு உயிரோடு இருக்கேன்,'' என்றான், உணர்ச்சிபெருக்குடன்!
அவனை வாழ்த்தி, வெளியே வந்த அருணாசலம் மனதில், இனம் புரியாத ஒரு உணர்வு!
எதேச்சையாக செய்து, மறந்து விட்ட சிறு தர்மத்துக்கு, இத்தனை பெரிய பலனா என்று வியந்தபடியே சென்றார்.
வெ.ராஜா ராமன்
வயது: 52
சொந்த ஊர்: சென்னை.
படிப்பு: பி.எஸ்.சி., கணிதம். மத்திய அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய சிறுகதை மற்றும் நகைச்சுவை துணுக்குகள், தமிழின் அனைத்து வார, மாத இதழ்களில் வெளியாகி உள்ளன. டி.வி.ஆர்., சிறுகதை போட்டியில் பரிசு பெறுவது இதுவே முதல் முறை!

