
* ஆ.ராகேஷ், திருப்பூர்: என் நண்பர் பட்டதாரி; 'மாதச் சம்பள வேலை வேண்டாம்; விவசாயத்தில் ஈடுபடப் போகிறேன்...' என்கிறார். அவர் முடிவு சரிதானா?
சரிதான்; வரவேற்கிறேன்! எல்லா விவசாயிகளையும் போல செக்குமாடு மாதிரி செயல்படாமல், இயற்கை உரம், மருந்து என மாற்றி, பயிர் செய்தால், அதிக விளைச்சல் கிடைக்கும். இவ்வகை தானியங்களையும், காய், கனிகளையும் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர் மக்கள்!
ஆர். ஜோயல், திருவள்ளுவர்: ஒரு, 'மேக் - அப்' மேனால் எப்படி பல கோடிகளைப் போட்டு சினிமா தயாரிக்க முடிகிறது?
இண்டஸ்டிரியில் நன்கு அறிமுகமான நபர் எவராக இருந்தாலும், பெரிய நடிகர் மற்றும் டைரக்டரின் கால்ஷீட்டைப் பெற்று விட்டால், கோடிகளைக் கடனாகக் கொடுக்க, தயாராக உள்ளனர், சேட்டுகள். சரத்குமாரின், திவான் கமல்ஹாசனின், பம்மல் கே. சம்மந்தம் மற்றும் பஞ்சதந்திரம் போன்ற படங்களை தயாரித்த தேனப்பன், சினிமாக்காரர்களுக்கு சாப்பாடு பரிமாறுபவராக இருந்து, புரொடக் ஷன் மானேஜராகி, பின் தயாரிப்பாளர் ஆனவர் தான்!
ஆர். ரவி, தூத்துக்குடி: விளையாட்டு தொடர்பான கேள்விகளே உங்களுக்கு வருவதில்லையா? அது சம்பந்தப்பட்ட பதில் எதுவுமே தருவதில்லையே...
தெரியாத சப்ஜெக்டுகளில் மூக்கை நுழைப்பதில்லை; இந்தியாவின் குக்கிராமங் களில் கூட பாப்புலராக உள்ளது, கிரிக்கெட். உண்மையைச் சொல்கிறேன்... கிரிக்கெட் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது! இதைப் போலவே மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வமில்லை!
ஆர்.பிரகாசம், பெங்களூரு: 'ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்' - - 'பிரீலான்ஸர்' என்பதற்கு என்ன அர்த்தம்?
இந்தப் பத்திரிகைக்குத் தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லாத பத்திரிகையாளர்; எந்தப் பத்திரிகையிலும் மாதச் சம்பளம் வாங்காதவர்; எல்லா பத்திரிகைகளுக்கும் எழுதி சம்பாதிப்பவர்... உதாரணமாக, சுஜாதா, சின்னக் குத்தூசி, போன்றவர்களைச் சொல்லலாம்!
* எம்.கவிதா, சென்னை: ஜோதிடம், வாஸ்து, நியூமராலஜி - எவ்வளவு தூரம் நம்பலாம்?
காந்தி நகர், விருதுநகரிலிருந்து, ஆர்.சபாபதி என்ற வாசகர் எழுதிய கேள்வி இதோ... 'நான் பிறந்த போது எனக்கு ஜாதகம் கணித்தவர், '67 வயதில் மரணம்' எனக் குறிப்பிட்டுள்ளார்; எனக்கு, இப்போது, 69 வயதாகி விட்டது... உயிருடன், திடகாத்திரமாக உள்ளேன். ஜோதிடம் பொய்த்து விட்டதே... உங்கள் பதில் என்ன...' எனக் கேட்டுள்ளார். உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா?
என்.துளசிதாஸ், மதுரை: உங்கள் ஆலோசனைகளைப் படித்தபின், சிக்கனமாக இருக்கிறேன்; தாராள செலவை நிறுத்தி விட்டேன். உடன் இருப்பவர்கள் என்னை, 'கஞ்சன்' என அழைக்க ஆரம்பித்து விட்டனரே...
அழைத்தால் அழைத்து விட்டுப் போகட்டும்; அதனால், அஞ்சு காசு கூட நஷ்டமில்லை. வங்கியில் சேமிப்பும், பர்சில் பைசாவும் இல்லை எனில் இவர்கள் மதிக்கவும், உதவவும் மாட்டார்கள்; கஞ்சனாகவே இருங்கள்!

