
'பட்டம் பெற்ற டாக்டர்கள் கிராமங்களுக்குச் சென்று குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளாவது பணியாற்ற வேண்டும்; அவர்களிடம் சேவை மனப்பான்மை வளர வேண்டும்...' என்றெல்லாம் பதவியில் இருப்பவர்கள் அவ்வப்போது அறிக்கை விடுவர்; மருத்துவ மாநாடுகள் மற்றும் பட்டமளிப்பு விழாக்களில் பேசுவர்.
அதோடு நில்லாமல் கிராமங்களில் உள்ள, 'பிரைமரி ஹெல்த் சென்டரில்' இரண்டு ஆண்டுகள் வேலை செய்தால், மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது சில, பல சலுகைகளையும் அளிக்கின்றனர்.
சிலர் இந்த சலுகைகளைப் பெறுவதற்காக, 'பிரைமரி ஹெல்த் சென்டர்'களில் (பி.எச்.சி.,) சேர்ந்து, அருகே உள்ள நகரத்தில் சொந்த பிராக்டீஸ் செய்து, வாரம் ஒரு முறை, மாதம் இரண்டு முறை என, இங்கு வந்து செல்வதும் நடக்கத் தான் செய்கிறது. பல, 'பி.எச்.சி.,'க்கள் மூடப்பட்டே கிடக்கின்றன.
இதற்கான காரண காரியங்களை அலசினால், இரு தரப்பினரின் வாதமும் நியாயமாகவே படும்!
சரி... விஷயத்திற்கு வருவோம்...
அது, தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியில், கடற்கரையை ஒட்டிய, நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத ஒரு ஊர்; அங்கு, குடும்பப் பொருளாதாரத்தைப் பெருக்க, அரபு நாடுகளுக்கு சென்று விட்டனர், பல குடும்பத்து ஆண்கள்.
இப்படிப்பட்ட ஊரில் கிளினிக் வைத்துள்ள டாக்டர் ஒருவர் என்னைக் காண வந்தார்; அந்துமணியின் அதி தீவிர வாசகர் என, தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
ஏதேதோ நாட்டு நடப்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்... அவரது பேச்சை உன்னிப்பாகக் கவனித்ததில், மிக அழுத்தம் திருத்தமாக, நாம் சாதாரணமாக பயன்படுத்தும் ஆங்கிலச் சொல்லைக் கூட தூய தமிழில் கூறிக் கொண்டிருந்தார்.
'டாக்டருக்கு தமிழ் பற்று அதிகம் போல...' என்றேன்.
உடனே, 'பற்றுதல் உண்டு தான்... ஆனால், சில வார்த்தைகளை நீங்கள் ஆங்கிலத்தில் உச்சரிப்பதைக் கண்டு (பாருங்கய்யா கிண்டலை) சங்கோஜப்பட்டு, ஆங்கிலத்தைத் தவிர்த்து விட்டேன். காரணம், நான், +2 வரை தமிழ் மீடியத்தில் படித்தேன்... மருத்துவக் கல்லூரியிலும், என்னைப் போன்ற மாணவர்கள் தான்... அதனால், ஆங்கிலத்தில் பேசும் கலையை வளர்த்துக் கொள்ள முடியவில்லை.
'உடன் படித்தவர்கள் மற்றும் எங்களிடம் வரும் நோயாளிகளிடம் தைரியமாக ஆங்கிலத்தில் பேசுவோம்; அறிமுகமில்லாத நபர், ஆங்கிலம் தெரிந்தவர் என்றால் பேசாமல் தவிர்த்து விடுவோம் அல்லது கர்வம் கொண்டவர் போல் முகத்தை வைத்துக் கொள்வோம். அதனால், அவர்கள் நம்மை அண்டமாட்டார்கள். ஆனால், உண்மையிலேயே எங்கள் மனம், 'டக்டக்' என்று தாழ்வு மனப்பான்மையால் அடித்துக் கொள்ளும்...' என்றார்.
'அடடா... ஒவ்வொரு மனிதருள்ளும், அவர் எவ்வளவு உயர் படிப்பு படித்திருந்தாலும், எவ்வளவு குறைகள் புதைந்துள்ளன என்பதை எண்ணி வியந்து, டாக்டரின், 'மூடை' மாற்ற, 'ஏன் டாக்டர்... உங்களைப் போன்றவங்க எல்லாம் டவுனில் வேலை பாக்க ஆசைப்படும் போது, நீங்க ஏன், குக்கிராமத்தைத் தேர்ந்தெடுத்தீங்க... நகர வாழ்க்கை உங்களுக்குப் பிடிக்கலயா இல்ல நகரில் வேலை கிடைக்கலயா இல்ல சம்பளம் பத்தலயா?' எனக் கேட்டேன்.
சிறிது நேர யோசனைக்குப் பின், 'எல்லாமும் தான்... எல்லாமும்
இல்லை தான்...' என புதிர்
போட்டு அவரே தொடர்ந்தார்...
'குடும்ப சூழ்நிலை காரணமாகத் தான், குக்கிராமமான என் சொந்த ஊரில் செட்டில் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது. என் அண்ணன்கள் தம் வேலை நிமித்தம் வெளி மாநிலங்களில் செட்டிலாகி விட்டனர். பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் உள்ள என் பெற்றோர், ஆதரவற்றவர்கள் போல, 'பீல்' செய்ய ஆரம்பித்தனர். அதனால், என் சொந்த ஊரில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ள ஒரு நகரத்தில் வேலை பார்த்து வந்த நான், இங்கே வர வேண்டியதாயிற்று...
'படிப்பு முடிந்த உடன், ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தேன்; ஒரு வருஷத்திற்கு பின், எட்டாயிரம் ரூபாய் கொடுத்தனர். இரண்டு வருஷம் முடிந்த பின், 12 ஆயிரம் ரூபாய்... மூணு வருஷத்திற்கு பின்னர் வேறு ஒரு மருத்துவமனையில், 15 ஆயிரம் ரூபாய். இந்நிலையில் தான் சொந்த ஊரில், 'கிளினிக்' ஆரம்பித்தேன். ஊரில் ஏற்கனவே இரண்டு, மூன்று டாக்டர்கள் உண்டு... இவை போக, கருக்கலைப்பு, பிரசவம் பார்க்க மருத்துவச்சியர் மற்றும் நர்சுகளாக இருந்து இப்போது, 'அன் அபீஷியல்' ஆக மேற்படி வேலை செய்பவர்களும் உண்டு.
'அதிகமாக நான் பணம் வாங்குவது கிடையாது. சாதாரண காய்ச்சலுக்கு, 50 அல்லது 10-0 ரூபாய்; பிரசவங்களுக்கு, 1,000 முதல், 1,500 ரூபாய் வரையிலும், கருக்கலைப்புக்கு, அதன் தன்மைக்கேற்ப, மூவாயிரம் முதல், ஐயாயிரம் ரூபாய் வரையிலும் என, மாதம், 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது... இது போக, 'லேப்' வருமானம், பார்மசூடிக்கல் கம்பெனிக்காரர்கள் தரும், 12 சதவீத கமிஷன் என, மேல் வரும்படியும் வருகிறது...' என்றார்.
'அதென்ன டாக்டர் கருக்கலைப்பின், 'தன்மை'யைப் பொறுத்து, பீஸ் வசூலிப்பதாக சொல்றீங்க... எதை வச்சு, அதன், 'தன்மை'யை பிரிக்கிறீங்க...' என்று கேட்டேன்.
லேசாக புன்முறுவல் பூத்தவர், சொல்வதா, வேண்டாமா என, ஒரு கணம் தயங்குவது தெரிந்தது... பின், 'எங்களது நோயாளிகளின் ரகசியங்களை வெளியே சொல்வது தர்மம் ஆகாது... இருப்பினும், உங்களை வெளியாளாகக் கருதாமல் சொல்கிறேன்... கல்யாணமாகாமல் கருவுற்று வரும் பெண்களுக்கும், கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், கள்ளத் தொடர்பால் கருவுற்று வரும் பெண்களுக்கும் கொஞ்சம் அதிகமாக வசூலிக்கிறேன்... அதிகமாகக் கட்டணம் கேட்டால், இவர்கள் வேறு டாக்டர்களை நாடிச் சென்று விடுவர்...
'கருக்கலைப்பு செய்வதையே பாவமாகக் கருதுகிறேன்... இந்நிலையில், இப்படிப்பட்ட கேஸ்கள் வேறு... சில முற்றிய கேஸ்களில், கருவின் உறுப்புகள், 'டெவலப்' ஆகி இருக்கும். அவற்றை பிய்த்து எறியும் போது, மனம் வேதனையில் அமிழும்... பின், நாலு நாட்களுக்கு சரியாக சாப்பிடக் கூட முடியாது...' என்றும், இன்னும் அவர் துறையில் உள்ள பல வினோதங்களையும் கூறினார்.
நகர வாழ்க்கையே சொர்க்கம் எனக் கருதி, 10,000 - 15,000 ரூபாய் சம்பளம் வாங்கி, 'நரக' வாழ்க்கையில் உழலும் இளம் டாக்டர்களே... கிராமங்களை நோக்கி ஓடுங்கள்... உயிர் காக்கும் மகத்தான சேவை உங்களுடையது... அத்துடன், கை நிறைய காசும் கிடைக்கும்.
எங்கே கிளம்பிட்டீங்க... தோதான கிராமத்தைத் தேடத்தானே?

