
'பம்பரக் கண்ணாலே... ஜிகு ஜிகு ஜிகு ஜியாலங்கடி ஜிய்யாலோ... ஹலோ மை டியர் ராமி...' என, சந்திரபாபு பாடிய பாடல்கள் என்றாலே, மற்ற பாடல்களில் இருந்து வேறுபட்டு, ஆங்கில வார்த்தைகள் கலந்து, மேற்கத்திய பாணியில், துள்ளல் இசை கலந்திருக்கும் என, தனி முத்திரை விழுந்திருந்த காலக்கட்டம் அது!
கண்ணதாசன் தயாரித்த, கவலை இல்லாத மனிதன் என்ற படத்தின் பாடல் கம்போசிங்கின் போது, எம்.எஸ்.வி.,யிடம், 'எனக்கு ரொம்ப ஷேமா இருக்குடா விஸ்வநாதா... எனக்கு இந்தப் படத்துல டப்பாங்குத்து பாட்டெல்லாம் வேணாம்; என் கேரக்டருக்குத் தகுந்த மாதிரி, ஒரு தத்துவப் பாடல பிரமாதமா போட்டுக் குடு...' என்றார், சந்திரபாபு.
அதற்கு, எம்.எஸ்.வி., 'ஆமா... நீ ஆடுற ஆட்டத்துக்கு இது போதும்; பேசாம இருடா...' என பதில் அளிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில், சந்திரபாபுவுக்காக, ஒரு தத்துவப் பாடலைப் போட்டுக் கொடுக்க ஒப்புக் கொண்டார்,
எம்.எஸ்.வி.,
இந்நிலையில், கண்ணதாசனின் நெருங்கிய நண்பரான, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சிறுவயதிலேயே திடீரென மரணமடைய, மிகவும் மனம் உடைந்து போனார், கண்ணதாசன். அவரை தேற்றும் விதமாக, 'பட்டுக்கோட்டை ஒரு பெரிய மேதை; நல்ல புகழோடு இருக்கும்போதே மறைந்து விட்டார். இப்ப, அவர் போயிட்டாரு; நாம போக வேண்டிய நாளும் வரும்; ஆனால், நம்ம மறைவுக்குப் பின் எல்லாரும் வருந்தி அழ வேண்டும்...' என்று கண்ணதாசனிடம், சந்திரபாபு கூற, அங்கே, ஓர் அருமையான தத்துவப் பாடல் பிறந்தது, கவலை இல்லாத மனிதன் படத்துக்காக!
அது:
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும்போதும் அழுகின்றாய்
ஒருநாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே...
இரவின் கண்ணீர்
பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர்
மழையென சொல்வார்
இயற்கை அழுதால்
உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால்
இயற்கை சிரிக்கும்...
இப்பாடல் உருவான பின்னணியில், இப்படி ஒரு சோகமான சம்பவம் இருந்தாலும், பாடல் பதிவான பின்னணியிலோ, சுவையான சம்பவங்கள் நிகழ்ந்தன.
பாடல் பதிவுகளின் போது, தன் இஷ்டத்துக்குப் பாட நினைப்பார், சந்திரபாபு; ஆனால், எம்.எஸ்.வி.,யிடம் அந்த எண்ணம் பலிக்காது.
அன்றும் அப்படித்தான... பிறக்கும் போதும் அழுகின்றான்... பாடலை எப்படி பாட வேண்டும் என்பதை, சந்திரபாபுவுக்கு சொல்லி, அதன்படி பாடல் பதிவைத் துவங்கினார், எம்.எஸ்.வி.,
ஆனால், அவர் எதிர்பார்த்த உணர்வுகளோடு, சந்திரபாபுவுக்கு பாட வரவில்லை.
அப்போதெல்லாம், ஒரே டேக்கில் முழுப் பாடலையும் பாட வேண்டும். நேரம் ஆகிக் கொண்டே இருந்து. திணறிய சந்திரபாபு, டென்ஷனில், தன் கோட்டைக் கழற்றினார். முதல், ரீ டேக்கில் தன் மேல் சட்டையைக் கழற்றியவர், இரண்டாவது ரீ டேக்கில், தன் பேன்ட்டைக் கழட்டி வீசினார். அப்போதும், அவரால், எம்.எஸ்.வி., சொன்ன பாவத்தில் பாடமுடியவில்லை; டென்ஷனில் வியர்த்துக் கொட்டியது.
'டேய்... இந்தப் பாட்டுக்கு நீ லாயக்கு இல்ல...' என்று எம்.எஸ்.வி., சொல்ல, தன் பனியனைக் கழற்றி எறிந்தார். வெறும் கால் சட்டையோடு, அடுத்த டேக்குக்குப் போனார்.
அதுவும் சரியாக வரவில்லை என்றதும், 'என்னால் பாட முடியல...' என, சத்தமாகக் கூறி, கால்சட்டையோடு, 'விறுவிறு'வென கோபமாக வெளியேறி, காரை எடுத்து, வேகமாகக் கிளம்பினார்.
நண்பன் கோபித்துக் கொண்டு போகிறானே என, எம்.எஸ்.வி.,யும் தன் காரில், அவரை பின் தொடர்ந்தார். சந்திரபாபுவின் கார், ஒரு கிறிஸ்துவ ஆசிரம வாசலில் சென்று நின்றது. அவரை சமாதானப்படுத்தி, இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து, மீண்டும் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து, தான் நினைத்த மாதிரி அவரை வெற்றிகரமாகப் பாட வைத்தார்,
எம்.எஸ்.வி.,
மேடையில், திரை இசை கலைஞர்கள் கச்சேரி செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள், விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஜோடி தான். ஒருமுறை, அவர்கள் மும்பைக்கு கச்சேரி செய்யச் சென்றனர். டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.லீலா, சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோருடன், சந்திரபாபுவும் சென்றிருந்தார். பிரமாண்டமான ஹாலில், கூட்டம் நிரம்பி வழிந்தது. நவுஷத் அலி,
எஸ்.டி.பர்மன்,
ஆர்.டி.பர்மன் மற்றும் சங்கர் ஜெய்கிஷன் போன்ற பிரபலங்கள் அமர்ந்து, கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
சந்திரபாபு பாடும் முறை வந்தது; தன் வழக்கமான பாடல்கள் ஒன்றிரண்டைப் பாடியவர், பிறக்கும்போதும் அழுகின்றாய்... என்ற பாடலையும் பாடினார்.
பாடி முடித்ததும் கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது. மீண்டும் அப்பாடலை பாடச் சொல்லி, ரசிகர்கள் வற்புறுத்தவே, சந்தோஷமாக, திரும்பவும் அப்பாடலை பாடினார். மீண்டும் கைத்தட்டல்; திரும்பவும் அப்பாடலை பாடும்படி ரசிகர்களின் வேண்டுகோள்... வேறு வழியில்லாமல், மீண்டும் அப்பாடலைப் பாடினார், சந்திரபாபு.
ரசிகர்களின் ஆரவாரம் தொடர்ந்தது. நான்காவது முறையும் அப்பாடலை பாடச் சொல்லி, வற்புறுத்தத் துவங்கினர். சந்திரபாபுவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
நேரே, எம்.எஸ்.வி.,யிடம் சென்று, 'என்னடா விஸ்வநாதா... எத்தனை முறை பாடுறது... திரும்பத் திரும்ப, 'ஒன்ஸ்மோர்' கேட்டுக்கிட்டே இருக்காங்க... பெரிய தொல்லையா இருக்கு...' என்றார்.
'என்னடா செய்றது... நீ ஒரு முறையாவது கரெக்டா பாடியிருந்தா இப்படி, 'ஒன்ஸ்மோர்' கேட்க மாட்டாங்க...' என்றார், சிரித்தபடியே
எம்.எஸ்.வி.,
சந்திரபாபுவால் பதில் சொல்லமுடியவில்லை. அடுத்த பாடகர் மேடை ஏறி, வேறு பாடலைப் பாடி நிலைமையைச் சமாளித்தார்.
கடந்த, 1965ல், இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் நடந்து முடிந்திருந்த நேரம். போரில் ஜெயித்த ராணுவ வீரர்களை மகிழ்விக்க, தமிழ்த் திரையுலகில் இருந்து ஒரு குழு, யுத்தம் நடந்த எல்லைப் பகுதிக்கு கலை நிகழ்ச்சி நடத்தச் சென்றது. அக்குழுவில், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, தேவிகா, பத்மினி, ஜெயலலிதா, சந்திரபாபு, பி.பி.ஸ்ரீனிவாஸ், கண்ணதாசன்,
எம்.எஸ்.விஸ்வநாதன்,
ஏ.எல்.சீனிவாசன் மற்றும் பி.சுசீலா உள்ளிட்ட பல கலைஞர்கள் இருந்தனர். ஆடல், பாடல் என, நிகழ்ச்சி களை கட்டின.
வீரர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சொல்லி, பின், பொதுமக்களையும் உள்ளே அனுமதித்து விட்டனர். நல்ல கூட்டம்; எம்.எஸ்.வி., ஆர்கெஸ்ட்ரா வாசிக்க, பி.பி.ஸ்ரீநிவாசும், பி.சுசீலாவும் பாட ஆரம்பிக்க, 'இந்திப் பாட்டைப் பாடுங்க...' என்றொரு குரல் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அதேபோல், பல குரல்கள் எழத் துவங்கின. 'எங்கே பத்மினி... அவரை ஆடச் சொல்லுங்கள்...' என்றும் குரல்கள் எழுந்தன.
உடனே மேடையில் ஏறினார் சந்திரபாபு. மைக்கின் அருகே சென்று, 'இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் யார்... அவர் உடனே இங்கே வரவும்...' என, ஆங்கிலத்தில் சொல்ல, உடனே, மேடையில் ஏறினார், கர்னல்.
'இது தான் நீங்கள் நிகழ்ச்சி நடத்தும் லட்சணமா...' என, அவரைக் கடிந்து கொண்டார், சந்திரபாபு.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ், சென்னை.
- முகில்

