
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
என் நண்பனுக்கு, பெண் பார்த்து, திருமண நிச்சயதார்த்தத்திற்கு தேதியும் குறித்தாகி விட்டது. இந்நிலையில், திருமண வேலை விஷயமாக பைக்கில் சென்ற போது, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துச் செல்லாததால், போலீசில் மாட்டி, அபராதம் கட்ட நேர்ந்தது. உடனே, அந்த பெண் ராசி தான் இதற்கு காரணம் என, முனகினான்.
பின், வீட்டை சுத்தம் செய்ய முயன்ற போது, மாடி படியில், கால் வழுக்கி விழுந்து, 'ப்ராக்சர்' ஆனதும், 'அவள் ராசி இல்லாத அதிர்ஷ்ட கட்டை; அவளது துரதிருஷ்டம் தான் தன்னை இப்படி பாதிக்கிறது...' என, பலவாறு புலம்பி, எவ்வளவோ சொல்லியும் கேளாமல், திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டான்.
காரணத்தை கேட்டறிந்த பெண் வீட்டார், இவனது மூட நம்பிக்கையை எண்ணி எள்ளி நகையாடியதோடு, அதே தேதியில், வேறு ஒரு பையனை நிச்சயித்து, திருமணம் செய்து வைத்தனர்; தற்போது, அவர்கள், 'ஜாம் ஜாம்' என்று அனைவரும் வியக்கும்படி வாழ்ந்து வருகின்றனர்.
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதை, என் நண்பன் போன்ற அறிவிலிகள் என்று தான் உணரப் போகின்றனரோ!
— டி.கே.சுகுமார், கோவை.
வாழ நினைத்தால் வாழலாம்!
என் பக்கத்து வீட்டினர் ஏழ்மையானவர்கள். ஆனாலும், சிரமப்பட்டு, தங்களது மகனை கல்லூரியில் படிக்க வைக்கின்றனர். குடும்பச் சூழ்நிலை அறிந்து, அவனும், காலையில் வேலைக்கு சென்று, மதியத்துக்கு மேல் கல்லூரி செல்கிறான்.
இந்நிலையில், சில மாதங்களாகவே, அவன் கையில் பணப் புழக்கமும், அவனது குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாய் இருப்பதை கண்டு, வியந்து, அம்மாணவனை அழைத்து, 'என்ன வேலை செய்கிறாய்?' எனக் கேட்டேன். அவன் கூறிய பதில் ஆச்சரியமளித்தது.
அவனும், அவனது நண்பர்கள் இருவரும் சேர்ந்து, காலையில், தள்ளு வண்டியில், உளுந்து வடையும், பச்சைப்பயறு மற்றும் கொண்டைக் கடலை சுண்டல் விற்று வருவதாகவும், கொள்முதல் மற்றும் செலவு போக, மூவருக்கும் ஒரு நாளைக்கு, தலா, 600 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைப்பதாக கூறியவன், 'இதை, இன்னும் விரிவுபடுத்தவும், விடுமுறை தினங்களில் மேலும் வியாபாரத்தை பெருக்கவும் முடிவு செய்துள்ளோம்...' என்று சந்தோஷமாக கூறினான்.
அவன் வியாபாரம் செய்யும் இடத்திற்கு நானும் போனேன்... சிறிய போர்டில், 'உடலுக்கு பலம் தரும் உளுந்து வடையும், உறுதி தரும் சுண்டலும் கிடைக்கும்...' என்று எழுதியிருந்தது. மூவரும் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்தபடி இருந்தனர். அவர்களை பாராட்டி, வாழ்த்தினேன்.
பிழைக்க நினைக்கும் பிள்ளை, ஆற்றில் விழுந்தாலும், வாயில் மீனை கவ்வி, வெளியே வருவான் என்று சும்மவா சொன்னார்கள்!
— உ.குணசீலன், திருப்பூர்.
பெரியோர் வாக்கு பெருமாள் வாக்கு!
சமீபத்தில், பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்து காலியாக இருந்தும், படியில் நின்று பேசி சிரித்து, விளையாடியபடி வந்தனர், சில இளைஞர்கள். இதைப் பார்த்த ஒரு பெரியவர், 'படியில் நின்று விளையாட்டுத்தனமாக பயணம் செய்யாதீர்கள்; விளையாட்டு விபரீதமாகிவிடும். உங்கள பெத்தவங்க இதைப் பாத்தா ரொம்ப வருத்தப்படுவாங்க...' என்றார். உடனே அந்த இளைஞர்களில் ஒருவன், 'தோ பாருடா... கருத்து கந்தசாமி...' என, அவரைக் கலாய்த்தான்.
உடனே, அந்தப் பெரியவர், 'தம்பி... பஸ் மேல நாம ஏறினாலும், பஸ் நம்ம மேல ஏறினாலும், டிக்கெட் வாங்கப் போறதென்னவோ, நாம தான்...' என்று சொல்லி, இளைஞர்களுக்கு நெத்தியடி கொடுத்தார். இதை கவனித்த சக பயணிகள் கைத்தட்ட, இளைஞர்களின் முகம் சுருங்கியது. அமைதியாக, பஸ்சினுள் ஏறி, இருக்கையில் அமர்ந்தனர். பெரியவர்களின் நல்ல கருத்துகளை மதிக்காமல் நடந்தால், சில நேரங்களில், இப்படி தான் அவமானப்பட நேரிடும்.
—பா.குமரேசன், குள்ளேகவுண்டன்புதூர்

