PUBLISHED ON : நவ 05, 2017

முருகனின் ஆறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் சோலைமலை போன்ற தலங்களை நாம் அறிவோம். ஆனால், விநாயகருக்கான ஆறுபடை வீடுகள் தெரியுமா?
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநாரையூர் - பொல்லாப்பிள்ளையார்; திருவண்ணாமலை - அல்லல் போக்கும் விநாயகர், விருத்தாச்சலம் - ஆழத்துப்பிள்ளையார், திருக்கடையூர் - கள்ளவாரண பிள்ளையார், மதுரை - சித்தி விநாயகர் மற்றும் காசி - துண்டி கணபதி போன்றவை விநாயகரின் ஆறுபடை வீடுகள். இவ்வூர்களில் உள்ள சிவாலயங்களில் உள்ள விநாயகர் சன்னிதிகளையே ஆறுபடை வீடுகளாகக் கொள்கின்றனர். இதில், முதல் படை வீடான திருநாரையூரில், உளியால் செதுக்காத பிள்ளையார் உள்ளார்.
இவரை, 'பொள்ளா பிள்ளையார்' என்பர். 'பொள்ளா' என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள். இதுவே மருவி, பொல்லாப்பிள்ளையார் ஆகி விட்டது.
ஒருசமயம், வான்வழியே சென்ற தேவதத்தன் என்ற கந்தர்வன், தான் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையை கீழே போட, அது, பூமியில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச மகரிஷி மீது விழுந்தது. இதனால், தவம் கலைந்த மகரிஷி, அவனை நாரையாக பிறக்கும்படி சபித்தார். தன் சாபம் நீங்க, இத்தலத்தில் உள்ள லிங்கத்திற்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, சுயவடிவம் பெற்றான், கந்தர்வன்.
நாரை வந்து பூஜித்த தலம் என்பதால் இவ்வூர், 'திருநாரையூர்' எனப்பட்டது. சிவபெருமான், 'நாரையூர்நாதர்' என்று பெயர் பெற்றார். அத்துடன், சவுந்தரேஸ்வரர், சுயம்பிரகாசர் என்ற பெயர்களும் உண்டு.
சிவாலயமாக இருந்தாலும், இங்கு பொல்லாப் பிள்ளையாருக்கே முக்கியத்துவம். அனந்தேசர் என்ற அர்ச்சகரின் மகன், நம்பியாண்டார் நம்பி வைத்த நைவேத்யத்தை, நேரில் வந்து ஏற்றார், இங்குள்ள விநாயகர்.
இக்கோவிலில் இன்னொரு விசேஷமும் உண்டு. பொதுவாக, சிவன் கோவில்களில் சிலை வடிவில் இருக்கும் சந்திரனுக்கு பூஜை செய்வது வழக்கம். ஆனால், இங்கு, சங்கடஹர சதுர்த்தியன்று இரவில், பிரகாரத்தில் ஓரிடத்தில் வானத்திலுள்ள சந்திரனுக்காக குத்துவிளக்கு ஏற்றி, நிலாவை நோக்கி தீபாராதனை காட்டுவர். இந்த பூஜையைத் தரிசிப்போருக்கு சந்திராஷ்டம காலத்தில் ஏற்படும் பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்பது நம்பிக்கை.
பொதுவாக, சுவாமி சன்னிதி விமானத்தின் உச்சியில், ஒரு கலசம் தான் இருக்கும்; ஆனால், இங்குள்ள அர்த்த சந்திர விமானத்தில், இரண்டு கலசங்கள் உள்ளன. சிவன், அம்பிகையை தனக்குள் ஐக்கியப்படுத்தியிருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அவளுக்கும் சேர்த்து, இரண்டு கலசங்கள் அமைத்துள்ளனர். இத்தகைய அமைப்பிலுள்ள விமானத்தை தரிசிப்பது அபூர்வம்.
அதேபோன்று, சிவன் கோவில்களில் ஒரு சண்டிகேஸ்வரரே இருப்பார். ஆனால், இங்கு, மூலவர் சவுந்தரேஸ்வரருக்கு ஒருவர், பிரகாரத்தில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒருவர் என, அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரர்களை தரிசிக்கலாம்.
மேலும், பிரகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சியளிக்கின்றனர்.
சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில் செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்தில் உள்ளது, திருநாரையூர்; பேருந்து நிலையத்திலிருந்து, 1 கி.மீ., தூரத்தில் இருக்கிறது, கோவில்!
தி.செல்லப்பா

