PUBLISHED ON : ஏப் 15, 2018

சென்னை - மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகே, கல்லுாரி மாணவன் போல் தோற்றமளித்த இளைஞன் ஒருவன், தன் கையில் இருந்த பொருளை, போவோர், வருவோரிடம் காட்டியபடி இருந்தான்.
அடாது மழை பெய்தாலும், மெரினா கடற்கரையில் விடாது நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களில், வினோத்தும் ஒருவர்.
கடற்கரைக்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணியில் குடியிருக்கிறார்; 45 வயதை கடந்து விட்ட அவர், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் பணியாற்றுகிறார். இந்த இளைஞனைப் போல ஏராளமானோரை தினமும் இந்த கடற்கரையில் சந்தித்திருக்கிறார். அப்போதெல்லாம், 'இந்த இளைஞர்கள் ஏன் இது போன்ற வேலைகளை செய்கின்றனர்... கல்வியறிவு இல்லாதது தான் காரணமா அல்லது இவர்களுக்கு அரசின் சலுகைகள் சரிவர கிடைக்க வில்லையா...' என, எண்ணுவார்.
வழக்கம் போல் இன்றும், காலை, 6:30 மணிக்கு, காந்தி சிலையை கடந்த போது, அந்த இளைஞன், தன்னிடமுள்ள பொருளை விற்க முயற்சிப்பதை பார்த்து, அவன் அருகில் சென்றார்.
''இது என்னதுப்பா...'' என்றார்.
''தண்ணீரை சுத்தப்படுத்தும் கருவி சார்... இதை, வீட்டில் உள்ள குழாயில் மாட்டிட்டா போதும்... தண்ணீரில் உள்ள அழுக்குகளை வடிகட்டிடும். சமையலறை, வாஷ் பேசின், பாத்ரூம் குழாய்ல மாட்டிடலாம். ஒண்ணு வாங்கிகுங்க சார்,'' என்றான்.
அவனை சிறிது நேரம் உற்று பார்த்த வினோத், ''ஒண்ணு, எவ்வளவு...'' என்று கேட்டார்.
''நுாறு ரூபா சார்!!''
''உன் பெயர் என்னப்பா?''
''முருகன்.''
''அப்பா என்ன செய்றார்?''
''குடிநீர் வடிகால் வாரியத்தில கிளார்க்கா இருக்காரு!''
''என்ன படிச்சிருக்கே?''
''பி.ஏ., எகானமிக்ஸ்.''
''சரி, எத்தனை வைச்சிருக்கே?''
''ஒரு வாரத்துக்கு முன், பாரீசில, சேட் கடையிலேருந்து, நுாறு பீஸ் வாங்கிட்டு வந்தேன்; இது வரைக்கும், ஐஞ்சு தான் வித்திருக்குது; நீங்க ஒண்ணு வாங்கிக்குங்க சார்,'' என்றான்.
''ஒண்ணு வித்தா உனக்கு எவ்வளவு ரூபா கிடைக்கும்?''
''இருபது ரூபா சார்!''
''சரி, மொத்தமா வாங்கிக்கிறேன்,'' என்றதும், ''நெஜமாகவா...'' என்றான், முகம் மலர!
''ஆமாம்பா... எவ்வளவுன்னு சொல்லு,'' என்றார்.
''தொண்ணுத்தஞ்சு இருக்கு சார்... ஒண்ணு நுாறு ரூபான்னா, தொண்ணுத்தஞ்சுக்கு, ஒன்பதாயிரத்து, ஐந்நுாறு ரூபா,'' என்றான்.
''இதை வித்தா, உனக்கு ரெண்டாயிரம் ரூபாய் கிடைக்கும்ல...'' என்றார், வினோத்.
'' ஆமா சார்... பெட்டியில கட்டித் தந்துடட்டுமா...'' என்றான்.
சிரித்தபடியே, ''வாக்கிங் தான் வந்தேன்; ஷாப்பிங் பண்ண வரல. பணம் எடுத்துட்டு வரலப்பா... நீ, என் ஆபீஸ்க்கு வந்து இதை கொடுத்துட்டு, பணத்தை வாங்கிக்கிறாயா...'' என்றார்.
''எங்கே, எப்போ வரணும் சார்...''
''அண்ணாநகர்லயிருந்து வில்லிவாக்கம் போற ரூட்டுல, என் ஆபீஸ் இருக்கு. வந்து கொடுக்க முடியுமா...'' என்றார், அவன் முகத்தை ஆழ்ந்து கவனித்தபடி!
''நான் அந்தப் பக்கம் போனதில்ல; ஆனா, விசாரிச்சு வந்துடுவேன்; எப்போ வரணும் சார்...''
''இன்னிக்கு மதியம், ரெண்டு மணிக்கு வர முடியுமா?''
''கண்டிப்பா வந்துடறேன் சார்,'' என்றான் மகிழ்ச்சியாக!
''இது, என் விசிட்டிங் கார்டு; இதில என் அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் இருக்கு. தேவைப்பட்டால், இந்த நம்பர்ல பேசு.''
''சரிங்க சார்,'' என்றான் முருகன்.
பகல், 2:00 மணி -
தன் வேலையில் மூழ்கியிருந்தார், வினோத். 'ஏசி' ஓடும் சத்தம் தவிர, வேறு எந்த சத்தமும் இல்லை. அவரின் அறை பக்கவாட்டு சுவரில், வெளிப்புறத்தை பார்க்க வசதியாக கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது.
அதன் வழியே பார்த்தால், அலுவலகத்தின் முன் பகுதி வழியாக வருபவர்களை பார்க்க முடியும்.
தற்செயலாக, வாசலை பார்த்த வினோத்தின் கண்களில், முருகன் நிற்பது தெரிந்தது.
வாசலில் உட்கார்ந்திருந்த செக்யூரிட்டி, ''யாருப்பா என்ன வேணும்?'' என்றார்.
''வினோத் சாரைப் பாக்கணும்!''
''என்ன விஷயம்?''
''வாட்டர் பில்டர் வச்சிருக்கேன்... சாரிடம் கொடுக்கணும்...''
''இது, அரசு அலுவலகம்... இங்கெல்லாம் பொருட்களை கொண்டு வந்து விற்க கூடாது. யாரோ உன்னை ஏமாத்தியிருக்காங்க... போப்பா...'' எனக் கூறி, அவனை இழுத்துச் சென்று, வெளியே விட்டு வந்தார், செக்யூரிட்டி.
தோளில் சுமையுடனும், மனதில் சோகத்துடனும் நகர்ந்தவனுக்கு, திடீரென அவர் கொடுத்த விசிட்டிங் கார்டு ஞாபகம் வந்தது. உடனே, மொபைல் போனை எடுத்து, வினோத்திற்கு போன் செய்தான்.
''ஹலோ,'' என்ற குரல், எதிர் முனையில் கேட்டது.
''சார்... நான் முருகன்; காலையில கடற்கரைல பார்த்தீங்களே ஞாபகம் இருக்கா... வாட்டர் பியூரிபையர் வாங்கிக்கிறேன்னு சொன்னீங்க... இங்கே வந்தேன், செக்யூரிட்டி உள்ளே விட மாட்டேங்கிறார்,'' என்றான், படபடவென!
''ஓ நீயாப்பா... மறந்தே போயிட்டேன்; இப்ப, எங்கே இருக்கே... வாசல்லயா... அட, நான் முக்கிய வேலையா இருக்கேனே... நீ, ஈவினிங் வீட்டுக்கு வர முடியுமா...''
''வீடு எங்க இருக்கு சார்...''
''திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலுக்கு எதிர்த்த தெரு, சேஷகிரி பவன்னு போட்டிருக்கும்; நாலாவது மாடியில, பத்தாம் நம்பர் வீடு. வாசல்ல, செக்யூரிட்டி இருப்பார்; சொல்லிட்டு மேலே வந்துடு; எட்டு மணிக்கு வீட்ல இருப்பேன்,'' என்றார், வினோத்.
''வந்திடுறேன் சார்,'' என்றான்.
இரவு, 8:00 மணி -
திருவல்லிக்கேணி, சேஷகிரி பவனை தேடிப் பிடிக்க, அவனுக்கு சிரமமே இல்லை. வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி, ''வாட்டர் பியூரிபையர் விக்கிற பையனா... பேரு முருகனா... சார் வரச் சொன்னார்; போ,'' என, கதவை திறந்து விட்டார்.
குறுகலான படிகள் வழியாக, நான்காவது மாடியை அடைந்தான்.
'வினோத், மத்திய மனித வள அதிகாரி' என, போர்டு இருந்த கதவை தட்டினான். இளைஞன் ஒருவன் கதவை திறந்து, ''நீங்க...'' என்றான்.
''சார் வரச் சொன்னார்; வாட்டர் பியூரிபையர் வாங்கிக்கிறேன்னு சொன்னார். சார் இருக்காரா?'' என்றான், முருகன் தட்டுத்தடுமாறி!
அவனை நிற்கச் சொல்லி, வீட்டிற்குள் சென்றான், இளைஞன். சில வினாடிகளில், வெளியே வந்தார், வினோத்.
''வாப்பா, வாட்டர் பியூரிபையர் கொண்டு வந்திருக்கியா...'' என்றார்.
''கொண்டு வந்திருக்கேன்,'' என்றான் மகிழ்ச்சியாக!
அவன் பையில் இருந்து வாட்டர் பியூரிபையர் ஒன்றை எடுத்துப் பார்த்த வினோத், ''விலை எவ்வளவு சொன்னே...'' என்றார்.
''ஒண்ணு, நுாறு ரூபா சார்; தொண்ணுத்தஞ்சு இருக்கு. மொத்தம் ஒன்பதாயிரத்து, ஐநுாறு ரூபா,'' என்றான்.
''முரளி... பீரோவிலிருந்து, பத்தாயிரம் ரூபா எடுத்துட்டு வா,'' என்றார்.
'அப்பாடா ஒரே நாளில், பத்தாயிரம் ரூபா சம்பாதிக்கப் போறோம்; யோகம்டா நமக்கு... இப்படியும், ஒரு சில ஆட்கள் இருப்பதால் தான் நாட்டில மழை பெய்யுது...' என, நினைத்துக் கொண்டான் முருகன்.
''என்ன படிச்சிருக்க தம்பி?''
''பி.ஏ., எகானமிக்ஸ் சார்!''
''மார்ஜினல் யுடிலிட்டி தியரி தெரியுமா?''
''சார், நான் தமிழ் மீடியம்.''
''தமிழ் மீடியம்ன்னாலும், இது கண்டிப்பாக தெரிஞ்சிருக்கணுமேப்பா... எந்தப் பொருள்ல இருந்து கிடைக்கும் திருப்தியும், தொடர்ந்து நுகரும்போது, படிப்படியாக குறையும்ன்னு சொல்லிக் கொடுத்திருப்பாங்களே... படிக்கலயா...'' என்று அவனை கூர்ந்து பார்த்தபடி கேட்டவர், ''மேற்கொண்டு படிக்கலயா?'' என்றார்.
''இல்ல சார்!''
''ஏன் படிக்கல?''
''விருப்பம் இல்ல சார்.''
''என்ன பண்றதா உத்தேசம்... கடைசி வரைக்கும் இந்த தொழில் தானா?''
''இல்ல சார்... நல்ல வேலை கிடைக்கும் வரை, பாக்கெட் மணிக்கு இந்த தொழில் செய்யலாம்ன்னு இருக்கேன்.''
பணத்தை எடுத்து வந்த வினோத்தின் மகன், அதை, தன் தந்தையிடம் கொடுத்து, உள்ளே சென்றான்.
''எத்தனை நாளா இந்த பிசினஸ்?''
''காலேஜ் முடிஞ்சு, நாலு மாசம் ஆச்சு சார்... சும்மா தான் இருந்தேன்; பக்கத்து வீட்டில இருக்கிற ஒருத்தர் தான், இந்த பிசினஸ் பத்தி சொன்னார்,'' என்றான், தடுமாறியபடி!
''இந்த பொருட்கள வாங்கி எத்தனை நாட்கள் ஆச்சு?''
''ஒரு வாரம் ஆச்சு; சேட்டுட்ட கடனுக்கு வாங்கிட்டு வந்தேன்; சேட்டுக்கு, எட்டாயிரம் ரூபாய் கொடுக்கணும்; எனக்கு, ரெண்டாயிரம் கிடைக்கும்.''
''ஒரு நாளைக்கு, பத்து வாட்டர் பியூரிபையர் விற்கிறேன்னு வைச்சுக்குவோம்... ஒரு மாசத்திற்கு, 150 விற்பாய்... அப்படின்னா, உனக்கு, மாசம், மூவாயிரம் ரூபாய் கிடைக்கும்; இது போதுமா?''
''போதாது தான்... அம்மாவுக்கு உடம்புக்கு முடியல; அப்பாவுக்கும் சம்பளம் பத்தல. தங்கச்சிய வேற படிக்க வைக்கிறாங்க. செலவு அதிகமாக இருக்கு; வீட்டுல சும்மா இருக்க முடியல. ஏதோ நம்மளால முடிஞ்சத சம்பாதிப்போமேன்னு தான், இதில இறங்கினேன்... காலையில, ஐஞ்சு மணிக்கு கிளம்பி, மெரினா பீச், மதியம் பெசன்ட் நகர் பீச்சுன்னு வித்துட்டு, ராத்திரி, கொட்டிவாக்கத்துல இருக்கிற வீட்டுக்கு போயிடுவேன்,'' என்றான்.
''இதை விற்க, நீ எத்தனை மணி நேரம் செலவிடுறேன்னு தெரியுமா... ஒரு நாளைக்கு, பத்து மணி நேரம்ன்னு வைச்சுக்கிட்டா கூட, ஒரு மாசத்திற்கு, 300 மணி நேரம்... அதாவது, மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்க, முன்னுாறு மணி நேரம் செலவிடுற... இது உனக்கு மட்டுமல்ல, நம் நாட்டுக்கே நஷ்டம்,'' என்றார், வினோத்.
தலையை ஆட்டினான் முருகன்.
''ஒன்றாம் வகுப்பிலிருந்து, பி.ஏ., முடிக்கும் வரை, உனக்கு, உன் பெற்றோர், குறைந்தபட்சம், மூன்று லட்ச ரூபா செலவழிச்சுருப்பாங்க... அந்த பணத்தை நீ இப்படி சம்பாதிக்க, இன்னும் பத்து வருஷம் உழைக்கணும். இதையே நீ, நல்ல உத்யோகத்திற்கு போய் சம்பாதிக்கத் துவங்கினால், சில மாசங்கள்ல உன் படிப்புக்கான செலவு தொகைய சம்பாதிச்சுடலாம். அதற்கு தேவை, முயற்சி தான்,'' என்றார்.
''புரியல சார்...''
''நீ இப்போ, ஒரு வாட்டர் பியூரிபையர் விற்க, அரை மணி நேரம் எடுத்துக்கிறேன்னு வச்சுக்குவோம். அதற்கு பதில், ஒரு நாளைக்கு, நான்கு மணி நேரம் கவனமாக படிச்சா போதும், நல்ல வேலைக்கு போயிடலாம்; லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்,'' என, சொல்லி நிறுத்தினார் வினோத்.
''அதெல்லாம் சரி சார்... வாட்டர் பியூரிபையர்,'' என, இழுத்தான் முருகன்.
''பயப்படாதே வாங்கிக்கிறேன்; எனக்கு, ஒன்றிரண்டு தான் வேணும். உனக்காக, 95 பீஸையும் வாங்கிக்கிறேன். ஆனால், நீ திருந்தணும்... உன் போன்ற இளைஞர்கள், இது போன்ற குறைந்த சம்பாத்தியம் தரும் வேலைகள்ல ஈடுபடக் கூடாது; அதனால், உன் வீட்டிற்கும், நாட்டிற்கும் எந்த லாபமும் இல்ல.
''உன்கிட்ட முயற்சியும், கடின உழைப்பும் இருக்கு; அதேநேரம், தயக்கமும் அதிகமாக இருக்கு; இருபது ரூபா லாபத்திற்காக, பத்து மணி நேரம் உழைக்க தயாரா இருக்கும் நீ, லட்சக்கணக்கில் சம்பாதிக்க, சில மணி நேரங்கள சரியாக பயன்படுத்தினால் போதுமேப்பா...'' என்றார்.
அவர் கண்களையே பார்த்தான், முருகன்.
''நீ விற்கிற, வாட்டர் பியூரிபையரை, ஊனமுற்றோர், முதியோர், கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புவோர், கல்லாதோர் போன்றவர்கள் தான் செய்யணும். நீ படித்தவன்; உன்னைப் போன்ற இளைஞர்கள் தான் இந்தியாவின் பலம்...
''இளைஞர்கள் தான் வீட்டையும், நாட்டையும் முன்னேற்ற, அனுதினமும் முயற்சிக்கணும். அப்படி இல்லாம, சீனாவில குப்பை போல தயாரித்து கொட்டப்படும் பொருட்களை வாங்கி விற்கவா நீ பட்டப்படிப்பு படிச்சே...
''உன் வயசில தான், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தை ஏற்படுத்தினான், மார்க் சுகர்பெர்க்; நம் இளைஞர்கள் அந்த இணையதளத்தில அக்கவுன்ட் வச்சு, தேவையில்லாத அரட்டை அடிச்சிட்டு, காலத்தையும், பொழுதையும் வீணா கழிக்கிறாங்க,'' என்றார், சிறிது ஆவேசமாக!
முருகன் மூளையில், புதிய செல்கள் உற்பத்தியாயின.
பணத்தை எடுத்து முருகன் கையில் கொடுத்தவர், ''சேட்டிடம், எட்டாயிரம் ரூபாயை கொடுத்துட்டு, மீதியை நீயே வைச்சுக்க. போட்டித் தேர்வுகளுக்காக ஏராளமான புத்தகங்கள் வந்திருக்கு; அவற்றை வாங்கிப் படி. தேர்வுகளை எழுது; நல்ல வேலைக்கு போ; அப்போது தெரியும், என் வார்த்தையின் மதிப்பு,'' என்றார்.
தெளிந்த மன நிலையில் எழுந்த முருகன், ''சார்... என் அறிவுக்கு இதெல்லாம் இதுவரை தட்டுப்படல; யாரும் இப்படி, புரியும்படி சொல்லவும் இல்ல. எனக்கு இந்த பணம் வேணாம்; இது போன்று, பல ஆயிரங்களை சம்பாதிக்கும் மன திடம் இப்போ எனக்கு வந்துட்டது. இனிமேல், இந்த சாதாரண தொழிலை செய்ய மாட்டேன்; வர்றேன்,'' என, கும்பிட்டு, வாட்டர் பியூரிபையர்கள் இருந்த பையை தோளில் மாட்டி, 'விடுவிடு'வென, படிகளில் இறங்கி, மின்னலென வெளியேறினான்.
இப்போது அவனுக்கு, அந்த கருவிகள் இருந்த பை, மிகவும் கனத்துப் போயிருந்தன. எப்போது அவற்றை சேட்டிடம் திருப்பிக் கொடுப்போம் என, இருந்தது.
- ஏ.மீனாட்சி சுந்தரம்
