
தலை சிறந்த குருவான, கிருஷ்ணானந்தர் என்பவரின் சீடரும், மகாவிஷ்ணுவிடம் எல்லையற்ற பக்தி கொண்டவரும், ஞானம், பக்தி, வைராக்கியம் எனும் மூன்றிலும் முன்னணியில் இருப்பவர், அக்ரஜி. காசி மாநகரில் வாழ்ந்தவர்.
அக்ரஜி நினைத்தால் போதும், பகவான் நேரில் வந்து தரிசனம் அளிப்பார்.
ஒருசமயம், காசியில் பெரும் பஞ்சம் வந்து, ஏராளமானோர் இறந்தனர். அப்போது, ஒரு பெண்மணி பசி தாங்காமல், தன் கைக்குழந்தையைக் கரையில் கிடத்தி விட்டு, கங்கையில் விழுந்து இறந்து போனாள்.
சற்று நேரத்தில் கங்கையில் நீராட வந்த அக்ரஜி, கரையில் யாருமில்லாமல் அழுதபடி இருந்த குழந்தையைப் பார்த்தார்; குழந்தைக்கு, நாபாஜி என்று பெயர் சூட்டி, வளர்த்து வந்தார்.
வளர்ப்பு தந்தையான அக்ரஜியை, தன் குருவாக ஏற்று, அவரிடமிருந்து, பல கலைகளையும் கற்றுக் கொண்டார், நாபாஜி.
சில காலத்துக்கு பின் ஒருநாள், பூஜை செய்ய ஆரம்பித்தார், அக்ரஜி; அறை வாசலில், பாதுகாவலாக நின்றிருந்தார், நாபாஜி. நெடுநேரமாகியும் பகவான் காட்சியளிக்கவில்லை.
காவலுக்கு நின்றிருந்த நாபாஜி, 'குருநாதா, கடலில் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அக்கப்பலின் தலைவன், பகவானிடம் உள்ளம் உருக வேண்டினான். கப்பலையும், அதிலுள்ள மக்கள் மற்றும் பொருட்களையும் காப்பாற்ற, பகவான் அங்கிருக்கிறார். அதனால் தான் வரத் தாமதமாகிறது...' என்றார்.
அவர் சொல்லி முடித்த சில விநாடிகளில், ஈர ஆடையுடன், அக்ரஜி எதிரில் தண்ணீர் சொட்டச் சொட்டக் காட்சி அளித்தார், பகவான்.
காட்சி கொடுத்தது மட்டுமல்ல, சீடர் நாபாஜி சொன்னதையே சொல்லி, அருள்புரிந்து மறைந்தார், பகவான்.
உள்ளம் உருகினார், அக்ரஜி.
'நாபாஜி, தெய்வத்தை நேருக்கு நேராக நினைத்த நேரத்தில் தரிசிக்கக் கூடியவனாக இருந்தாலும், பகவான் வரத் தாமதத்திற்கான காரணம், எனக்கு தெரியவில்லை.
'ஆனால், நீயோ இங்கு இருந்தபடியே, அதற்கான காரணத்தை அழகாகச் சொல்லி விட்டாய். குருவருளும், தெய்வ அருளும் உன்னிடம் முழுமையாக நிறைந்திருக்கின்றன. அவற்றை வீணாக்கக் கூடாது. மகான்களின் வரலாறுகளை எழுது...' என சொல்லி, ஆசிர்வதித்தார்.
குருநாதரின் உத்தரவுப்படியே, மகான்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதி முடித்தார், நாபாஜி. பிற்காலத்தில் மகான்களின் வரலாறுகளை பலர் எழுதத் துாண்டுகோலாகவும், எப்படி எழுத வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாகவும் அமைந்தது, நாபாஜி எழுதிய, 'மகான்கள் வரலாறு' நுால் தான்.
'நான் பெற்ற பெருமைகளுக்கெல்லாம் காரணம், என் குருநாதர், அக்ரஜி தான்...' என்கிறார், நாபாஜி.
குருபக்தி குறைகளை எல்லாம் தீர்த்து, உயர்வை அளிக்கும் என்பதை விளக்கும் நிகழ்வு இது!
பி. என். பரசுராமன்