PUBLISHED ON : நவ 12, 2023

இந்தியப் பண்டிகை என்றாலும், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில், தீபாவளி கொண்டாடப்படுகிறது. எந்தெந்த நாடுகளில் தீபாவளியை கொண்டாடுகின்றனர் எனத் தெரிந்து கொள்ளலாமா?
இந்தோனேஷியா:
இந்நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர், இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள். எனினும், தீபாவளி கொண்டாட்டத்துக்கு எந்தவித குறையுமில்லாமல், இங்குள்ள, பாலித்தீவு களைகட்டும். நம்மைப் போலவே பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புடன் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இரவில் வண்ணமயமான விளக்குகளை நீரில் மிதக்க விட்டு, மகிழ்வது வழக்கம்.
பிஜி:
தீபாவளியன்று வீட்டை சுத்தம் செய்து, அன்புக்குரியவர்களுக்கு புத்தாடைகளை பரிசளிப்பர். இங்குள்ள பள்ளி கல்லுாரிகளிலும், தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
ஜப்பான்:
தீபாவளியன்று நாமெல்லாம் வீட்டில் விளக்கேற்றுவோம். இங்கோ பூங்காக்களில் விளக்கேற்றுவர். பேப்பரில் வித்தியாசமாக கலை வடிவங்கள் செய்து, மரக்கிளைகளில் தொங்க விடுவர். வழிபாட்டுத் தலங்களையும் பேப்பரால் அலங்கரித்து, தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
நேபாளம்:
இங்கு தீபாவளி, திகார் என்ற பெயரில், ஐந்து நாட்கள் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள், முழு முதற்கடவுளான, விநாயகருக்கும், செல்வம் கொழிக்கச் செய்யும், லஷ்மிக்கும் உரிய நாட்களாகும். இந்நாளில், லஷ்மி ரூபமாய் சொல்லப்படும் பசுவிற்கு படையல் போட்டு வணங்கி மகிழ்வர்.
இரண்டாம் நாள், பைரவர் எனப்படும் நாய்களை கவுரவிப்பர். மூன்றாம் நாள், வெற்றிக் கடவுள்களில் ஒருவரான, ராமனுக்கு விளக்கேற்றி வழிபடுவர்.
மரணக் கடவுளான, எமனுக்கு, நான்கா-ம் நாளை அர்ப்பணிப்பர். ஐந்தா-ம் நாள், சகோதர - சகோதரிகள் பரஸ்பரம் இனிப்பையும், அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
கயானா:
தீபாவளியன்று, தேசிய விடுமுறை விடப்படுகிறது. இங்குள்ள ஹிந்து சமூகத்தினர் வாழும் பகுதிகளில், நம் நாட்டைப் போலவே, வெகு விமரிசையாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். புத்தாடை கட்டாயம். காரணம், அவர்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் உள்ளதை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
இலங்கை:
மற்ற எந்தப் பண்டிகைகளையும் விட, இங்கு மிகவும் ஸ்பெஷலானது தீபாவளி தான். ஹிந்து தமிழ் சமூகத்தினர்களால் தொடர்ந்து ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விளக்கேற்றி பட்டாசு வெடித்து, இனிப்பு, கார வகைகளை பகிர்ந்து மகிழ்கின்றனர்.
மலேஷியா:
மொத்த மக்கள் தொகையில், 8 சதவீதம், ஹிந்துக்கள் வசிக்கின்றனர். நம்மூரைப் போல் எண்ணெய் குளியல், கோவிலுக்குச் செல்வது என, அனைத்தையும் பின்பற்றுகின்றனர்.
களிமண்ணால் செய்யப்பட்ட விளக்கில், தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, வழிபடுகின்றனர். தீபாவளியன்று மலேஷியாவில் பொது விடுமுறை. ஆனாலும், இந்த நாட்டில் பட்டாசு வெடிக்க தடை உள்ளது.
தாய்லாந்து:
தாய்லாந்து நாட்டு காலண்டர்படி, 12-ம் மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தை, தீபாவளி தினமாகக் கொண்டாடுகின்றனர்.
விளக்கை வாழை இலையால் சுற்றி அலங்கரித்து, அதை நீரில் மிதக்க விடுவதை, சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கின்றனர், இங்குள்ள மக்கள். இதுதவிர, தீபாவளியன்று வண்ணமயமான வாண வேடிக்கைகளையும், பலுான்களையும் தாய்லாந்தில் பார்க்கலாம்.
சிங்கப்பூர்:
தீபாவளி கொண்டாட்டத்தில் உலகிலேயே அதிக வெளிச்சத்தைப் பயன்படுத்தும் நாடு, சிங்கப்பூர் தான். அன்று, செரங்கூன் ரோட்டிலுள்ள, லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அமர்க்களமாக இருக்கும். மாலையில் கோவிலுக்குச் சென்று மகிழ்வர்.
