PUBLISHED ON : நவ 12, 2023

தீபாவளி அதிகாலையில், கங்கா ஸ்நானம் செய்ய குளியலறைக்கு சென்றார், கங்காரப்பா.
குழாயில் தண்ணீர் வராததால், ''நீரு பருதில்லா... நீரு பருதில்லா...'' என்று, கன்னடத்தில் கத்தினார். அவருடைய கத்தலை, யார் காதிலும் விழ விடாமல், மாப்பிள்ளை மகேஷ் கொளுத்திப் போட்ட, ஆயிரம் வாலா பட்டாசு, படபடவென்று வெடித்துக் கொண்டிருந்தது.
தன் அபய குரல், யார் செவிக்கும் எட்டாததை அறிந்த, கங்காரப்பா, குளியலறையிலிருந்து வெளியே வந்து அருகிலிருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தார்.
தன் தலையில் சேறாய் அப்பியிருந்த சீயக்காயை வழித்து எடுத்தபடி, சுட்டெரிக்கும் விழியால் மனைவியை தேடினார். பங்காரம்மா காணாததால், ''நீரு பருதில்லா நீரு பருதில்லா. ஏய் பங்காரு, நீரு பருதில்லா...'' என, திரும்பவும் மூன்று முறை பெரும் கூச்சலாய் கூவினார்.
கூவலைக் கேட்டு சமையலறையில் இருந்து ஓடி வந்தாள், பங்காரம்மா.
அந்த கால கரி பிடித்த வெந்நீர் அண்டாவாக கரேலென்று, உடம்பெங்கும் நல்ல செக்கு எண்ணெயை பூசியபடி, சீயக்காய் வழியும் தலையுமாக உட்கார்ந்திருந்த கணவரைப் பார்த்ததும், 'பக்'கென்று சிரித்து விட்டாள்.
''ஏய், நகு பேடா...'' - சிரிக்காதே என்ற அர்த்தத்தில், கன்னட அதட்டல் போட்டு, தண்ணீர் நின்று விட்டதை கூறி, வாட்ச்மேனிடம் சொல்லச் சொன்னார். அவளும் ஓடிப்போய் சொன்னாள்.
இடையே, ஹாலில் வைத்திருந்த கங்காரப்பாவின் மொபைல்போன் ஒலித்தது. அந்த வீடியோ காலை எடுத்தவள், எதிர்முனையில் குமாரப்பா கூப்பிடுவதை பார்த்து, கணவரின், 'பிசுபிசு' கையில் திணித்துவிட்டு போனாள்.
வீடியோ காலில், ''கங்காஸ்நானம் ஆயித்தா?'' என்று கேட்ட குமாரப்பா, எசகுபிசகான கோலத்தில் அமர்ந்திருந்த கங்காரப்பாவைப் பார்த்தார்.
''தீபாவளியன்னிக்கு நரகாசுரனையே தரிசனம் செஞ்சதுபோல இருக்கு...'' என்று, கன்னடத்தில் கூறி சிரித்து, தாறுமாறான கங்காரப்பாவின் உருவத்தை, தன் போனில் உருவிக் கொண்டார்.
வெட்கமும், கோபமுமாக போனை துண்டித்து, ''ஏய் உனக்கு அறிவிருக்கா... இப்படி நான் அலங்கோலமா உட்கார்ந்திருக்கும் போதா, வீடியோ காலை கொண்டு வந்து தருவே. அந்த குமாரப்பா ரொம்பவும் குறும்புக்காரன். ஏடாகூடமா ஏதாவது செஞ்சு, மானத்தை வாங்கப் போறான்,'' என்று, மனைவியை நொந்துக் கொண்டார், கங்காரப்பா.
அதற்குள், ''ஐயா, டேங்கில் புல்லா தண்ணியிருக்கு. யாரோ, 'வால்வை' மூடியிருக்காங்க, நான் போய் திறந்து விட்டுட்டு வந்தேன். இப்போ, தண்ணி வரும் போய் குளிங்க,'' என்று சொல்லியபடி வந்த வாட்ச்மேனும், தன் எஜமானரின் பேஜாரான கோலத்தை கண்டு, வாய்விட்டு சிரித்து, அங்கிருந்து அகன்றான்.
'கன்னட சேவகன்' என்ற, 'லெட்டர் பேட்' அமைப்புக்கு தலைவராக இருக்கிறார், கங்காரப்பா. மக்களுக்கு சேவை செய்கிறேன் என, ஒரு கும்பலை கூட்டி, பிரதான அரசியல் கட்சிகள் செய்யும் போராட்டம், ஆர்ப்பாட்டம் இவைகளுக்கு, ஒத்தாசை செய்வார். பெரிய கட்சிகளிடமிருந்து பெறும் நிதியில், ஓரளவு வசதியோடு வாழ்க்கையை ஒப்பேற்றிக் கொண்டிருந்தார்.
சமீபத்தில், 'காவிரி நீர் தரமாட்டோம்...' என்ற போராட்டத்தில் தொண்டாற்றியதற்கு, கணிசமான சன்மானம் கிடைத்திருந்தது.
சென்னை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த, அவர் மகள் நித்யா, தஞ்சாவூர் பையனான, மகேஷை காதலித்தாள்.
'திருமணம் சென்னையில் தான் நடக்க வேண்டும்...' என, நிபந்தனை போட்டான், மகேஷ். மகளின் திருமணத்தை, தன் சொந்த ஊரில் தடபுடலாக நடத்தி, அதில் அரசியல் ஆதாயம் தேடலாமென்று எண்ணியிருந்த, கங்காரப்பா, அரை மனதுடன் தான், அதற்கு ஒப்புக்கொண்டு, திருமணம் செய்து வைத்தார்.
மகளின் தலை தீபாவளியையாவது, சொந்த ஊரில் கொண்டாட வேண்டுமென, ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார், கங்காரப்பா. பாவம், இப்படி கங்கா ஸ்நானத்தின் போதே யாரோ சதி செய்து, 'வால்வை' மூடி, இவர் மூடை கெடுத்திருந்தனர்.
சற்று நேரத்துக்கு பின், குளியல் போட்டார். புத்தாடை உடுத்தி, ஒரு தேக்கரண்டி லேகியத்தை விழுங்கி, நெற்றியில் சந்தன, குங்கும பொட்டுடன், தன் மகளின் தலை தீபாவளி குதுாகலத்திற்கு ஆயத்தமானார்.
அவரின் மொபைல் போன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஏனோ போன் செய்த எல்லாரும், 'நரகாசுரா, கங்காஸ்நானம் ஆச்சா?' என்று கேட்டு, நக்கல் செய்தனர்.
எல்லாரும் இந்த ரீதியில் சதாய்க்கவே, ஒன்றும் புரியாமல் கடுப்பாகி உட்கார்ந்திருந்தார், கங்காரப்பா.
''மாமா, யாரோ, 'பேஸ்புக்'ல இப்படி போட்டு உங்களை கிண்டல் பண்ணியிருக்கான்,'' என, முகநுால் பதிவை, மாமனாரிடம் காட்டினான், மகேஷ்.
'நம்ம ஊரு நரகாசுரன்' என்ற தலைப்பிட்டு, கங்காரப்பாவின் அன்றைய காலை கன்றாவியை போட்டு, குமாரப்பா தான் இந்த குறும்பை செய்திருந்தான்.
'இப்படி மானத்தை வாங்கிட்டானே படுபாவி...' என்று, குமாரப்பாவை சபித்தபடி, மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து, இடிந்துபோய் உட்கார்ந்திருந்தார்.
இதைப் பார்த்ததும், ''மாமா, கவலைப்படாதீங்க. உங்க மொபைல் போனை கொஞ்சம் கொடுங்க சொல்றேன்,'' என்று அவரிடமிருந்து போனை வாங்கி, ''மாமா, கொஞ்சும் சிரிங்க...'' என்று, அவரை படம் பிடித்தான், மகேஷ்.
மாமனாரின் வண்ண படத்தின் அடியில், எதையோ பதிவிட்டுக் கொண்டிருந்தான். அரைமணி நேரத்தில் கங்காரப்பாவிற்கு அந்த அழைப்பு வந்தது.
''மாமா, உங்க நண்பர் குமாரப்பா பேசறார். பயப்படாம பேசுங்க,'' என்று மாமனாரிடம், போனை கொடுத்தான், மகேஷ்.
''கங்காரப்பா, நான் தான் குமாரப்பா பேசறேன். ரொம்ப சாரி. காலையில, 'பேஸ்புக்'ல, உன் போட்டோவை போட்டு உன்னை, 'இன்சல்ட்' பண்ணிட்டேன். அதுக்கு ரொம்பவும் வருத்தப்படறேன்.
''ஆனா, நீ அந்த நரகாசுரனைப் பற்றி, வித்தியாசமான தகவலை பதிவு பண்ணியிருக்கே. ரொம்ப சூப்பரா இருந்தது. அதனால தான் போன் பண்றேன்,'' என்று, குமாரப்பா சொல்லியதும், கங்காரப்பாவிற்கு வியப்பானது.
ஆவலுடன் மாப்பிள்ளையிடம் அதுபற்றி கேட்டார்.
உற்சாகமான மகேஷ், கங்காரப்பாவின் முகநுாலில் பதிந்திருந்த தகவலை காட்டினான்.
'நரகாசுரனுக்கு நன்றி சொல்வோம்' என்ற தலைப்பிட்டு, தமிழிலும், கன்னடத்திலும் அந்த தகவலை பதிவிட்டிருந்தான், மகேஷ்.
காஞ்சி மகாபெரியவாளின் அருள்வாக்கு இது:
பகீரதன், தன் முன்னோர்களின் நற்கதிக்காக, கடுமையான தவம் செய்து, கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். அந்த கங்கை, பல ஆயிரம் கி.மீ., துாரம் ஓடி, அங்குள்ள மக்களுக்கெல்லாம் பயனளிக்கிறது.
முன்னோர்களின் நற்கதியை குறிக்கோளாக கொண்டு, பகீரத முயற்சி செய்து கொண்டு வரப்பட்ட கங்கை, மக்களுக்கும் பயன்பட்டது.
ஆனால், சத்யபாமாவால் வதம் செய்யபட்டு, உயிர் போகும் நிலையில், தனக்கென ஒரு வரத்தையும் கேட்கவில்லை, நரகாசுரன்.
'அந்த நாள், இனிமேல் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்பட வேண்டும்; அன்று அதிகாலையில் அனைவரது இல்லத்தின் எந்த நீரும், கங்கையாக புனிதமடைந்து, அனைவரது பாவங்களை போக்க வேண்டும்...' என, வரம் கேட்டான்.
வேறு நோக்கத்தோடு கங்கையைப் பாய வைச்ச பகீரதனை விட, நமக்கென்றே வரம் கேட்டு, கங்கையை வீட்டுக்கு வீடு தேடி ஓடி வரும்படி செய்த நரகாசுரனுக்கே நாம் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம். அதனால், நரகாசுரனுக்கு நன்றி சொல்வோம்.
இப்படி இருந்த பதிவை படித்ததும், மகிழ்ந்தார், கங்காரப்பா.
இந்த பதிவு அதற்குள், ஆயிரம், 'லைக்'குகளுடனும், ஐநுாறு, 'சூப்பர் கமென்ட்'டுகளுடன் கங்காரப்பாவின் மதிப்பை எங்கோ கொண்டு சென்று விட்டது.
போனில் பாராட்டுகள் குவிந்த வண்ணமிருந்தது.
''மாப்பிள்ளை, ரொம்ப தேங்க்ஸ்! இப்படி ஒரு நல்ல, 'மெசேஜை' என் போட்டோவோட போட்டு அசத்திட்டீங்க. உங்களுக்கு தீபாவளி பரிசா என்ன வேணுமோ கேளுங்க,'' என்று பூரிப்புடன் கேட்டார்.
''மாமா, புராண கதையில, ஒரு அசுரன் உயிர் பிரியும் நேரத்தில் கூட, புனித கங்கை, தீபாவளியன்னிக்கு எல்லார் வீட்டுக்கும் வரணும்ன்னு வரம் கேட்டான். இதுதான் நமெக்கெல்லாம் ஒரு நல்ல, 'மெசேஜ்!'
''ஆனா, அந்த அசுரனுக்கு இருந்த பெரிய மனசு, இப்போ இங்கே நமக்கு இல்லாம போச்சு. இயற்கையாக ஓடற நதியையே, 'எனக்கு தான் வேண்டும்'ன்னு தடுத்து, அணைகளை கட்டி, அதை கடைக்கோடி வரை பாயவிடாம பண்ணிடறோம்.
''நியாயப்படி கொடுக்க வேண்டிய தண்ணீரையும் கொடுக்க விடாம போராட்டம் பண்றோம். அந்தந்த காலத்துக்குப் போய் சேராத தண்ணீரால, டெல்டா பகுதியில் கருகி போயிருக்கிற நெற்பயிரை எல்லாம் குல தெய்வம் கோவிலுக்கு போகும்போது, நானும், நித்யாவும் பார்த்தோம்.
''நாங்க அங்கே காய்ந்து போன கதிர்களை போட்டோ எடுத்துட்டிருந்த போது தான், நீங்க இங்கே பெரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கிட்டு இருக்கிறதா பெருமையா சொன்னீங்க. இன்னிக்கு கூட குளிக்கும்போது, அந்த பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர்ல, நாம குளிக்கிறோமோன்னு உறுத்தலாய் தான் இருந்தது.
''அதனால, இனிமே, இதுமாதிரி போராட்டங்களிலே கலந்து கொள்ள போறதில்லைன்னு உறுதி அளிச்சா, அதுவே, நீங்க எனக்கு தரும் தீபாவளி பரிசா இருக்கும்,'' என, மகேஷ் உருக்கமாக பேசியது, கங்காரப்பாவை, சிந்திக்க வைத்தது.
- அகிலா கார்த்திகேயன்
