/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
மாப்பிள்ளை தோழனாக டி.எம். சவுந்தரராஜன்!
/
மாப்பிள்ளை தோழனாக டி.எம். சவுந்தரராஜன்!
PUBLISHED ON : மார் 20, 2016

மார்ச் - 24 டி.எம்.எஸ்., பிறந்த நாள்!
அழகான தமிழ் உச்சரிப்பு மற்றும் இனிமையான குரலால், தமிழ் திரை உலகில், 50 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சியவர், பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். இவர் பாடிய பக்தி மற்றும் திரை இசைப்பாடல்கள், இன்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.
நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதை கேள்விப் பட்டுள்ளோம். ஆனால், பின்னணி பாடர்களுக்கு யாரும் ரசிகர் மன்றம் வைக்காத நிலையில், மதுரையில், 'அகில இந்திய டி.எம்.எஸ்., ரசிகர் நற்பணி மன்றம்' துவக்கினார் சுப்பிரமணியம். இலவச பாட நூல், கல்வி உதவித் தொகை வழங்கல் போன்றவற்றை இன்று வரை செய்து வருகிறது இந்நற்பணி மன்றம்.
இம்மன்றத்தின் சார்பில், 'டி.எம்.எஸ்., பாடிய பாடல்களில் சிறந்தது சோகப்பாடலா, தத்துவப்பாடலா மற்றும் காதல் பாடலா...' என்ற தலைப்பில் நடத்திய (பாட்டு) பட்டி மன்றங்கள், மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன.
தற்போதைய டி.எம்.எஸ்., ரசிகர் மன்றத்தலைவர் பாலன், 2000ல் டி.எம்.எஸ்.,சிடம் தன் திருமண அழைப்பிதழை கொடுத்து, 'திருமண நிகழ்ச்சி முடியும் வரை என் கூடவே இருக்க வேண்டும். இது என் ஆசை; நிறைவேற்றுவீர்களா?' என்று கோரிக்கை வைத்தார்.
அவரின் வேண்டுகோளை ஏற்று, எளிய முறையில் நடந்த அத்திருமணத்தில், தன் மனைவியுடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.
மாப்பிள்ளை அழைப்பில், டி.எம்.எஸ்., தம்பதிகள் மணமகன் அருகில் அமர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதைப்பார்த்து, திருமணத்திற்கு வந்திருந்தோர், 'இவ்வளவு பிரபலமான சினிமா பின்னணி பாடகர், தன் ரசிகர் திருமணத்தில், மாப்பிள்ளை தோழனாகவே நடந்து கொண்டாரே...' என்றனர் ஆச்சரியத்துடன்!
திருமண சடங்குகள் முடியும் வரை அருகிலேயே இருந்து, மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்
டி.எம்.எஸ்., இதுபற்றி, அவரது ரசிகர் மன்றத் தலைவர் பாலன் கூறுகையில், 'என் வாழ்க்கையில் நான் பெற்ற பேறு...' என்கிறார் பெருமையுடன்!
டி.எம்.எஸ்., மறைவிற்கு பின்னரும், ஆண்டுக்கு இருமுறை பெரிய அளவில், விழா நடத்தி, அவர் புகழை பரப்பி வருகிறார் பாலன்.
டி.எம்.எஸ்., மீது இருந்த அபிமானம் காரணமாக, 1972ல், 'டி.எம்.எஸ்., 25 ஆண்டு கலை உலக சேவை'யை, தன் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில், விமரிசையாக கொண்டாடினார் ஏவி.மெய்யப்ப செட்டியார். அன்றைய முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, 'எழிலிசை மன்னர்' என்ற பட்டத்தை டி.எம்.எஸ்.,சுக்கு அளித்தார்.
எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்