
'திரு.வி.க., வாழ்க்கை குறிப்புகள்'நூலிலிருந்து: ஒரு காலத்தில், தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் பழக்கம், ஈ.வெ.ராவிற்கு இருந்துள்ளதை, திரு.வி.க., தன், 'வாழ்க்கை குறிப்புகள்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த, 1920ல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள, சேலம் வரதராஜ நாயுடுவும், ஈ.வெ.ரா.,வும் வந்திருந்தனர். இருவரும், சென்னை, ராயப்பேட்டை பவானி பாடசாலையில் தங்கிய போது, உடன், திரு.வி.க.,வும் இருந்தார்.
உணவிற்கு பின், புகைக் கச்சேரி துவங்கியது. நாயுடு சுருட்டு பிடித்தார். ஈ.வெ.ரா., சிகரெட் பிடித்தார். இருவரும் மாறி மாறி ஊதி தள்ளினர். அறை முழுவதும் புகை. திரு.வி.கவுக்கு மூச்சு திணற, 'இரண்டு புகைகளும் என்னை எரித்தன...' என்று குறிப்பிட்டுள்ளார்.
சிகரெட் மீது மிகுந்த விருப்பம் கொண்டிருந்த ஈ.வெ.ரா.,வுக்கு எப்படியோ அதன்மேல் வெறுப்பு உண்டாயிற்று. அதன்பின், சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்தி விட்டார்.
அவர் வைராக்கியக்காரர்; பிடிவாதம் உடையவர்; நினைத்ததை முடிப்பவர். இதுபற்றி, திரு.வி.க., தன் கட்டுரையில், 'வைக்கம் வீரருக்கு பல திற அணிகளுண்டு. அவற்றுள் வைராக்கியமும் ஒன்று. அவர் சிகரெட் பழக்கத்தை விட்டதற்கு காரணம், இந்த வைராக்கியம் தான்...' என்று எழுதியுள்ளார்.
ஜெகாதா எழுதிய, 'உலகை குலுக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள்' நூலிலிருந்து: போட்டோ ஸ்டுடியோவில் உதவியாளராக பணியாற்றிய ஈவா பிரவுன் என்ற பெண்ணை, 1930 முதல் காதலித்து, அவளுடன் வாழ்ந்து வந்தார் ஹிட்லர்.
ஏப்., 25, 1945ல் இரண்டாம் உலகப்போரின் போது, ரஷ்யப் படை, பெர்லின் நகரை சூழ்ந்து, விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்த போது, யுத்தக் கைதியாக எந்நேரத்திலும் ஹிட்லர் பிடிபடலாம் என்ற நிலை.
ரஷ்யர்கள் கையில் சிக்கி, தான் இறப்பதை எண்ணிப் பார்த்த ஹிட்லர், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, இவ்விஷயத்தை தன் காதலி ஈவா பிரவுனிடம் தெரிவித்தார். அப்போது, அவள், 'உங்களது வாழ்விலும், தாழ்விலும் நான் பங்கேற்று உங்களோடு உயிர் துறப்பேன்; இதுவரை உங்கள் காதலியாக இருந்த நான், சாகும் போது உங்கள் மனைவியாக இறக்க விரும்புகிறேன்...' என்றாள்.
உடனே, ஏப்., 28ல், பாதாள அறையில் இருந்த அவரது அறை அலங்கரிக்கப்பட்டு, ஹிட்லர் - ஈவா திருமணம் நடைபெற்றது. நகர சபை அதிகாரி வரவழைக்கப்பட்டு, திருமணத்தை பதிவு செய்தனர்; விருந்தும், கேளிக்கையும் நடந்து முடிந்தது.
'தன் சொத்துகள் அனைத்தும், தன் இறப்பிற்கு பின், கட்சிக்கும், கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்கும் போய் சேர வேண்டும்...' என உயில் எழுதினார் ஹிட்லர்.
மேலும், தளபதிகள் கூட்டத்தை கூட்டி, 'இந்தப் போருக்கு காரணம் நானல்ல; யூதர்கள் தான்! ஜெர்மனி, யுத்தத்தை விரும்பவில்லை; சமாதானத்தையே விரும்புகிறது...' என்றார்.
அதன்பின், தன் நாட்டு மக்களுக்கு, இறுதிச்சாசனம் எழுதி கையொப்பமிட்ட போது, 30ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, 'இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவரது மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டு கொல்லப்பட்டனர்...' என்ற வானொலி செய்தியை கேட்டார் ஹிட்லர்.
முசோலினிக்கு ஏற்பட்ட முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. அன்றிரவு, 12:00 மணிக்கு, 'பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷ்யப்படை வசமானது...' என்ற தகவலுடன், 'எந்நேரத்திலும் ஹிட்லர் பதுங்கியிருக்கும் பாதாள அறையும் தகர்க்கப்படலாம்...' என்ற செய்தி, ஹிட்லருக்கு கிடைத்தது.
அதை கேட்டு மிகவும் அதிர்ந்து, தன் தோழர்களை அழைத்து, 'நானும், என் மனைவி ஈவாவும் இறந்து விட முடிவு செய்து விட்டோம்; நாங்கள் இறந்த பின், எங்களை போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்து, சாம்பலாக்கி விடுங்கள். அத்துடன், இந்த அறையில் உள்ள எல்லாப் பொருட்களையும் சேகரித்து எரித்து விடுங்கள்...' என்று கூறி, தன் அறைக்குள் மனைவியுடன் சென்று, பூட்டி கொண்டார் ஹிட்லர்.
நீண்ட நேரமாகியும் அறைக் கதவு திறக்கப்படவில்லை. அதற்குப் பின், பொறுமையாக இருக்க முடியாது என்பதால், தளபதிகளும், அமைச்சர்களும் கதவை தள்ளித் திறந்து, உள்ளே சென்று பார்த்த போது, அங்கே அவர்கள் கண்ட காட்சி, நெஞ்சை பதறச் செய்தது.
சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடலும், காலடியில் துப்பாக்கியும் கிடந்தது. அவரது வலது காதுக்குக் கீழ், அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, ரத்தம் கொப்பளித்து, வெளியேறிக் கொண்டிருந்தது. பக்கத்தில், ஹிட்லரின் உடல் இருந்த சோபாவில், சாய்ந்தபடி பிணமாகி கிடந்தாள், அவருடைய மனைவி ஈவா பிரவுன். அவள் சயனைடு விஷம் சாப்பிட்டதால், நீலம் பாரித்த உடலாய் இறந்து கிடந்தாள்.
ஹிட்லரின் வலது கரம், அவரது தாயார் கிளாராவின் புகைப்படத்தை, மார்போடு அணைத்திருந்தது.
நடுத்தெரு நாராயணன்