
தாலி கட்டி வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதுவரை, 'சாம்பார் பரவாயில்லை... நீ தேர்ந்தெடுத்த, 'டிரஸ்' நல்லாயிருக்கு... அடடே... உனக்கு பாடவும் வருமோ, கேக்கற மாதிரியிருக்கே...' என, ஒரு வார்த்தை கேட்டதில்லை, புவனாவின் கணவன், சம்பத்.
கணவர் சாப்பிட உட்கார்ந்ததும், ''அம்மியில அரைச்ச, பூண்டு - மிளகு ரசம் பண்ணியிருக்கேன். நல்லாயிருக்கான்னு சாப்பிட்டு சொல்லுங்க,'' என, ரசத்தை ஊற்றினாள்.
முகத்தில் சலனமில்லை, அதே கல்லுளி மங்கத்தனம். தலையசைவின்றி சாப்பிட்டார்.
''மோர் போட்டுக்கோங்க!'' என்றாள், புவனா.
சாப்பிட்டு முடித்து, கை அலம்பி, 'டவலில்' துடைத்து, அறைக்குள் சென்ற உடன், 'லேப் - டாப்' அவரை விழுங்க, உலகத்தையே மறந்து விடுகிறார்.
புவனாவினுள் ஏமாற்றம் தகித்தது. இப்போதுள்ள ஆறுதலான உறவு, அத்தை. அவர்களுக்கு என் நிலை புரிகிறது. குழந்தையை கூப்பிடுவது போல், இருகரம் நீட்டி பாவனை செய்ய, ஓடிச்சென்று அவர் பிடியில் சிக்கினேன்; மரப் பொந்தை காணும் உடும்பு மாதிரி.
ஆசையாய் தலையை கோதி விட்டபடியே, ''நாம வாங்கி வந்த வரம்டீயம்மா... இவன் மாத்திரமல்ல, இவன் அப்பாவும் இப்படித்தான். 'சொசைட்டி'யில டாம்பீகமான ஆளு. ஆனா, வீட்லே பொம்மனாட்டிய மதிக்க மாட்டார். பெரிய விழாவுக்கெல்லாம் இவரை கூப்பிடுவாங்க; பாராட்டுவாங்க.
''நான், எங்கோ ஒரு ஓரமா, கூட்டத்தோட கூட்டமா நிற்கணும்... யாராச்சும், 'உன் சம்சாரம் எங்கேப்பா'ன்னு கேட்டால், கையை நீட்டுவார். அவங்க கூப்பிடுவாங்க; இவர், ஒட்டாம தான் நிற்பார். வெட்கம் பிடுங்கி தின்னும். என்ன பண்றது, சகிச்சுப்பேன்...
''இப்படியே தான் கடைசி வரைக்கும் இருந்துட்டு போய் சேர்ந்தாரு... இவனுக்கும் அவரோட ரத்தம் தானே ஓடறது... அதான் இப்படி பண்றான்... நீ பெரிசா எடுத்துக்காத,'' என்றார்.
அத்தையின் ஆறுதல் வார்த்தைகள், ஒத்தடம் கொடுத்தன. யாருக்கும் தெரியாமல் கண்களில் வழியும் நீரை துடைத்துக் கொண்டேன்.
அதிகாலையில் இருந்தே வயிற்றை பிசைந்தது. இன்று, எனக்கொரு மகத்தான நாள். பிரபல, 'டிவி' சேனல் ஒன்றின், படப்பிடிப்பு அரங்கில், கோலாகலமான முறையில், 'ஷூட்டிங்' செய்ய ஏற்பாடாகி இருந்தது. சிறந்த பாடகர் நிகழ்ச்சிக்கான இறுதிச்சுற்றில் பாட இருக்கிறேன்.
எங்கேயோ கிளம்ப, 'பேன்ட் - ஷர்ட்' மாட்டிக் கொண்டிருந்தார், கணவர்.
''என்னங்க... இன்னிக்கு நீங்க வந்து எதிரிலே உட்காரணும்... உங்களை பார்த்துகிட்டே பாடணும்... வருவீங்கல்ல,'' என, கொஞ்சும் குரலில் கேட்டேன்.
''இன்னிக்கு, அலுவலகத்துல, 'மீட்டிங்' போட்டிருக்கேன்,'' என, உதட்டை பிதுக்கியவாறு சொல்லி, 'சென்ட்'டை தெளித்து, கிளம்பி விட்டார்.
மனதில் விரக்தி; இப்போதும் ஏமாற்றம்.
ஒரு பெரிய, 'மீடியா'வின் இசை நிகழ்ச்சி ஒன்றில், இறுதிச்சுற்றில் பாடுவதென்பது சாதாரண காரியமல்ல. அப்படிப்பட்ட நிலையை எட்டியவளை, ஊக்கப்படுத்த வேண்டாம். பார்வையாளராக வந்து, கண்களால் ஆமோதித்து, ஒரு சின்ன கைத்தட்டல் கொடுத்து, 'சப்போர்ட்' பண்ணக்கூடாதா...
காஞ்சிபுரத்தில், எஸ்.எஸ்.கே.வி., பள்ளியில், இடைநிலை படித்துக் கொண்டிருந்தபோது, பாட்டு டீச்சர் போட்ட விதை. பின், 'ஆர்கெஸ்ட்ரா'வில் பாடும் அளவிற்கு, என் பாட்டு திறன் பரிணாமம் பெற்றது. அதெல்லாம் கூட கல்யாணம் ஆகிற வரை தான். புகுந்த வீட்டில் எல்லாவற்றிற்கும், 144 தடை.
பிரபல, 'டிவி'யில், சிறந்த பாடகர் நிகழ்ச்சிக்காக, ஆள் தேடிய நேரம். ஆயிரத்தில் ஒருத்தியாய், 'ஆடிஷன் டெஸ்ட்'டிற்கு, தேர்வு செய்யப்பட்டேன். அதற்கப்புறம், பல, சுற்றுகள்.
ஓய்வுப்பெற்ற, பாட்டு டீச்சரிடம் அடிக்கடி போன் போட்டு, குரல் வளத்தை மெருகேற்றினேன்.
'உனக்கு, பாட்டோட சங்கதியெல்லாம் நல்லா வருதுடி... முயற்சியும், பயிற்சியும் எடுக்கறதை நிறுத்திக்காதே... ஆரோகணம், அவரோகணம் எல்லாம் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ...' என்றார்.
இதோ, இறுதிச்சுற்று வரை வந்தாகி விட்டது. ஜெயித்தால் புகழ், பணம், உலக அளவில் பிரசித்தம் கிடைக்க போகிறது.
''கால் டாக்சி வரச்சொல்லியிருக்கேன். ம், சீக்கிரம், 'ரெடி'யாகு... நானும், உன் கூட வர்றேன்,'' என்ற அத்தை, ''சீக்கிரம் கிளம்பு,'' என, துரிதப்படுத்தினார்.
அரங்கத்திற்கு வந்தாயிற்று. நடுவர்களான பாடகி, அனுராதா ஸ்ரீராம், நித்யஸ்ரீ மற்றும் இன்னொரு நடுவராக, கங்கை அமரனும் இருந்தார்.
கொஞ்சம் படபடப்பாக இருந்தது. என் பெயர் சொல்லி அழைத்தார், தொகுப்பாளர். பார்வையாளர் பிரதேசத்தை கண்கள் மேய, 'மைக்' பிடித்தேன்.
'ஒருவேளை அவர் வந்தால் எப்படி இருக்கும்...' என, மனம் தேடியது; அகப்படவில்லை.
முழு நிசப்தத்தில், அரங்கம்.
ஏமாற்றத்தை நெஞ்சில் சுமந்தபடி, 'அலைபாயுதே கண்ணா... என் மனம் அலை பாயுதே...' இறுதிச்சுற்றுக்கான பாடலை, முழு ஆன்ம பலத்தையும் ஒன்று திரட்டி, பாடி முடித்தேன்.
அரங்கம் அதிர்ந்தது. முகம் தெரியாத, முகவரி தெரியாத பலர், கை தட்டி ஆர்ப்பரித்தனர்.
மொத்தம், ஆறு போட்டியாளர்கள். எல்லாரின் பங்களிப்பும் நிறைவு பெற்றது; நடுவர்களுக்கான நேரம்.
நெஞ்சம் திக் திக் திக்...
''முதல் பரிசுக்குரியவர், புவனா!'' என்று அறிவிக்கப்படுகிறேன்.
பொசுக்கென்று கண்களில் கண்ணீர் திரள, இரு கைகளையும் உயரே துாக்கி எழுந்து நின்றேன்.
கலர் கலராய் விளக்குகள் மின்ன, விதவிதமான பூத்துாவல்களோடு, பரிசையும், பாராட்டையும் பெற்றேன். சம்பிரதாயங்கள் முடிந்து வெளியே வந்தேன்.
''கால் டாக்சி வேண்டாம்... நம்ம கார்லயே போகலாம்,'' என்றான், சம்பத்.
''நீங்க...'' என, விழிகள் விரிந்தன.
''நான், 'மீட்டிங் கேன்சல்' பண்ணிட்டு, மொதல்லயே வந்துட்டேன். ஆனா, கடைசி வரிசையில தான் இருக்கை கிடைச்சது, உட்கார்ந்து கவனிச்சேன்,'' என, அதே இயல்பான பேச்சு.
நம்ப முடியவில்லை என்னால்.
''அப்படி என்னை வளர்த்துட்டார், அப்பா... ஒருத்தரோட உதவிக்கு, நன்றி சொல்ற பழக்கம் சொல்லித் தரப்படலே... நல்லா இருக்கற ஒண்ண, 'சூப்பர்'ன்னு பாராட்ட தெரியாத வளர்ப்பு... உன் திறமையை பல விஷயங்கள்ல உணர்ந்திருக்கேன்...
''மடையன்... பாராட்டு சொல்ல தெரியாம கெடந்திருக்கேன். ரொம்ப ரொம்ப திறமையானவ நீ... அது எனக்கு எப்பவோ தெரியும். எல்லாத்துக்குமா சேர்த்து, இப்ப பாராட்டுகிறேன்,'' என, கைகளை பிடித்து குலுக்கினான், சம்பத்.
'பாராட்ட வேண்டியவர் பாராட்டி விட்டார்...' இரண்டாம்பட்சமாகி விடுகிறது, 'பெஸ்ட் சிங்கர்' பாராட்டு.
கண்களில் நீர் பெருக்கெடுத்தது. நெருக்கமாய் அவரை கட்டிக்கொண்டேன்.
அவர் இதயத்திற்குள் சுரந்திருந்த ஈரம், கண்களின் வழியே கசிய ஆரம்பித்தது. யாருக்கும் தெரியாமல் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டார்.
அந்த துளிகள், 'ஜில்'லென்று என்னை நனைத்தன.
எம். கே. சுப்பிரமணியன்