PUBLISHED ON : மார் 10, 2019

மங்களாபுரம் பஞ்சாயத்தில், 19 கிராமங்கள் உள்ளன. அதில் ஒன்று தான், சொர்ணபட்டி. அந்த கிராமத்தில், 500 வீடுகள் இருந்தன.
ஒரு குடிசை வீட்டில், '40 வோல்ட்' விளக்கு, சோகையான மஞ்சள் நிறத்தில் எரிந்து கொண்டிருந்தது.
குடிசைக்கு வெளியே, தவசி என்ற வளர்ப்பு நாட்டு நாய், காற்று வரும் திசையில் முகத்தை வைத்து, சுருண்டு படுத்திருந்தது.
வாசலில் சைக்கிள் நிறுத்தும் சத்தம் கேட்டது. 'பெயின்ட் டப்பா, பிரஷ்' அடங்கிய கூடையை சுமந்தபடி வந்தான், கிட்டான். அவனுக்கு வயது, 45. நடிகர் சென்டராயனின் சாயலில் இருப்பான். புவிஈர்ப்பு விசை இல்லாத தரையில் நடப்பது போல அலையாடினான்.
கிட்டானின் வேட்டி அவிழ்ந்து, பட்டாப்பட்டி டவுசர் பார்வையானது. தனக்கு தானே உளறலாய் பேசியபடி, வளர்ப்பு நாய் அருகில் போய் படுத்துக் கொண்டான்.
''அப்பனை துாக்கிட்டு வந்து, நம்மகிட்ட கிடத்தவா?'' என்றான், மகன்.
''வேணாம் வேணாம்... குடிகாரனுக்கு கடைசி புகலிடம் நாய் தான். நாய்... நாய் கூடதான படுக்கும்... விடு!'' என்றாள், பொன்னாத்தா.
''ம்மா... காலைல, 'டாஸ்மாக்'குக்கு எதிரான போராட்டத்துல கலந்துக்க போறோமே... அப்பன் குறுக்கால நின்னு, நம்ம கூட தகராறு செய்வாரோ!''
''குறுக்க எவன் வந்தாலும், செவுல்லயே நாலு குடுப்பேன்.''
விடியற்காலை -
குடிசைக்கு வெளியே வந்த பொன்னாத்தாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குளித்து, துவைத்த ஆடைகளை அணிந்து நின்றிருந்தான், கிட்டான். நெற்றியில் விபூதி இட்டிருந்தான்.
''நம்ம ஊர்ல புதுசா ஒரு, 'டாஸ்மாக்' கடை திறக்கப் போறதாவும், அதை எதிர்த்து, கிராமத்து ஜனம் பூராவும் போராட்டம் நடத்தப் போறதாவும் கேள்விப்பட்டேன்... நானும் வரவா?''
புருஷன் கிண்டல் செய்கிறானோ என நினைத்து, அவனை, காக பார்வை பார்த்தாள்.
''என்னை நம்பு பொன்னாத்தா... உங்க போராட்டத்துல, என்னையும் சேர்த்துக்க!''
''சரிம்மா... அப்பன் கலந்துக்கட்டும்,'' என்றனர், மகனும், மகளும்...
''போராட்டத்துல பிடிக்க, பேனர் வேணுமில்ல... அதுக்கான வாசகங்களை எழுதி குடு... நான் பெரிதாக, கலரில் எழுதி தரேன்!''
மகனும், மகளும் எழுதி கொடுத்தனர்.
குடி மக்களை, குடிகார மக்கள் ஆக்காதே...
ஆறுகளை தொலைத்து, சாராய ஆற்றை
நாட்டில் ஓட வைக்காதே... இது தமிழ் தேசமா, விதவைகள் தேசமா...
குற்றங்களைகளைய வேண்டிய காவல்துறை, சாராய கடைகளுக்கு காவல் இருக்கலாமா...
எங்கள் காசை பிடுங்கி, நிரந்தர நோயாளி ஆக்கி, இலவசங்கள் தருவது முறையா?
இதை, பதாகையில் பல்வேறு வண்ணங்களில் எழுதிக் கொடுத்தான், கிட்டான்.
சுடுகாட்டுக்கு செல்லும் செம்மண் சாலையில், ஒற்றை அறையில், 'டாஸ்மாக்' கடை கட்டியிருந்தனர். வெளி வாசலை இரும்பு கதவு போட்டு பூட்டியிருந்தனர்.
'டாஸ்மாக்' பணியாளர்கள், கடையை திறக்கும் ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். கிராமத்தின் அனைத்து குடும்ப அங்கத்தினர்களும், கடை முன் கூடினர்.
'டாஸ்மாக்' பணியாளரிடம், ''எந்த ஊருய்யா நீ?'' என்றார், கிராமத்து பெரியவர்.
''திருச்சி!''
''இங்க வந்து என்னய்யா பண்ணிட்டிருக்க?''
''டாஸ்மாக் கடை திறக்க வந்திருக்கேன்.''
''கடையை திறக்கறதுக்கு முன், எங்களை ஒரு வார்த்தை கேட்டியா?''
''உங்களை எதுக்கு கேக்கணும்... அரசு ஆணையை நிறைவேத்த வந்திருக்கேன்!''
''எங்க காசுல சம்பளம் வாங்கினா, அது செரிக்குமா?''
''நாங்க, கூலிக்கு வேலை செய்யிறவங்க. எங்களை ஏன் சபிக்கிறீங்க... அரசோட காலரை பிடிச்சு உலுக்குங்க!''
''அதுக்குதானே வந்திருக்கிறோம்!''
கோஷங்களுடன் போராட்டம் ஆரம்பித்தது. கிராமத்து இளைஞர்கள் சிலர், நான்கைந்து சம்மட்டிகள் எடுத்து வந்திருந்தனர்.
'டாஸ்மாக்' அறை சுவரை உடைக்க ஆரம்பித்தனர். ஒருவன், இரும்பு கதவின் பூட்டை உடைத்தான்.
ஆண்களும், பெண்களும், குழி முயல்களாய் உள்ளோடினர். அட்டை பெட்டியிலிருந்த சரக்குகளை, தரையில் வீசி உடைத்தனர்.
நுரைப்புடன் வண்ண வண்ண திரவங்கள் தரையில் ஓடின. எங்கும், 'ஆல்கஹால்' வாசனை வீசியது. கிட்டானுக்கு இருப்பு கொள்ளவில்லை.
'உடைபடாத பாட்டில்கள் நான்கைந்தை, திருட்டுத்தனமாக எடுத்து, இடுப்பில் செருகிக் கொள்ளலாமா... 'காக்டெயில்' திரவத்தை முழங்காலிட்டு குனிந்து, அள்ளி அள்ளி குடிக்கலாமா...
'அள்ளி குடிக்க முடியவில்லை என்றால், தரையோடு தரையாய் முகத்தை வைத்து நக்கி குடிக்கலாமா... உடைத்தவற்றை பதுக்கி வைத்தால், ஒரு ஆண்டுக்கு குடிக்கலாமே...' என எண்ணிவாறு, நாக்கை சப்பு கொட்டினான்.
கணவனின் பேராசை கண்களை பார்த்து, இடுப்பில் குத்தி, ''குடிகாரா... சபலப்படாதே,'' என்றாள்.
'டாஸ்மாக்' கடை சரக்கு முழுவதையும், துவம்சம் செய்தனர்.
புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்து தள்ளினர், 'டிவி' சேனல்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும்.
'டாஸ்மாக்' கடை பணியாளன், கைபேசி எடுத்து, யாருக்கோ பேசினான்.
அடுத்த, 10வது நிமிடம், காவல்துறை, 'ஜீப்' வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய, டி.எஸ்.பி., மார்த்தாண்டன், உடைக்கப்பட்ட பாட்டில்களை பார்த்து, ''அடப்பாவிகளா... அரசு சொத்தை சூறையாடிட்டீங்களே... நீங்கள்லாம் உருப்படுவீங்களா?'' என்றார்.
''இந்த சாக்கடை தண்ணிகளா அரசு சொத்து... அரசே, தன் குடிமக்களை சிறுக சிறுக விஷம் வைத்து கொல்கிறது. இது, அரச பயங்கரவாதம்,'' என்றார், கூட்டத்தில் இருந்த ஒருவர்.
''ஓவரா பேசாதீங்க... 'டாஸ்மாக்' கடையை முழுக்க நாசப்படுத்திட்டீங்க... அப்புறம் எதுக்காக கும்பல் கூட்டி கோஷம் போட்டுகிட்டு இருக்கீங்க?''
''நாங்க ஒரு இடத்துல, 'டாஸ்மாக்' கடையை துவம்சம் பண்ணினா, 10 அடி துாரத்துல இன்னொரு கடையை கட்டி திறப்பீங்க... அதுக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இன்னும் கலையாம போராட்டம் நடத்திகிட்டு இருக்கோம்.''
''அரசு சொத்தை நாசப்படுத்தின குற்றத்துக்காக, உங்க அனைவரையும் என்னால கைது பண்ண முடியும். 10 எண்றதுக்குள்ள எல்லாரும் ஓடிப் போயிருங்க.''
''இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம், டி.எஸ்.பி., சார்... மாவட்ட ஆட்சியரை வரச்சொல்லுங்க... 'இனி, எங்க பஞ்சாயத்துல, 'டாஸ்மாக்' கடை திறக்க முயற்சிக்க மாட்டோம்...' என, எழுத்துப்பூர்வமா கடிதம் கொடுத்தால் தான் கலைவோம்!''
ஒரு பெரியவர், டி.எஸ்.பி.,யை நெருங்கினார்.
''எத்தனை கள்ளச் சாராய கிரிமினல்களை, ஓட ஓட விரட்டி, அவங்க சாராயம் காய்ச்சின பானைகளை உடைச்சிருப்பீங்க... தொடர்ந்து, 25 ஆண்டுகளாக, சாராயத்துக்கு எதிரா, போர் குரல் எழுப்பிட்டு, இப்ப, 'டாஸ்மாக்' சாராயத்துக்கு கை கட்டி, சேவை பண்ணலாமா நீங்க...
''என்னைக்காவது மனசாட்சி உறுத்தி, மேலதிகாரியை, அரசை எதிர்த்து, நாலு வார்த்தை கேட்டிருப்பீங்களா... போலீஸ் பணி தொடர, முதுகெலும்பை தொலைச்சிட்டீங்களே, டி.எஸ்.பி.,'' விக்கித்து போனார், டி.எஸ்.பி.,
''இ... இதெல்லாம் நீ பேசக் கூடாது.''
கைபேசியை எடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் சொன்னார்.
இரண்டு, டி.ஆர்.ஓ.,க்களுடன் வந்து சேர்ந்தார், மாவட்ட ஆட்சியர்.
மாவட்ட ஆட்சியரிடம் பெரியவர், ''அமைச்சர் பதவிகளை விட உயர்ந்தது, கலெக்டர் பதவி. நீங்க, ஒரு நாளைக்கு, 10 மணி நேரம் பாடுபட்டா, அந்த ஒட்டுமொத்த மாவட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உச்சாணி கொம்புக்கு உயரும்.
''அப்படிப்பட்ட நீங்க, பண்டிகைக்கு பண்டிகை, 'டாஸ்மாக்' விற்பனையை கூட்ட என்ன செய்யலாம்ன்னு மூளையை கசக்கி, திட்டங்கள் தீட்டிக்கிட்டு இருக்கீங்க... இதுக்கு நீங்க, ஐ.ஏ.எஸ்., படிக்கவே தேவையில்லை,'' என்றார்.
துணை அதிகாரிகள், பெரியவரை எட்டி தள்ளினர்.
''ரமணா விஜயகாந்த் நினைப்பு இந்த கிழத்துக்கு.''
போராட்டம் வலுத்தது.
''எங்க பஞ்சாயத்துல, எப்பவுமே, 'டாஸ்மாக்' திறக்க மாட்டோம்ன்னு உறுதிமொழி கடிதம் கொடுக்கலைன்னா, எங்க போராட்டம், பக்கத்து பஞ்சாயத்துகளுக்கும் தொடரும்!''
அமைச்சர் மற்றும் தலைமை செயலகத்துக்கு பேசினார், மாவட்ட ஆட்சியர். மாலை, 6:00 மணிக்கு, மாவட்ட ஆட்சியரின் கையெழுத்திட்ட உறுதிமொழி கடிதம், ஊர் பெரியவர்களிடம் கொடுக்கப்பட்டது.
'கிராம மக்களின் ஒற்றுமை ஓங்குக... போராடுவோம் போராடுவோம்... 'டாஸ்மாக்'குக்கு எதிராக போராடுவோம்...' என்ற கரகோஷத்துடன், போராட்டம் முற்று பெற்றது.
வீடு திரும்பிய கிட்டானிடம், அவன் மனைவி, ''பெரும் குடிகாரனான நீ, எங்களோட போராட்டத்துக்கு வந்தது, உளவு பார்க்கவா அல்லது பெரும்பான்மை எங்கிருக்கிறதுன்னு பார்த்து அவங்களோட ஒட்டி நிற்போம்ன்னு நரி திட்டம் போட்டியா?'' என்றாள்.
''எங்களை மாதிரி குடிகாரன்களை திருத்த, அறிவுரையோ, அலோபதி, சித்தா சிகிச்சைகளோ, ஆலோசனை மறுவாழ்வு மையங்களோ தேவையில்லை. 19 கி.மீ., சைக்கிள் மிதிச்சு போய் குடிக்கணும்ன்னு நிலை வந்தா, தினம் குடிக்கிறது, வாரத்துக்கு ரெண்டு, மூணா குறையும்.
''மேலும், 'டாஸ்மாக்'கே இல்லைன்னா சில வாரங்கள் கை கால் நடுங்கும். அப்புறம் நார்மலாகி விடுவோம். குடித்துவிட்டு வந்து, மனைவி, மகனை கொன்று விடுவேனோ, பெற்ற மகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வேனோ என்கிற பயம், சமீப காலமாக என்னை ஆட்டிவிக்கிறது.
''குடிக்காதவன்களை விட, குடிகாரன்களுக்கு தான் அதிகம் தெரியும், குடியின் தீமை. இதுவரை, நான் குடும்பத்துக்கு எதுவும் செய்யவில்லை. இனி, ஏதாவது செய்ய விரும்புகிறேன். அதற்காகவாவது, 10 - 20 ஆண்டுகள் உயிரோடு இருக்க ஆசைப்படுகிறேன்.
''இந்த, 'டாஸ்மாக்' போராட்டம், தமிழகம் முழுக்க பரவி, தேர்தல் வந்தால், தோத்து விடுவோம் என்கிற பயத்தில், 'டாஸ்மாக்' கடைகளை ஒட்டுமொத்தமாய் அரசு மூடிவிடும் என்கிற நப்பாசையில் வந்தேன். இன்னைக்கு போராட்டத்துல என்னைப் போன்ற பல குடிகாரர்கள் வந்திருந்தனர். அவர்களின் நோக்கமும், 'வேண்டாம்... வேண்டாம், 'டாஸ்மாக்' வேண்டாம்...' என்பது, தான்!'' என்றான், கிட்டான்.
கோடிக்கணக்கான கோஷங்கள், ஒரு பிரமாண்ட கையாய் உருவெடுத்து, ஆட்சியாளர்களின் கன்னங்களில் ஒரு ராட்சச அறை அறைந்தது.
விரைவில் அனைத்து சாராய கடைகளும் மூடப்பட்டு, 'டாஸ்மாக்' என்கிற விஷ வார்த்தை, தமிழக மக்களின் ஞாபக திரளிலிருந்து நிரந்தரமாய் அகலும் நாள் வெகுதுாரத்தில் இல்லை என, சங்கே முழங்கு!
ஜன்னத்துல் பிர்தவுஸ்