தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா?

சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா?

சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா?


PUBLISHED ON : மார் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் படித்தவர்கள் அறிவர்... இரந்து பெறுதல் என்றால், கெஞ்சிப் பெறுவது!

தன்மானத்தை விட்டுக் கொடுக்காத தகைமை என்பது, பண்டைய காலங்களில் பெரிதாக பேசப்பட்டது. இப்போதோ, 'தனக்கு ஆக வேண்டியது ஆனால் சரி... எது எக்கேடு கெட்டால் என்ன...' என்று, பலரும் எண்ணத் துவங்கி விட்டனர்.

நல்ல வேலையாக வாங்கி தரக்கூடியவர் தான்; ஆனால், ஏனோ மனம் வைக்க மாட்டேன் என்கிறார். எப்போது கேட்டாலும், விதவிதமான பதில்கள் வருகின்றன. 'நான் பிசி; அடுத்த வாரம் வா...' என்கிறார். அடுத்த வாரம் போனாலோ, 'அவரு ஊர்ல இல்ல; பத்து நாள் போகட்டும்...' என்று பதில் வருகிறது.

நம்மாளுக்கோ பாவம்... இதே நினைப்பு!

காலண்டரை கிழிக்கும் போது, 'இன்னும் சரியா மூணு நாள், ரெண்டு நாள்...' என்று, இதையே ஜபமாக்கி, சரியாக, பத்தாவது நாள் அவர் வீட்டில் போய் இறங்கினால், 'பத்து நாள்ன்னா, சரியா பத்தாவது நாள் வந்துடுறதா... நான் சொல்லியனுப்ப மாட்டேனா... கொஞ்ச (!) நாள் போகட்டும்...' என்பார், அந்த பெரிய மனிதர்.

மரியாதை எப்படி படிப்படியாக கெடுகிறது பார்த்தீர்களா... இனியும், இவரிடம் போய் நிற்க தான் வேண்டுமா?

ஆனால், அதையும் தாங்கி நிற்பவர்களும் இருக்கின்றனரே...

பின்னர் என்பதும், பேசாதிருப்பதும், மறுப்பின் மறு நகல்களே!

கடன் கேட்டு தொந்தரவு செய்வோரை பார்க்கிறோம்... லட்சத்தில் ஆரம்பித்து, பத்தாயிரத்திற்கும் கீழே இறங்கி போகின்றனர்.

ஒரு மனிதர் கொடுப்பார், உதவுவார், கை காட்டுவார் என நம்புகிறோம். இந்தக் கணக்கை, கணிப்புகளை, ஆரம்பத்திலேயே சரி வர போட வேண்டும்.

உதவி என்று போய் கேட்டாலோ, பலரது முகம் அஷ்ட கோணலாக மாறி விடும். சொல்லும் பதிலிலேயே, அவர் சொல்லாமல் சொன்ன பதில் என்ன என்கிற சிந்தனையில், நம் மனம் ஆழ்ந்து விட வேண்டும்.

அன்னியர்களை விடுங்கள்... கணவன், மனைவியிடம் கேட்டுப் பெற வேண்டிய ஒன்றில் கூட, ஓரளவிற்கு தான் இறங்கி போகலாம். 'தொழிலில் போட கொஞ்சம் பணம் தேவை; உன் நகைகளில் ஒன்றிரண்டை கொடுத்து உதவ முடியுமான்னு யோசிச்சு சொல்லு. இப்பவே முடிவு சொல்லணும்ன்னு இல்ல... நாளைக்கு சொன்னால் போதும்; அவசரமில்ல...' என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்; கெஞ்சல் பாணிக்கு, இறங்க வேண்டிய அவசியமில்லை.

மனைவியும், தன் தேவைகளை அளவோடு சொல்லி, 'பணப்புழக்கம் நல்லா இருக்கிற போது, வாங்கி தரமுடியுமான்னு பாருங்க; கட்டாயப்படுத்தல...' என்று, பேச்சுவாக்கில், தருணம் பார்த்து சாதாரணமாக சொன்னாலே போதும். கணவனுக்கு, அது மர மண்டை என்றால் கூட, மண்டையில் நன்கு ஏறும். ரொம்பவும் அழுத்திக் கேட்டால், பதில் விருட்டென்று வரும்...

'என்ன விளையாடுறியா... நானே பணம் புரட்ட வழி தெரியாம, செத்து சுண்ணாம்பா ஆகிக்கிட்டிருக்கேன்; வந்துட்டா பெரிசா...' என்பான்.

அணுகுமுறைகளில் செய்யக்கூடிய சிறு சிறு மாற்றங்கள், அற்புதங்கள் செய்ய வல்லவை. மனித உடலில், 32 பலவீன இடங்கள் உள்ளன என்று, கராத்தே கலை கற்று தரும். அவற்றுள் ஒன்றை தட்டினால் போதுமாம், அவன் உடனே விழுந்து விடுவானாம்.

மனித மனதின் பலவீனங்களோ இவற்றை விட அதிகம். எதிராளியின் அப்போதைய மனநிலை, நேரம், சூழல், வார்த்தைகள், தொனி மற்றும் தோரணை என்று பலவற்றையும் எடை போட்டு, இதமான வார்த்தைகளால் அணுகினால், எத்தகைய மனிதனும் வீழ்ந்து விடுவான்; மாயங்கள் நடக்கும்.

'சே... இவன் தொல்ல தாங்க முடியலயே...' என்கிற நினைப்பை உருவாக்கி விட்டாலோ, நம் விண்ணப்பத்திற்கான பதில், கையோடு தெரிந்து போகும்.

கிடைத்தால் சரி, இல்லாவிட்டால் போகிறது என்கிற மனோபாவத்தோடு அணுகுவதில், இரு வித நன்மைகள் உண்டு.

இதில், வற்புறுத்தல் இல்லாததால், நிர்பந்தத்தின் அடிப்படையில் எதிராளி இறங்காமல், மனமுவந்து இறங்குவார். அடுத்தது, எதிராளி மறுத்தாலும், நமக்கு பெரிய ஏமாற்றமாக இராது.

கெஞ்சிப் பெறுவது என்பது கேவலமானது; அப்படி ஒன்றை பெறுவது, அவசியம் தானா என்கிற கேள்வி, மனதிற்குள் பலமுறை எழுப்பப்பட வேண்டும்.

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us