தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்


PUBLISHED ON : மார் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

வணக்கம்; என் பெற்றோருக்கு, மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் என, ஆறு பிள்ளைகள். நான் தான், மூத்த மகள். அனைவருக்கும் திருமணம் ஆகி, நலமுடன் உள்ளனர்.

ஆனால், பெற்றோரை யாரும் கவனிப்பதில்லை. அவர்கள், தற்போது, கடைசி மகனிடம் தான், இருக்கின்றனர். எங்களுக்கு சொந்தமாக, 12 ஏக்கர் நிலம் உள்ளது. வாய் வார்த்தையில், மூன்றாகப் பிரித்து, அவரவர் பங்கு நிலத்தை, தம்பிகள் பயிர் செய்து வருகின்றனர்.

என் மூத்த தம்பி, எங்கள் வீட்டில் வேலை செய்த பெண் மீது ஆசைப்பட்டதால், நம்மிடம் தான் நிறைய சொத்து இருக்கே, ஏழையாக இருந்தால் என்ன, நம் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வாள் என்று எண்ணி, அவளை, என் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால், அவளோ, என் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் மதிப்பதில்லை.

நடு தம்பிக்கு, அவள் தான், பெண் பார்த்து முடிவு செய்தாள். அதனால், அவன் மனைவியிடம், 'நான்தான் உன்னை கொண்டு வந்தேன்; என் சொல்லைத் தான் கேட்கணும்...' என்று கூறியதால், இருவரும் என் தம்பிகளைக் கூட நிம்மதியாக வைத்திருக்கவில்லை.

நாங்கள் மூன்று பெண்களும் சொத்தில் பங்கு கேட்கவில்லை; பெற்றோரை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறோம். ஆனால், முதல் இரண்டு தம்பிகளும், அவர்கள் மனைவிமார்களும் சின்னச் சின்ன பிரச்னையைக் கூட, பூதாகரமாக ஆக்கி, குடும்பத்தில் நிம்மதி இழக்கச் செய்கின்றனர்.

பெண்களாகிய நாங்கள், சமாதானம் செய்ய போனால், எடுத்தெறிந்து பேசுகின்றனர். வயதானவர்கள் என்று கூட பார்க்காமல், பெற்றோரின் பொருட்களை ஒளித்து வைப்பதும், தூக்கி எறிந்தும் விடுகின்றனர்.

ஒருமுறை போலீஸ் ஸ்டேஷன் வரை கூட, சென்று வந்தோம்; ஊரில் நல்லபெயருடன் வாழ்ந்த எங்களுக்கு, இது தீரா அவமானமாகி விட்டது.

இருக்கும் சொத்தை நான்காகப் பிரித்து, மூன்று தம்பிகளுக்கு கொடுத்தது போக, மீதியுள்ள ஒரு பங்கை பெற்றோருக்கு எழுதி வைக்க முடிவு செய்தோம். ஆனால், இதற்கு மூத்த தம்பி சம்மதிக்காமல், அப்படி நீங்கள் கொடுப்பதாக முடிவு செய்தால், நான், என் மனைவி மற்றும் இரண்டு மகன்களும் மருந்தைக் குடித்து இறந்து விடுவோம். அனைத்தையும் அவர்களே எடுத்துக் கொள்ளட்டும் என்கிறான்.

அனைத்து சொத்தும் தாத்தாவுடையது; அம்மாவுக்கு அவர் அப்பா வழி சொத்தாக, ஒன்றரை காணி நிலம் அம்மா பெயரில் உள்ளது. அதையாவது எனக்கு கொடுங்கள் என்று அம்மா கேட்கிறாள். கொடுக்க மறுக்கின்றனர். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

எங்கள் குடும்பம் ஊரில் மதிப்பானது; இப்போது, ஊர் கூடி சிரிக்க வைத்து விட்டனர்.

நானும், என் கணவரும் நர்சரி பள்ளி நடத்துகிறோம்; நாங்கள் அம்மா வீட்டிற்கு அதிகம் செல்வது இல்லை.

என் பெண்ணுக்கு இன்னும், மூன்று ஆண்டுகளில் திருமணம் முடிக்க இருக்கிறேன். பெற்றோர், தம்பிகள் அனைவரும் முன்னின்று, என் பெண் திருமணத்தை நடத்த வேண்டும். அதுவரை, பெற்றோர் நலமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

இக்கடிதம் உன் குடும்ப உறுப்பினர் அனைவருக்குமானது; இதை, அவர்கள் அனைவரிடமும் காட்டி வாசிக்கச் சொல்.

'தென்னையை வச்சா இளநீர்; பிள்ளையை பெத்தா கண்ணீர்' என்பர். ஆறு பிள்ளைகள் இருந்தும், பெற்றோரை நீங்கள் பாதுகாக்கவில்லை.

பொன்னாசை, பெண்ணாசை மற்றும் மண்ணாசை கொடியவை.

ஆசை கொண்டவரை, அது சீரழித்து, சின்னா பின்னமாக்கிவிடும். இன்று, நீங்கள் உங்கள் பெற்றோருக்கு செய்வதை தான், நாளை உங்கள் குழந்தைகள் உங்களுக்குச் செய்வர்.

திருமணமான ஆண், முழுமையாக மனைவி பக்கமோ, பெற்றோர் மற்றும் சகோதரி பக்கமோ சாய்ந்துவிடக் கூடாது. இரு தரப்பு வாதங்களை காதுற்று, நடுநிலையாய் தீர்ப்பளிக்கும் நீதியரசர் போல், நடந்து கொள்ள வேண்டும்.

ஏழைகள் ஒருபோதும் பேராசை பட மாட்டார்கள் என்கிற பொய் புனைவு, நம் சமூகத்தில் உள்ளது. ஆனால், சமூகத்தின் எல்லா அடுக்கு மக்களுக்கும் ஆசை, ஏழாம் வானம் வரை உயர்ந்துள்ளது.

ஒரு வீட்டிற்கு, மருமகளாய் போகும் பெண்கள், பிறந்த வீட்டின் மாண்பையும், புகுந்த வீட்டின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும். கணவனை, அவனது பெற்றோருக்கு எதிராக முடுக்கி விடக் கூடாது.

நீதிமன்றம் மற்றும் காவல்நிலையத்துக்கு சென்று, சொத்தை அழித்துவிடாதீர்கள். மறுபிறவி உண்டா, இல்லையா என்பது நமக்கு தெரியாது. இப்பிறவியில் நம் சகோதர, சகோதரிகளுடன் சொத்துச் சண்டை இடாது பாசப் பறவைகளாய் வாழ்வோம்.

மொத்த சொத்தையும், எட்டுப் பங்குகளாக பிரியுங்கள். ஆறு பங்குகளை, மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்களுக்கும், இரு பங்குகளை தந்தை மற்றும் தாய்க்கு என பிரித்துக் கொள்ளுங்கள். பெற்றோர், தங்கள் பங்குகளை அவர்களது காலத்துக்கு பின், யாருக்காவது எழுதி வைக்கட்டும்.

உங்களது பகைகளை, அடுத்த தலைமுறைக்கு தாவச் செய்யாமல், ஊரிலேயே, பெரிய குடும்பம் என்கிற பெருமையை தக்க வைத்து கொள்ளுங்கள்.

ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி, உறவு கொள்ள வாய்ப்பில்லை என கருதினால், அவரவர் எல்லையில் இருந்து குடும்பம் நடத்துங்கள். நெருங்கிச் சண்டை போடவில்லை என்றால், சமாதானமும் தேவையில்லை.

பண்டிகை நாட்களில், நல்லது - கெட்டதுகளில் கலந்து குசலம் விசாரித்து கொள்ளுங்கள்.

சிறுபிள்ளைத்தனமான கோப தாபங்களை தூக்கி எறிந்து, ஒற்றுமையாய், அக்காள் மகள் திருமணத்தில் கலந்து கொள்ளுங்கள்.

அனைவரும் மனம்விட்டு பேசி, சமாதானமாக போகப் பாருங்கள்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us