PUBLISHED ON : செப் 27, 2015

'கால்ப் விளையாடுகிறீர்களா லேனா?' என்று கேட்டார், என் பாஸ் டாக்டர் ஜவஹர் பழனியப்பன். கேட்ட இடம் அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தில் உள்ள நியூ ஆல்பனி என்ற இடத்தில்!
'கால்பா... எனக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்... நீங்க ஆடுங்க; நானும் கூட வர்றேன்...' என்று சொல்லாமல், 'சொல்லிக் கொடுங்க கத்துக்கிறேன்...' என்றேன்.
அவர், ஒன்பது ஹோல்களை முடித்த சிறிது நேரத்தில், நானும் முடித்தேன் என்பது வியப்பாக இருந்த செய்தி. (இடையில் நான் இரு பந்துகளை புதர்களுக்குள் அடித்து காணாமலடித்தேன்; கண்டுக்காதீங்க!)
'கால்ப் உங்களுக்கு புதுசு என்பதை என்னால் நம்ப முடியல; நீங்க சும்மா சொல்றீங்க...' என்றார் டாக்டர் ஜவஹர்.
'இல்ல டாக்டர்... உண்மையில கால்ப் ஸ்டிக்கை வாழ்க்கையில தொடுறது இதுதான் முதல் முறை. கிரிக்கெட், பாட்மின்டன் ஆகியவற்றில் கத்துக்கிட்ட சில நுணுக்கங்களை, இதுல கொஞ்சம் செலுத்திப் பார்த்தேன். அவ்வளவு தான்...' என்றேன்.
உண்மை! நமக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்கள் அபாரமானவை. அவற்றை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது, நழுவ விடவே கூடாது.
பள்ளிக் காலத்திலிருந்தே நமக்குள் நிராகரிப்பு மனம் எப்படியோ விதைக்கப்பட்டு விட்டது.
'வா... மேடையில் பேசு!'
'வேண்டாம் டீச்சர்... ப்ளீஸ் டீச்சர்; என்னை விட்டுடுங்க டீச்சர் அப்புறம் நான் மேடையில ஒண்ணுக்கு போயிடுவேன் டீச்சர்...' என்றவர்கள் நம்மில் உண்டா இல்லையா?
'புது மாடல் கார்... இப்பத்தான் டெலிவரி எடுத்தேன் சும்மா ஓட்டிப் பாருங்க...' என்றதும், 'ஐயோ வேண்டாம்... எங்கயாச்சும் மோதித் தொலைச்சிட்டா வம்பு...' என்று அரிய வாய்ப்பை மறுத்தவர்கள் உண்டா, இல்லையா?
நாராயணமூர்த்தி உலகின் மிக சிறந்த இந்திய மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்றான, இன்போசிசை ஆரம்பித்த போது, என் வகுப்பு தோழர் ஒருவருக்கு, தம்முடன் பங்குதாரராக சேர,
நாராயணமூர்த்தியால் அழைப்பு விடுக்கப்பட்டது. இவர், அதை நிராகரித்தார்.
இன்று என் தோழர் அதுபற்றி அவ்வளவு வருந்திப் பேசுகிறார். 'நான் நினைக்கவே இல்லை; கணிக்கவே இல்லை இப்படி வருமென்று...' என்கிறார் இப்போது. பயன்!
எது அரியணை, எது அதல பாதாளம் என்பதை நம்மால் கணிக்க முடியாமல் போகலாம். ஆனால், நம் மீது, நம்மை விட அதிக நம்பிக்கை வைத்து சிவப்புக் கம்பளம் விரிப்பவர்கள் தரும் வரவேற்பை, எப்படி சிவப்பு சிக்னலாக நினைக்க முடிகிறது பலரால்... புரியவில்லை.
நாம் நிராகரிக்கிற ஒவ்வொன்றிற்கும் நியாயமான காரணங்கள் வேண்டும். தர்க்க ரீதியாக அது ஆராயப்பட வேண்டும். சுலபமாக முடிவெடுக்க திராணி இல்லாவிட்டால், நல விரும்பிகளிடமும், நண்பர்களிடமும் கலந்து பேசி பார்க்க வேண்டும்.
நமக்கு தோன்றாத காரணங்கள், நியாயங்கள், கோணங்கள், எதிர் நாற்காலிக்காரர்களுக்கு தெரிய வரலாம்.
'அது தானே... எனக்கே தோணலையே...' என்று நமக்கு தாமத ஞானோதயம் வரலாம்.
இவற்றிற்கெல்லாம் இடம் கொடாமல், 'சற்று அவகாசம் கொடுங்க...' என கேட்டு நிதானப்படுத்திக் கொள்ளாமல், சித்தம் போக்கு சிவன் போக்கு என்று காரணமின்றி மறுப்பவர்கள், வாழ்வின் அருமையான சந்தர்ப்பங்களை அநியாயமாய் இழக்கிறவர்களே!
ஒரு விமானத்தில் பயணம் செய்ய கிடைத்த வாய்ப்பை நிராகரித்த பின், 'நான் கட்டை வண்டியில் வந்து சேருகிறேன்...' என்று முடிவெடுக்கிறவர்களின் நிலை இரங்கத்தக்கது. வாழ்வின் வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் சில நேரங்களில் தாமாக வந்து கதவை தட்டுகின்றன.
'அதெல்லாம் திறக்க மாட்டேன்; என் சக்தி எனக்கு தெரியும் கண்டதற்கெல்லாம் ஆசைப்படுபவனா நான்?' என்றும், 'ஆட்டுக்கு வாலை அளந்து தான் வச்சுருக்கான்' 'விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுறது தான் ஒட்டும்' என்றும் தத்துவம் பேசிக் கொண்டிருப்பவர்கள், இனியேனும் மாற வேண்டும்.
எது ஒன்றையும் நிராகரிக்கும் முன், இனி ஆழ்ந்து யோசிப்போம்.
இனி, நிராகரிப்புகளை நிராகரிப்பது பற்றி அவசியம் பரிசீலிப்போம்!
லேனா தமிழ்வாணன்

