PUBLISHED ON : செப் 27, 2015

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
எஸ்.நடராஜன் மற்றும் கே.ஜி.விஜயனுடன் இணைந்து படம் தயாரிக்க விரும்பவில்லை தேவர். நல்ல தங்கைக்கு வசனம் எழுதிய ஏ.பி.நாகராஜனை அழைத்து, 'நமக்கு கூட்டணி சரியா வரல; அதனால, ஒரு புது கம்பெனி ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்; என்ன சொல்றீங்க...' என்று அபிப்ராயம் கேட்டார் தேவர்.
'நீங்க சொல்றது சரிதாண்ணே... ஆமா...உங்க பேனருக்கு என்ன பேரு வெக்கலாம்ன்னு இருக்கீங்க... ரிஜிஸ்டர் செய்யணும்ல்ல...' என்றார் ஏ.பி.நாகராஜன்.
தினம், ஒரு சினிமா கம்பெனி உதயமாகிக் கொண்டிருந்த சமயம் அது! மருதமலை முருகன் பிலிம்ஸ், செந்தில் ஆண்டவர் கிரியேஷன்ஸ், சிவசுப்ரமணியன் மூவிஸ், ஸ்ரீவள்ளி வேலன் கம்பைன்ஸ், முத்துக்குமரன் பிக்சர்ஸ், சரவணா பிலிம்ஸ் முருகனுக்கு எத்தனைப் பெயர்கள் உண்டோ, அத்தனை பெயர்களிலும் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் பதிவாகி இருந்தன.
'நீயே ஏதாவது ஒரு பேரை முடிவு செய்யேம்ப்பா...' என்றார் தேவர். படத்துக்கான கதையைக் கூட தேவரே எழுதி இருந்தார்.
'தேவர் பிலிம்ஸ் அளிக்கும், தாய்க்குப் பின் தாரம். பேனருக்கு உங்க பேரையே வெச்சுட்டேன்; பிடிச்சிருக்கா?' என்று கேட்டார். தேவரின் முகத்தில் திருப்தி.
கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவிலேயே முழுப் படத்தையும் எடுக்க விரும்பினார் சின்னப்பா. பழகிய இடம், தெரிந்த மனிதர்கள், கூடவே சுற்றமும், நட்பும்! ஆனால், அவருடைய இந்த திட்டத்திற்கு, 'சென்னையில் நடக்கும் ஷூட்டிங்குகள் பாதிக்கப்படும்...' எனக் கூறி, கோவைக்கு நடிக்க வர மறுத்து விட்டனர் திருவாங்கூர் சகோதரிகளான லலிதா மற்றும் பத்மினி.
விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சொன்னார் தேவர். அப்போது, எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடி பானுமதி என்று கருதினர் ரசிகர்கள்.
'சின்னப்பா... கதாநாயகி விஷயமெல்லாம் பெரிய பிரச்னையா... பத்மினி கிடைக்கலேன்னா, பானுமதியை நடிக்க வைப்போம்...' என்றார் சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர்.,
'பானுமதியா...' என்று வாயைப் பிளந்த தேவர், 'அந்த அம்மா ஒத்துக்குவாங்களா... நானும் புதுசு, திருமுகமும் பயந்த சுபாவம்...' என்றார்.
'நான் இருக்கேன் இல்ல... நானே அவங்கிட்டே பேசி கால்ஷீட் வாங்கித் தரேன்...' என்றவர், தேவரை அழைத்துச் சென்று பானுமதியிடம் அறிமுகப்படுத்தினார்.
'இவரு என் உயிர் நண்பர்; புதுசா படம் எடுக்க போறாரு. நீங்க நடிக்கணும்ன்னு கேட்க வந்திருக்கார்...' என்றார் எம்.ஜி.ஆர்.,
'அதுக்கென்ன, 'ஆக்ட்' கொடுத்தாப் போச்சு...' என்றார் பானுமதி.
தேவருக்கு இன்ப அதிர்ச்சி. சட்டென்று தன் நிபந்தனையை கூறினார். 'அம்மா... ஷூட்டிங் கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டுடியோவுல...' என்றார் தயக்கத்துடன்!
'என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர்., நாம பட்சிராஜாவோட, மலைக்கள்ளன் அங்கே போய் தானே நடிச்சோம்... படம் சூப்பர் ஹிட் ஆச்சே... எம்.ஜி.ஆரே உங்களுக்காக கோயம்புத்தூர் வராருன்னா, நான் வர மாட்டேனா, சந்தோஷமாப் போங்க; உங்க படமும் சக்சஸ் ஆகும்...' என்றார் பானுமதி.
சிவாஜி கணேசனின், மகாகவி காளிதாஸ் போன்ற சிறந்த படங்களைத் தயாரித்த ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரன், 'சின்னப்பா... ஷூட்டிங் சென்னையில் நடத்தறது தான் உனக்கு லாபம்; எல்லாம் பெரிய ஆர்ட்டிஸ்ட்டா ஒப்பந்தம் செய்திருக்கே...
எம்.ஜி.ஆர்., பானுமதி, கண்ணாம்பா, பாலையா இவங்கள் எல்லாம் லேசுப்பட்ட ஆளுங்களா... இன்னிக்கு உச்சாணிக் கொம்புல இருக்கிறவங்க. அவுங்க வந்து போற செலவு, ஓட்டல்ல தங்கற கணக்கு இதெல்லாம் எங்கேயோ போயிடும். வாகினி நாகிரெட்டி கிட்டே நான் சொல்றேன். உனக்கு தேவையான சவுகர்யங்களை செஞ்சு கொடுப்பாரு...' என்றார்.
பத்தாயிரம் ரூபாய் பணத்தோடும், சொந்தமாக ஒரு காரோடும் சென்னைக்கு குடியேறினார் தேவர். படம் ஆரம்பிப்பதற்கு முன், தன் தம்பியை அழைத்து, 'இதோ பாரப்பா... நான் பணம் போடுறவன்; எங்கிட்ட இருந்து சத்தம் வரத்தான் செய்யும். நாலு பேரு எதிரே கண்டபடி ஏசுறாரேன்னு நினைக்கக் கூடாது. உன்னை இயக்குனராக்கணும்ன்னு தான், சினிமா கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன். மருதமலை முருகனும், அண்ணன் எம்.ஜி.ஆரும் பக்கத்துணை; சீக்கிரமா கிளம்பு... இயக்குனர் கே.ராம்நாத், எல்.வி.பிரசாத், சி.எச்.நாராயணமூர்த்தின்னு ஒருத்தர் விடாம எல்லா பெரியவங்ககிட்டேயும் ஆசி வாங்கிட்டு வந்துடலாம்...' என்றார்.
'நாகராஜா... நீ பேர் வெச்ச நேரம் நல்ல நேரம்; அப்படியே படத்துக்கு வசனமும் எழுதிக் கொடுத்துடு. எனக்கு பெரிய வேலை முடிஞ்சுடும்...' என்றார்.
'அதுக்கென்ன எழுதித் தரேன்...' மகிழ்ச்சியோடு சொன்னார், ஏ.பி.நாகராஜன்.
ஆனால், தன் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை ஏ.பி.நாகராஜன். அதனால், கண்ணதாசனிடம் கேட்டார். அவர் உடனே சம்மதித்தாலும், பாடல்கள், வசனம் என்று பிசியாக இருந்ததால், தன் உதவியாளர் அய்யாப் பிள்ளையை, தேவர் பிலிம்சுக்கு அனுப்பினார்.
தேவர் பிலிம்ஸ் எம்ப்ளமாக காளையை தேர்ந்தெடுத்தனர். ஜூலை 7, 1955ல் தேவர் பிலிம்ஸ் உருவானது. அன்றே, தாய்க்குப் பின் தாரம் பட பூஜை, வாகினியில் நடைபெற்றது; நாகிரெட்டி கேமரா ஸ்விட்ச், 'ஆன்' செய்தார்.
நந்தனம் பெரியார் மாளிகையின் பின்புறம் உள்ளது சாதுல்லா தெரு; அங்கு ஒன்றாம் எண் வீட்டின் மாடியில் தேவர் பிலிம்ஸ் அலுவலகம் செயல்பட்டது. மாதம், 150 ரூபாய் வாடகை!
'முருகா... கம்புச் சண்டை உங்களுக்கு மட்டும் தான் வெச்சுருக்கேன்; நீங்க சொல்ற தேதில ஷூட்டிங் நடத்தலாம்...' என்றார் தேவர்.
'அண்ணே... கம்பு சுத்தற காட்சியில எங்கூட நீங்களே நடிங்க; வேறே ஆளு வேணாம். மர்மயோகி படத்துல, 'பைட்' செய்தோமே... அதேமாதிரி! எனக்காக, 'டூப்' போட்டுடாதீங்க. உங்களுக்கா, எனக்கான்னு ஒரு கை பாத்துடுவோம். சினிமா சண்டை கிடையாது; ரியல் பைட். சரியா...' மலரும் நினைவுகளில் எம்.ஜி.ஆரின் இதயமும், கைகளும் பரபரத்தன.
இருவரும் தினமும் சிலம்பம் சுற்றினர். ஒரு வாரம் ஒத்திகை; வாகினியில் காலையில் ஆரம்பித்த சண்டைக் காட்சி, மறுநாள் சூரியோதயத்தில் நிறைவு பெற்றது. நிஜமான அடிதடி என்பதால், கேமரா ஸ்பீட் எதுவும் கூட்டப்படவில்லை. பெரிய பெரிய ஷாட்டுகளாக எடுத்தனர். படப்பிடிப்பு நடந்த அன்று கூடிய கூட்டம், ஸ்டுடியோ அதிபர்களை திகைக்க வைத்தது. டெக்னீஷியன்கள் விசில் அடித்து, ஆரவாரம் செய்தனர். 50 அடி, 60 அடி தூரத்திற்கு எம்.ஜி.ஆரும், தேவரும் ஒருவரை ஒருவர் துரத்தியபடி மோதினர்.
வயலுக்கு நீர் பாய்ச்சும் பாசனத் தகராறு. அசல் களத்து மேட்டை, கண் முன் நிறுத்தினார் தேவர். அந்த காட்சிக்காகவே நாட்டுப்புறங்களில் அப்படம் வசூலை அள்ளும் என்று தெரிந்தது. கூடுதலாக, எம்.ஜி.ஆரை உயர்த்திக் காட்ட, என்ன செய்யலாம் என்று யோசித்தார் தேவர். சிறுவயதில் மதுரையில் பார்த்த ஜல்லிக்கட்டு கண் முன்னே ஓடியது.
'தமிழர் பண்பாட்டு கலாசாரத்தின் அடையாளம்; அதை எப்படியும் படத்தில் கொண்டு வர வேண்டும். எம்.ஜி.ஆர்., காளையை அடக்கி வெற்றி பெறுகிறார் என்றால் ரசிகன் அவனே ஜெயித்ததாக கும்மாளமிடுவான்; தியேட்டர்களில் கைதட்டலும், கூட்டமும் அதிகரிக்கும்...' என்று நினைத்த தேவர், தன் எண்ணத்தை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார்.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்

