தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சஷ்டி தேவியை தெரியுமா?

சஷ்டி தேவியை தெரியுமா?

சஷ்டி தேவியை தெரியுமா?


PUBLISHED ON : நவ 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முருகப்பெருமானின் துணைவி தெய்வானையை, தேவர்களின் தலைவனான, இந்திரனின் மகள் என புராணங்கள் சொல்கின்றன. சூரனை சம்ஹாரம் செய்ததற்கு பரிசாக, தன் மகளை முருகனுக்கு திருமணம் செய்து வைத்தான், இந்திரன்.

இவளை விஷ்ணுவின் மகள் என்றும் சொல்வர். முருகனின் தாய் பார்வதிக்கு அண்ணன், விஷ்ணு. தாய்மாமன் மகளை திருமணம் செய்து கொண்டார் முருகன் என்றும், ஒரு வரலாறு உண்டு. இவள், இந்திரனின் வளர்ப்பு மகள் என்றும் சொல்வர்.

ஆனால், வடமாநிலங்களில், தெய்வானையை, தேவசேனா என்றும், நேபாளம் மற்றும் கிழக்கு மாநிலங்களில், சஷ்டிதேவி என்றும் அழைக்கின்றனர்.

கந்தசஷ்டியை ஒட்டி, ஆறுநாட்கள் விரதம் இருக்கின்றனர், பக்தர்கள். குறிப்பாக, குழந்தை இல்லாத பெண்கள், இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பர்.

சஷ்டியில் இருந்தால், அகப்பையில் வரும் என்று இவர்கள் நம்புகின்றனர். 'அகப்பை என்பது, கர்ப்பப்பை' என, பொருள். இதைத்தான் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என, சாப்பாட்டு விஷயமாக மாற்றி விட்டனர்.

குழந்தை இல்லாதவர்கள் அனுஷ்டிக்கும் சஷ்டி விரதத்தை, முருகப் பெருமானை வேண்டி இருப்பதாக நாம் நம்புகிறோம். உண்மையில், இது தெய்வானையை வேண்டி அனுஷ்டிக்கும் விரதம். இவளைத் தான், சஷ்டிதேவி என்கின்றனர்.

பிரகிருதி எனப்படும், லட்சுமி தேவியே இவளது தாய். பிரகிருதியின் ஆறாவது அம்சத்தை, 'சத்திமையா' என்பர். தெய்வானையைத் தான், இந்தப் பெயரில் அழைக்கின்றனர். சஷ்டிமையா தான், சத்திமையா ஆகியிருக்கிறது.

தீபாவளி அமாவாசைக்கு அடுத்து வரும், வளர்பிறை ஆறாம் நாள், சஷ்டி திதி. சஷ்டிக்கு மறுநாளான சப்தமியன்று, இவளைத் திருமணம் செய்து கொண்டார், கார்த்திகேயன்.

முருகனை, கார்த்திகேயன் என, அழைக்கின்றனர், வடமாநிலத்தவர்.

சப்தமியன்று இந்த விழா நடப்பதால், இது சூரியனுக்குரிய விழாவாகவும் உள்ளது. இந்த நாளில் சூரியன் உதயமாகும் போதும், மறையும் போதும், அவருக்கு பூஜை செய்வர். இந்நாளில், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது பெரும் பயனைத் தரும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்யவும், உகந்த நாளாக இருக்கிறது.

சஷ்டிதேவியின் தொழில் என்ன தெரியுமா? குழந்தைகளைப் பாதுகாப்பது தான். கர்ப்பம் முதல், அது வளர்ந்து ஆளாகும் வரை, பாதுகாப்பாக இருப்பாள்.

சில மாநிலங்களில், இவளுக்கு பூஜை செய்வதன் மூலம், குழந்தைகளுக்கு நோய் வராது என நம்புகின்றனர். இவளுக்கு எட்டு குழந்தைகள் உண்டாம். குழந்தை இல்லாதவர்கள், இவளை நம்பிக்கையுடன் வணங்கினாலே போதும். ஒன்றுக்கு பல மடங்காக குழந்தைகளைக் கொடுப்பாள்.

மஞ்சள் நிறத்தவளான, இவளது வாகனம் பூனை. முருகனைப் போல ஆறு தலைகள் கொண்டவள். இவை, மூன்று மூன்று தலைகளாக பிரித்து அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், கைகள் இரண்டு தான்.

சஷ்டிதேவியை நாட்டுப்புற தெய்வமாகவும் வணங்கியுள்ளனர். ஒரு ஆலமரத்தடியில் சிவப்பு நிற கல் ஒன்றை வைத்து அலங்கரித்து வழிபட்டுள்ளனர். ஆக, தெய்வானையை பழம் பெரும் தெய்வமாகக் காட்டுகின்றன, ஆய்வு செய்திகள்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us