PUBLISHED ON : ஆக 04, 2019

தென் அமெரிக்காவின், பெரு நாட்டை ஒட்டிய மலைப் பகுதிகளில் காணப்படும் அபூர்வ விலங்கு, விக்குனா. இது, பெரு நாட்டின் தேசிய விலங்கு.
ஒட்டக வகையை சார்ந்த, மான் போன்ற அமைப்புடைய விலங்கு இது. இவற்றின் மேல் காணப்படும் பழுப்பு, காவி நிற ரோமங்களுக்காக, இவை வளர்க்கப்படுகின்றன.
ஒரு காலத்தில், இதன் எண்ணிக்கை, 6,000 ஆக குறைந்தது. பாதுகாக்கப்பட வேண்டிய விலங்காக அறிவிக்கப் பட்டதால், இன்று, 35 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது.
பாம்பு தோலை உரிப்பது போல், இந்த விலங்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, தன் ரோமத்தை உரித்து விடும். இதன் ரோமத்திற்கு கடும் கிராக்கி. ஒரு மீட்டர், 1,800 முதல் 3,000 அமெரிக்க டாலர்; இந்திய மதிப்பில், 1.25 லட்சம் முதல், இரண்டு லட்சம் ரூபாய் வரை.
சால்வை, சாக்ஸ், ஸ்வெட்டர், கோட்டு, சூட் மற்றும் கம்பளம் என, பலவற்றை தயாரித்து விற்கின்றனர். ஒரு சால்வையின் விலை, 1,000 அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில், 70 ஆயிரம் ரூபாய். கோட்டு விலை, 21 ஆயிரம் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில், 14.70 லட்சம் ரூபாய்.
இப்போது புரிகிறதா, விக்குனாவுக்கு, ஏன் இவ்வளவு, 'டிமாண்ட்' என்று.
— ஜோல்னாபையன்.
