தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தீர்க்காயுளுடன் குழந்தை வேண்டுமா?

தீர்க்காயுளுடன் குழந்தை வேண்டுமா?

தீர்க்காயுளுடன் குழந்தை வேண்டுமா?


PUBLISHED ON : பிப் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு சிலருக்கு குழந்தை பிறந்து இறந்து விடும்; புத்திரசோகம் தாளாமல் தவிப்பர். இன்னும் சில குழந்தைகளுக்கோ, நோய் பாடாய் படுத்தும். இத்தகையோர், சிவராத்திரி அன்று, திருச்சி அருகிலுள்ள திருப்பாற்றுறை, பாற்றுறைநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், நோயற்ற, தீர்க்காயுள் மிக்க மக்கள் செல்வத்தைப் பெறலாம். 16 வயதிலேயே மரணத்தை சந்திக்க இருந்த மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது!

இப்பகுதியை ஆண்ட சோழன், ஒருசமயம், வேட்டைக்கு சென்றபோது, வழியில் ஓய்வெடுத்தான். அப்போது, அருகில் புதரில் இருந்து, வெண்ணிற பறவை ஒன்று பறந்து சென்றது. அதன் மீது ஆசை கொண்டு அம்பு எய்தான்; ஆனால், அது தப்பி விட்டது.

சில நாட்கள் கழித்து, மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை, புதருக்குள் இருந்து வெளியேறி, பறந்து செல்வதைக் கண்டான். 'புதர் தானே அதன் இருப்பிடம்... திரும்பி வந்ததும், பிடித்து விடலாம்...' எனக் கருதி, மறைந்திருந்தான்.

பறவை வரவே இல்லை; ஆனால், சிறிது நேரத்தில் அவ்விடம் முழுவதும் பால் மணம் வீசியது. சந்தேகப்பட்ட மன்னன், புதரை வெட்ட, உள்ளே ஒரு புற்று இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்து அரண்மனைக்கு திரும்பி விட்டான், மன்னன்.

அன்றிரவு, அவனது கனவில், அசரீரியாக, பால் வெளிப்பட்ட இடத்தில், தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார், சிவன். அதன்பின், அவ்விடத்தில் கோவில் கட்டி வழிபட்டான், மன்னன். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சிவனுக்கு, 'பாற்றுறை நாதர்' என்றும், ஊருக்கு, 'பாற்றுறை' (பால்துறை) என்றும் பெயர் வந்தது.

சிவராத்திரி மற்றும் பவுர்ணமி அன்று, சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், ஆயுள் பலம் மிக்க குழந்தைகள் பிறப்பர், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மற்றும் பங்குனியில் குறிப்பிட்ட நாட்களில், சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது.

கருவறை சுற்றுச் சுவரில், வீணை வாசிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார், தட்சிணாமூர்த்தி. அவரது இடது கால் சற்று மடங்கி, நளினமாக இருக்கிறது. இதை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கின்றனர். அருகே சீடர்கள் இல்லை. தட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள், இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார்.

கொள்ளிடம், காவிரி ஆகிய ஆறுகளுக்கு மத்தியில் கோவில் அமைந்திருக்கிறது. நந்தியும், பலி பீடமும் கோவிலுக்கு வெளியில் இருக்கிறது. தென் திசை, எமதர்ம ராஜாவின் திசை. இவரது உக்கிரத்தைக் குறைக்க, தெற்கு நோக்கி அருளுகிறாள், அம்பாள் நித்யகல்யாணி. குழந்தைகளை இழந்து, மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுவோர், அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.

பஞ்சபூத தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், திவ்யதேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கம் ஆகியவை இக்கோவில் அருகில் உள்ளன.

திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழியாக கல்லணை செல்லும் சாலையில், 12 கி.மீ., கடந்தால், பனையபுரம் கிராமம் வரும்; இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., சென்றால், கோவிலை அடையலாம்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us