தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : பிப் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணப்பெண்ணின் தைரியம்!

என் உறவினர் ஒருவர், எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார். அவர் மகனுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வருகிறார். சமீபத்தில், ஜாதகம் பொருந்தி, எல்லாம் கூடி வந்த நிலையில் பெண்ணை நிச்சயம் செய்ய தயங்கவே, பெண்ணின் தந்தை, 'நீங்க எதிர்பார்த்தபடியே என் பெண் இருக்கிறாள்; நீங்க கேட்ட சீர்வரிசையையும் செய்ய சம்மதிச்சுட்டோம்; அப்புறம் என்ன தயக்கம்...' என்று கேட்டார். அதற்கு உறவினர், 'பெண்ணோட அம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா சொன்னீங்களே... இது, கொஞ்ச காலம் கழிச்சு பெண்ணுக்கும் வர வாய்ப்பிருக்கு; அதான் யோசிக்கிறேன்...' என்று சொல்ல, உடனே, அனைவர் முன்னிலையிலும், மணப்பெண் அதிரடியாக, 'இந்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா... மாப்பிள்ளையோட அப்பாவுக்கு சந்தேக புத்தி இருக்கு; இது கொஞ்ச காலம் கழிச்சு, மாப்பிள்ளைக்கும் வர வாய்ப்பிருக்கு. அப்படி வர்றப்ப நான் நிம்மதியா வாழ முடியாது. அதனால, வேற இடம் பாருங்கப்பா...' என்று சத்தமாக சொல்ல, உறவினர் ஆடிப் போனார்.

இப்போதெல்லாம் பேயறைந்தது போல் திரிகிறார் அந்த உறவினர். பெண் வீட்டார் தம்மை எதிர்த்து பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில், வாய்க்கு வந்தபடி பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு, இது, சரியான சாட்டையடி!

ஆர்.பிரபு, கோவை.

உழைப்பின் பரிசு!

சிலர், இருசக்கர வாகனங்களின் பின், 'இட்ஸ் மை மாம்ஸ் கிப்ட், இட்ஸ் மை டாட்ஸ் கிப்ட்...' என்று எழுதியிருப்பதை பார்த்திருப்போம். சமீபத்தில் ஒரு இரு சக்கர வாகனத்தில், 'இட் இஸ் எ கிப்ட் பார் மை ஹார்டு ஒர்க்' என்று எழுதியிருந்ததை பார்த்தேன்.

சிக்னலில், அந்த இருசக்கர வாகனம் நின்ற போது, அதில் அமர்ந்திருந்த இளைஞனிடம், 'தம்பி... உன்னை பார்த்தால் மாணவன் போல தெரியுது. இந்த பைக், நீ சுயமாக சம்பாதிச்சு வாங்கியதா?' எனக் கேட்டேன். அதற்கு அந்த இளைஞன், 'ஆமாம் சார்... நான் கல்லுாரியில் படிக்கிறேன்; மாலையில், பகுதி நேர வேலை செய்து சம்பாதித்ததில், இந்த பைக்கை வாங்கினேன்...' என்றான்.

இரு சக்கர வாகனங்களில், அம்மா, அப்பா வாங்கிக் கொடுத்தது என்றும், காதலை பற்றியும், பெண்களை பற்றியும் எழுதும் இளைஞர்கள், இதுபோன்ற பயனுள்ள விஷயங்களை எழுதி, மற்றவர்களை ஊக்கப் படுத்தலாமே!

— ஜெ.கண்ணன், சென்னை.

'கேரி பேக்'கை தவிர்க்கலாமே!

கடந்த வாரம், என் சினேகிதியின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவள் வாழை இலைகளை சின்ன சின்னதாக, நறுக்கிக் கொண்டிருந்தாள். நான் அதுபற்றி கேட்ட போது, 'எங்க தெரு பூக்காரம்மாவும், நானும், கேரி பேக் பயன்பாட்டை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்ப, 'கேரி பேக் பயன்படுத்துறத முற்றிலும் தவிர்க்க முடியாது; ஆனால், இயன்ற வரை குறைக்கலாம். நீங்க கூட, அந்த காலம் மாதிரி, வாழை இலையில் பூவை வைச்சு, நாரால் கட்டி கொடுக்கலாம்...' என்றேன். அதற்கு அவர், 'நீங்க சொல்றபடி செய்யலாம்; ஆனால், வாழை இலை அடிக்கடி கிடைக்கிறதில்ல; அதோட, எனக்கும் கட்டுப்படி ஆகாது...' என்றார்.

'உடனே, 'எங்க வீட்டில் இருக்கும் வாழை மரத்திலிருந்து வாழை இலைகளை பறித்து தர்றேன்'னு சொல்லி, வாழை இலைகளை பறித்து, இதுபோல் நறுக்கி கொடுக்கிறேன்; ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி...' என்றாள். அவளின் முயற்சியை மனதார பாராட்டினேன்!

—எஸ்.பி.சுசீலாதேவி, சென்னை.

டூ - வீலர் திருட்டில் இதுவும் ஒரு விதம்!

அண்மையில், என் பைக் திருடு போனது. போலீசில் புகார் கொடுத்து, கவலையோடு இருந்த என்னை, தன், டூ - வீலரில், பேருந்து மற்றும் ரயில் நிலையம், அருகிலுள்ள சைக்கிள் ஸ்டாண்ட் என, எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று, பைக் இருக்கிறதா என்று தேடச் சொன்னான், என் நண்பன்.

பல ஸ்டாண்டுகளில் தேடியபோது, ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் என் பைக் இருப்பதை கண்டுபிடித்தேன். உடனே, போலீசில் தகவல் சொல்லி, என் பைக் ஆவணங்களை காட்டி, அதை மீட்டேன்.

'திருடு போன பைக், சைக்கிள் ஸ்டாண்டில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது உனக்கு எப்படி தெரியும்?' என்று என் நண்பனிடம் கேட்டபோது, 'டூ - வீலர்களை கள்ளச் சாவி போட்டு திருடுவோர், அதை, சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி விடுவர்.

'டூ - வீலரை பறிகொடுத்தவர், ஊர் முழுவதும் தேடி அலுத்து விடுவர்; ஒரு வாரம் சென்றதும், சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து எடுத்து அதை விற்று விடுவான், டூ - வீலர் திருடியவன்...' என்றான்.

சைக்கிள் மற்றும் டூ - வீலரை பறிகொடுத்தோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது!

ந.சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us