PUBLISHED ON : பிப் 11, 2018

சீனிவாசன், 'தேங்காய்' சீனிவாசனாக திரை உலகில் புகழ்பெற்று விட்ட காலம்...
ராயப்பேட்டையில் புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தார், தேங்காய் சீனிவாசன். தன் நண்பர்களுடன் விழாவிற்கு சென்றிருந்தார், சந்திரபாபுவுடன், வாலிப விருந்து படத்தில் நடித்த வில்லன் நடிகர், கண்ணன். அப்போது ஓர் அறையில், ஓர் உருவம் மிகவும் சோர்வாக, பரிதாபமாக உட்கார்ந்திருப்பதை பார்த்து, யாராக இருக்கும் என, அருகில் சென்று பார்த்த கண்ணனுக்கு பெரிய அதிர்ச்சி. யாரிடம் சீனிவாசனை அறிமுகப்படுத்தி வைத்தாரோ அதே சந்திரபாபுதான் அப்படி ஒரு நிலையில் இருந்தார்.
'என்ன சார் இது...' உடைந்த குரலில் சந்திரபாபுவிடம் கேட்டார், கண்ணன்.
'நம்ம சீனிவாசன் வீட்டு விசேஷம் இது; நான் வராம இருக்கலாமா... சீனிவாசன் தான் எனக்கு வாரத்துல பாதி நாள் சாப்பாடு போடுறான்...' என்றார், சந்திரபாபு.
அப்போது அங்கு வந்த சீனிவாசன், 'அண்ணா... என்னோட கார்ல சாப்பாடு, பாட்டில் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்; நீங்க வீட்டுக்கு போயிடுங்க...' என்றார்.
அதற்கு, 'இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்; உன்னோட வீட்டு விசேஷத்தை நான் மகிழ்ச்சியா கொண்டாட வேணாமா... அதனால, இன்னொரு பாட்டிலுக்கும் ஏற்பாடு பண்ணிடு...' என சொல்லி, அங்கிருந்து கிளம்பினார், சந்திரபாபு.
திடீர் திடீரென, யாரும் எதிர்பார்க்காத காரியங்களை செய்வது, சந்திரபாபுவின் பழக்கம். சிவாஜி கணேசனின் சகோதரர் சண்முகத்தின் திருமணம், போக் சாலையில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. ஏராளமான கூட்டம்; பல பிரமுகர்கள் கார்களில் வர, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஆகிவிட்டது. அப்போது, தன் காரில் அங்கு வந்த சந்திரபாபு, காரிலிருந்து இறங்கி, நெரிசலில் நுழைந்து, பயிற்சி பெற்ற டிராபிக் போலீஸ் போல், வாகனங்களை ஒழுங்குபடுத்த துவங்கினார்.
பின்னாளில், பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில், இயக்குனர், கே.எஸ். கோபாலகிருஷ்ணனிடம் சென்று வாய்ப்பு கேட்டார் சந்திரபாபு. 'நீங்களே இயக்குவீங்களே... படப்பிடிப்பு குழுவினரை உங்ககிட்டயே ஒப்படைக்கிறேன்; நீங்க விரும்புகிற மாதிரி, காட்சிகளை எடுத்து தாங்க...' என்றார், கே.எஸ்.ஜி.,
அப்படம் தான், நீதி. இப்படத்தில், சந்திரபாபுவிற்கு, டிராபிக் போலீஸ் வேடம். ஒரு காட்சியில், வாகன நெரிசலை சமாளிக்க முடியாமல், அங்கும் இங்கும் விசில் அடித்தபடியே ஓடும்போது, தான் அணிந்திருந்த பெரிய போலீஸ் டிரவுசர் அவிழ்ந்து விழுவதுபோல் படமாக்கினார், சந்திரபாபு.
நீதி படத்தில் நடிக்கும்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. முன் போல் அவரால் நடிக்கவோ, நடனம் ஆடவோ, பாடவோ முடியவில்லை; மிகவும் சிரமப்பட்டார். ஒரு பாடலில் மனோரமாவுடன் சேர்ந்து ஆடுவது போல் காட்சி அமைப்பு. நடன இயக்குனர் சொன்ன வேகமான ஸ்டெப்புக்கு மனோரமா ஆட, சந்திரபாபுவால் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை.
அளவுக்கு அதிகமான மது மற்றும் பட்டினியால் நோயாளி ஆகிப்போனார், சந்திரபாபு. அந்த நாட்களில் அவர் அனுபவித்த வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
எம்.எஸ்.விஸ்வநாதன், தேங்காய் சீனிவாசன், பாலாஜி ஆகிய மூவரும் தான் இறுதி நாட்களில், சந்திரபாபுவுக்கு ஆதரவு அளித்தனர். அவர்கள் தான் சந்திரபாபுவை மது அருந்த விடாமல், தம் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்தனர்.
அந்த இறுதி நாட்களின் வேதனையை சந்திரபாபுவே சொல்கிறார்:
சுமார், 80 கிலோ எடை இருந்த நான், 42 கிலோவாக குறைந்து விட்டேன். எந்த நிமிஷத்திலும், நான் இறந்து விடலாம் என்ற நிலை!
ஒருநாள், குளியலறைக்கு சென்றவன், அப்படியே மயங்கி விழுந்து விட்டேன். வாளியில் இருந்த தண்ணீர் கீழே கொட்டி, துணியெல்லாம் நனைந்து விட்டது. ஐந்து மணி நேரம் மயக்க நிலையிலேயே கிடந்திருக்கிறேன். பின், சென்னை வில்லிங்டன் மருத்துவமனையில் என்னை, 'அட்மிட்' செய்தனர். இம்மருத்துவமனையில் வசதி அதிகம்; அதனால், செலவும் அதிகம்.
என்னிடமோ ஒரு பைசா கூட இல்லை; 20 நாட்கள் பறந்து விட்டன. மறுநாள் நான் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி விட்டார், டாக்டர். பணத்துக்கு எங்கே போவது... சென்ற முறை, 12 ஆயிரம் ரூபாய் செலவழித்தேன். இப்போது அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது... பயந்து நடுங்கினேன்.
இயக்குனர் ராமண்ணாவுக்கு போன் செய்தேன்; நான் பணம் கேட்கக்கூடிய ஒரே கம்பெனி அவருடையது தான். நான் கேட்ட பணத்தை கொடுத்து அனுப்பியிருந்தார். அதை கொடுத்து, மறுநாள் வெளியே வந்தேன். பணத்துக்கு எங்கே போவது, எப்படி சமாளிப்பது என, அன்று நான் பயந்ததுபோல வாழ்வில் என்றுமே பயந்தது கிடையாது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
அதன்பின், 1973ல் இறுதியில், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட சந்திரபாபு, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்நிலையிலும், நோயாளி போல் நடந்து கொள்ளாமல், தன் வழக்கமான குறும்புகளை தொடரவே செய்தார்.
மருத்துவமனையில் சந்திரபாபு இருந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த முகம்மது உமர் என்பவர், அந்நாட்கள் பற்றி ஒரு பத்திரிகையில் எழுதினார். அதில்...
சுமார், நான்கு மாதத்துக்கு முன், சென்னை அரசு பொது மருத்துவமனையில், முதல் மாடி, 'வி' வார்டில் சிகிச்சை பெற்று வந்தேன். அந்த அறையில், மொத்தம் ஆறு நோயாளிகள் இருந்தோம். அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர். அவருடைய அம்மா தான் அவரை கவனித்துக் கொள்வார். ஒரு சமயம் அவரை பார்க்க, அவரது அண்ணனும், அண்ணியும் வந்தபோது, கோபத்தில் திட்டி அனுப்பி விட்டார். சிரிப்பு நடிகராக இருந்தும், அவர் எப்போதும் சீரியசாகவே இருந்தது பற்றி மற்ற ஐந்து நோயாளிகளும் ஆச்சரியப்பட்டோம். எங்கள் வீட்டு குழந்தைகள் வந்தால், செல்லமாக கூப்பிட்டு, தன் படுக்கையில் உட்கார வைத்து கொஞ்சுவார்.
ஆனால், அவரது செய்கைகளோ சில சமயம் சிரிப்பையும், பல சமயம் பயத்தையும் உண்டு பண்ணும்.
ஒருமுறை, வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு, அதன் தோலை என் படுக்கையில் வீசி எறிந்தார். 'இது என்ன அநாகரிகம்...' என நினைத்து, அவர் தாயார் வந்ததும், பாபுவுக்கு தெரியாமல் புகார் செய்தோம். அந்த அம்மாள் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இதனால், பாபு ஒருமுறை இளநீர் சாப்பிடப் போகிறார் என்று தெரிந்ததும், நாங்கள் அத்தனை பேரும் இளநீரை சாப்பிட்டவுடன் தேங்காயை எங்கள் மீது எறிந்து விடுவாரோ என்று பயந்து, அறையை விட்டு வராந்தாவுக்கு அவசரமாக ஓடினோம். நல்லவேளை அவர் அப்படி செய்யவில்லை.
சாரி என்ற மருத்துவ பிரதிநிதி, மஞ்சள் காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தவர். டாக்டர் சொன்னபடி ஒழுங்காக மாத்திரை, மருந்து, பழரசம் ஆகியவற்றை குறித்த நேரத்தில் சாப்பிட்டு, நோயிலிருந்து பூரணமாக குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' ஆகிப் போனார்.
சந்திரபாபுவுக்கு எதிர் கட்டில் அவருடையது. எப்போது ஜூஸ் குடித்தாலும் பாபுவுக்கு முதுகை காட்டி குடிப்பார், சாரி. ஒருமுறை, அவரை பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார்; அவரை கண் ஜாடையால் அழைத்தார், பாபு.
— தொடரும்.
நன்றி:சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.
முகில்
