தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீச் மணலில் எழுத்தாளர் வட்டம் அமர்ந்திருந்தது. இலக்கிய பேச்சுகளினுாடே, ஒவ்வொருவரின் வாய்க்குள் உற்சாக பானமும் சென்று கொண்டிருந்தது.

கம்பரைப் பற்றி ஆரம்பித்தார் எழுத்தாளர் ராமசுப்ரமணியம்...

கம்பரிடம் ஒரு விறகுத் தலையன் வந்து, 'எனக்கு அரசரிடம் பரிசு வாங்கித் தரவேண்டும்...' என்று சொன்னான்.

'எதையாவது பாடி எடுத்து வா; பரிசு வாங்கித் தருகிறேன்...' என்று சொன்னார், கவிச்சக்கரவர்த்தி.

அவனுக்கு தமிழில் பயிற்சி இல்லை. அதனால், வீதி வழி நடந்து போகும் போது, வீதியில், சிறு பிள்ளைகள் வீடு கட்டி விளையாடுவதைப் பார்த்தான்.

ஒரு பெண், ஒரு ஆண் பிள்ளையை உட்கார வைத்து, 'நீ தான் மாப்பிள்ளை; நான் தான் உன் மனைவி; இந்தா, இதைச் சாப்பிடு...' என்று, ஒரு சிறிய இலையில் மண்ணைப் படைத்தாள்.

அதை கண்ட விறகுத் தலையன், 'மண்ணுண்ணி மாப்பிள்ளையே...' என்று சொல்லிக் கொண்டான். அதையே, தன் கவியின் துவக்க வரியாக வைத்தான்.

பின், ஒரு காக்கை கத்தியது... 'காவிறையே...' என்பதை அதனுடன் சேர்த்துக் கொண்டான். குயிலின் குரல் காதில் பட்டது... 'கூவிறையே...' என்று பாடினான்.

பின், ஒரு பெருச்சாளி அருகில் இருந்த கோவிலுக்குள் ஓடுவதை கண்டான்... 'உங்களப்பன் கோவில் பெருச்சாளி...' என்று பாட்டை நீட்டினான். அப்போது எதிரே வந்த அவன் நண்பனிடம் இந்த பாட்டை, விறகுத் தலையன் கூறவே, 'என்னடா இது... கன்னா பின்னாவென்று இருக்கிறது; அரசன் பேர் வேண்டாமா?' என்று கேட்டான்.

அவன் சொன்னதையும் சோழ மன்னன் பேரையும் சேர்த்து, 'கன்னா பின்னா மன்னா, தென்னா சோழங்கப் பெருமானே...' என்று பாட்டை முடித்தான்.

'மண்ணுண்ணி மாப்பிள்ளையே... காவிறையே, கூவிறையே... உங்களப்பன் கோவில் பெருச்சாளி... கன்னா, பின்னா, மன்னா, தென்னா, சோழங்கப் பெருமானே...' என்று கவிதையாக கம்பரிடம் போய் சொன்னான்.

அவர், அதைக் கேட்டு புன்முறுவல் பூத்தார். அவனை அரசவைக்கு அழைத்துச் சென்றார்; அங்கே, அவன் தன் பாடலைச் சொன்னான். கேட்டவர் நகைத்தனர்; கம்பர் எழுந்து உரை கூறினார்...

'இதற்கு பொருள் என்ன என்பதை ஆராய்ந்து காண வேண்டும்; நம்முடைய அரசரை முதலில், 'மன்மதன்' என்று அழைத்திருக்கிறார் புலவர். மண்ணுண்ணி  - (மண்ணை உண்டு) உலகத்தை உண்ட திருமால் - மாதிருமகள் இந்த இருவருக்கும் பிள்ளையாகிய மன்மதனே என்று பொருள்பட, 'மண்ணுண்ணி மாப்பிள்ளையே...' என்று தொடங்கி இருக்கிறார்...

'கா என்பது கற்பகம்; அதற்கு இறைவன் இந்திரன். ஆதலின், காவிறையே என்பதற்கு, இந்திரன் என்று பொருள்!

'கூ என்பது பூமி; இதற்கு இறைவன் நம் பெருமான்; அதாவது, அரசன். அதையே, 'கூவிறையே' என்கிறான்.

'உங்கள் தந்தையும் பெரும் சக்கரவர்த்தி என்பதையே, 'உங்களப்பன் கோ' என்றார். அவர் வில் வித்தையில் பெரிய ஆள்; அதையே, 'வில்லில் பெரிய ஆளி' என்று பிரித்துச் சொல்கிறார். வில்லில் என்பது விலில் என்றும், பெரிது என்பது பெருசு என்றும் விகாரமாயின.

'கன்னா - கர்ணனே, பின்னா - அவனுடைய தம்பியாகிய தர்மபுத்திரனே, மன்னா - அரசனே, தென்னா - தென்னாட்டு தலைவனே, சோழங்கப் பெருமானே - சோழ நாட்டை அங்கமாய் உடைய பெரியவனே... இப்படி பொருள் கொள்ளும்படி பாடிய இப்புலவரின் புலமையை நாம் பாராட்ட வேண்டும்...' என்று உரை விரித்தார், கம்பர்.

அத்தோடு நிறுத்தவில்லை... 'இது இணை குறளாசிரியப்பா, ஏகாரத்தில் முடிந்திருக்கிறது...' என்று கூறி, சீரும் பிரித்துக் காட்டினார்.

- இப்படி அவர் முடிக்கவும், எழுத்தாளப்படையும், 'அங்கிள் ஜானி' உள்ளே போன மயக்கத்தில், கவி படைக்க ஆரம்பித்தனர்; நான், 'ஜூட்' விட்டேன்!

மதிய உணவு வேளை -

சாப்பாட்டு டப்பாவைத் திறந்து, சாப்பிட்டபடியே பெண் உதவி ஆசிரியைகள், 'குடும்ப வாழ்க்கையில் அதிக அளவு விட்டுக் கொடுத்து, தியாகம் செய்வது ஆண்களா, பெண்களா?' என்று சுவைபட விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர்.

துாரத்தில் உட்கார்ந்திருந்த நான், அவ்விவாதத்தை காதைத் தீட்டி கேட்டுக் கொண்டிருந்தேன். அருகில் அமர்ந்திருந்த நடுத்தெரு நாராயணன், 'இது பொம்பளைங்க விவாதம்... உருப்படியா ஒரு முடிவுக்கும் வராது; சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த தியாகம் பற்றி கூறுகிறேன் கேள்...' என்றார்.

'ராமநாதன்... ராமநாதன்னு வக்கீல்...' என்று அவர் ஆரம்பிக்கும் போதே இடை மறித்தேன்...

'ரெண்டு ராமநாதன்களா?'

'போதும்ப்பா கிண்டல்... சொல்றதைக் கேளு... ஒத்துழையாமை போராட்டத்தை துவங்குவதற்கு முன், அதற்கு ஆதரவு திரட்டுவதற்காக மவுலானா சவுகத் அலியோடு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார், காந்திஜி.

'சவுகத் - காந்திஜி ஜோடி வினோதமாயிருந்தது. அவர்கள் இருவரும் இந்தியா முழுவதும் தெரிந்த பெரிய மனிதர்கள். ஒருவர் உருவத்தில்; மற்றவர், சக்தியில்!

'அக்காலத்தில், அவர்களைப் பற்றி ஒரு புரளி கிளப்பி விட்டிருந்தனர். தினசரி, அவர்கள் ஆகாரத்திற்கு ஒரு உயிருள்ள ஆடு தேவை; பாலைக் கறந்து காந்திஜிக்கும், ஆட்டை அடித்து மவுலானாவுக்கும் கொடுத்து விட வேண்டும்... இதுவே அந்தப் புரளி.

'ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட ராமநாதன் போன்ற வக்கீல்கள் ரொம்பவே யோசித்தனர். சிலர் குடும்பச் சுமையால், உடனே முடிவுக்கு வரமுடியாமல் தவித்தனர்.

'வக்கீல் மற்றும் சட்டக் கல்லுாரி மாணவர்கள் மட்டும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார் காந்திஜி. அப்பொழுது தங்களுடைய நிலைமையை விளக்கினர், வக்கீல்கள். 'நாங்கள் பணக்காரர்கள் அல்ல; சிலர், பெரிய குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. எங்களுடைய தொழிலை விட்டு விட்டால் எங்களையும், எங்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றுவது எப்படி?' என்று, அவர்கள் கேட்டனர்.

'அதற்கு, 'இதற்கு என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்; நான், ஒரு தொழிலும் செய்யவில்லை. நான் அதிகமாக சாப்பிடா விட்டாலும், ஏதாவது சாப்பிட்டாக வேண்டும். ஒருவேளைக்கு, வாட்டிய ரொட்டிகள், இரண்டு தேவை. ஆனால், நான் சாப்பிடும் போது இரண்டல்ல, 20 ரொட்டிகள் கொண்டு வந்து வைக்கின்றனர்...' என்றார் காந்திஜி.

'மேலும், 'என்னுடைய பிரசாரத்திற்காக வெளியில் அலைவதற்கு ஒரு மோட்டார் கார் அவசியம். ஆனால், நான் கிளம்பும் போதெல்லாம், 20 மோட்டார்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதன் இரண்டு கார்களில் கூட ஏற முடியாத போது இவைகளெல்லாம் தேவைக்கு அதிகம் என்பது உங்களுக்குத் தெரியும். தேவைக்கு அதிகமாக எனக்கு கிடைப்பதற்குக் காரணம், என்னுடைய தியாகம் தான். நீங்களும் தேசத்திற்காக உங்களைத் தியாகம் செய்யுங்கள்; உங்களுடைய தேசமாகிய பெண், உங்கள் வசப்பட்டு, உங்கள் கையைப் பற்றி கொள்வாள்...' என்றார்.

'இந்த சொற்கள்,வக்கீல்களிடம் ஆனந்தத்தை உண்டாக்கியது. தேசம், தாய்நாடாக விளங்கி, அவர்களுடைய வணக்கத்தைக் கோரவில்லை. காதலியாக உருவெடுத்து அவர்களை அணைக்க அழைத்ததாக நினைத்தனர். இதன் பின், அவர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழவில்லை. சங்கத்தின் அங்கத்தினர்கள் ஆறு பேர், காந்திஜி தங்கியிருந்த ஜாகைக்குப் போய் ஒத்துழையாமைத் திட்டத்தின்படி வேலையைப் நிராகரித்த வக்கீல்களின் பெயர் வரிசையில், அவர்களையும் சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்தனர்...' என்று நடுத்தெரு நாராயணன் சொல்லி முடித்தார்; பெண், உ.ஆ.,களின் விவாதம் நீண்டு கொண்டிருந்தது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us