தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கடவுள் பால் குடிப்பாரா?

கடவுள் பால் குடிப்பாரா?

கடவுள் பால் குடிப்பாரா?


PUBLISHED ON : மே 07, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



எந்த நேரமும் பகவானைப் பற்றிப் பாடுவதும், மக்களுக்குப் பக்தியை ஊட்டுவதையும் மட்டுமே, குறிக்கோளாகக் கொண்டிருந்தார், பாகவதர் ஒருவர். அவரது மனைவி- ஜீஜிபாய் (ஆவலி என்றும் சொல்வதுண்டு). அந்த தம்பதியின் மகள், -பாகீரதி.

எந்நேரமும் பகவான் நினைப்பிலேயே இருந்த பாகவதர், அந்த ஊரில் இருக்கும் கோவிலுக்கு, மகளுடன் போய், பகவானுக்கு பூஜை செய்து, திரும்புவார். இது, பாகவதர் மனைவிக்குப் பிடிக்கவில்லை.

'எப்பப் பார்த்தாலும் சாமி சாமின்னு புலம்பிக்கிட்டே இருக்காரு; சாமியா வந்து படியளக்கப் போவுது... இதுல பொண்ணயும் வேற கோவிலுக்கு கூட்டிக்கிட்டுப் போறாரு...' என, புலம்பினாள்.

ஒருநாள் வழக்கம்போல், பாகவதரும், மகளும் கோவிலுக்கு சென்று, வீடு திரும்பினர்.

அப்போது, 'அப்பாவும், பொண்ணுமா தினமும் கோவிலுக்குப் போறீங்க. வரும்போது, கையில வெறும் பாத்திரத்தோட வர்றீங்க. அதுல கொண்டு போற பால என்ன பண்றீங்க?' என, கேட்டாள், ஜீஜிபாய்.

'அம்மா... கோவிலுக்குப் போய், பூஜையெல்லாம் முடிச்சிட்டு, கொண்டு போன பாலை சாமிக்கு நைவேத்தியம் செய்வோம். சாமி, அந்த பாலை குடிச்சிட்டு, கொஞ்சம் மீதி வைக்கும். அதை நானும், அப்பாவும் குடிப்போம்...' என்றாள், மகள்.

'என்ன... சாமி பால் குடிக்கறாரா...' என்று ஆச்சரியப்பட்டாள்.

மறுநாள் அதிகாலையில் எழுந்து, நீராடி, பாலை காய்ச்சி எடுத்து, வேகமாகக் கோவிலுக்கு போய், கொதிக்கும் பாலை, பகவான் முன் வைத்தாள், ஜீஜிபாய்.

பகவானுக்கு தர்ம சங்கடம்.

'பாலை குடித்தால், ஜீஜிபாய் திட்டுவாள்; குடிக்கா விட்டாலோ, கணவரும், மகளும் தன்னை ஏமாற்றுவதாக அவர்களைத் திட்டுவாள். இவளை என்ன செய்வது?' என்று யோசனை செய்தார்.

அதற்குள் ஜீஜிபாய், கொதித்த பாலில் சிறிதளவு எடுத்து, பகவானின் உதடுகளில் ஊற்றினாள். பகவான் சற்றே முகத்தைத் திருப்பிக் கொண்டார். பகவானின் முகத்தைப் பார்த்தாள், ஜீஜிபாய். பகவான் உதடுகள் புண்ணாகி வீங்கிப் போய் இருந்தன.

அதேசமயம், வீட்டில் தியானத்திலிருந்த பாகவதரின் முன், பகவான் தோன்றி, 'இங்கே பார், கொதிக்கும் பாலை உன் மனைவி எனக்கு அளித்ததால், என் உதடுகள் வீங்கி விட்டன...' என்று சொல்லி, மறைந்தார்.

உடனே, வேகமாகக் கோவிலுக்கு வந்து, உண்மை உணர்ந்து நடுங்கி, 'பகவானே, மன்னித்து விடு...' என்று, அழுது புலம்பினார், பாகவதர்.

பகவானும் மன்னித்தார். ஆனால், திரும்பிய தன் முகத்தை, நேராக திருப்பிக் கொள்ளவில்லை. இன்றும் அப்படியே தான் இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம், நவீன, புனேக்கு அருகில் உள்ள, தேஹு என்ற ஊரில், இந்தப் பகவானைத் தரிசிக்கலாம்.

பக்தர்களுக்காகப் பகவான் செய்யும் செயல்களை விளக்கும் திருவடிவம் அது.

அந்தப் பாகவதர்,- பக்த துகாராம்!

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us