தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீடு!

வீடு!

வீடு!


PUBLISHED ON : மே 07, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புத்தம், புதிதாக கட்டப்பட்டு கிரகப் பிரவேசம் பண்ணியிருந்த வீட்டு வாசலில் வந்து நின்றது, அந்த டாக்சி.

டாக்சியிலிருந்து முதலில் இறங்கின சேகர், பின் கதவை திறந்து, ''வாங்கம்மா... வாங்கப்பா... இது தான் வீடு. இறங்குங்க...'' என்றான்.

டாக்சியில் இருந்து இறங்கினர், அம்மா திரிபுரசுந்தரியும், அப்பா சிவகாமி நாதனும். இருவரும், 65 வயதைக் கடந்தவர்கள்.

'ஸ்டிக்' ஊன்றி நின்றார், சிவகாமிநாதன்.

வண்டியை விட்டு இறங்கியவர்கள் பார்வையில், புதுக்கருக்குடன் இருந்த வீடு, ஆச்சரியத்தை உண்டாக்கியது. ரெண்டு பேர் முகத்திலும் சந்தோஷ ரேகை.

எவ்வளவோ காலத்துக் கனவு அது...

டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பி, ''ஏம்பா, இங்கயே நிக்கறீங்க, உள்ள வாங்கப்பா,'' என்று, 'க்ரில்' கேட்டை திறந்து விட்டான், சேகர்.

''கவனிச்சிங்களா? வீட்டுக்கு அம்மா பேரைத்தான் வச்சிருக்கு...'' என்று சுட்டிக் காட்டினான்.

காம்பவுண்ட் சுவரில் இரண்டு பக்கம், இரண்டு செவ்வக கிரானைட் பலகைகள் பதிக்கப் பெற்றிருந்தன. ஒன்றில் 'எஸ்.சேகர், வத்சலா சேகர்' என்று எழுதப்பட்டிருக்க, இன்னொரு கல்லில், 'திரிபுரசுந்தரி நிலையம்' என்று பொறிக்கப்பட்டிருந்தது.

''என்னடா சேகர்... அப்பா பேரை போட்டுக்கக் கூடாதோ?'' என்றாள், அம்மா.

''நீ வேற, அப்பா வேறயாம்மா?'' என்று சிரித்தபடி உள்ளே நடந்தான், சேகர்.

கணவனை கைத்தாங்கலாய் பிடித்து நடத்தி உள்ளே கூட்டிப் போனாள், திரிபுரசுந்தரி.

''டேய் ராமு, மினி... யார் வந்திருக்கா பாருங்க. நம்ம தாத்தா, பாட்டி. 'எப்ப வருவாங்க... எப்ப வருவாங்க'ன்னு கேட்டீங்களே... வந்தே வந்தாச்சு...''

சேகரின் குரலைத் தொடர்ந்து, இரண்டு வாண்டுகள் வெவ்வேறு அறைகளில் இருந்து குபுக்கென வெளியில் வந்து நின்றனர். ராமு ஏழு வயதிலும், மினி மூன்று வயதிலும் இருந்தனர். அவர்களோடு வத்சலாவும் வந்து நின்றாள்...

''வாங்க, அத்தை... வாங்க மாமா... எப்படியிருக்கீங்க...?''

'எங்க சவுக்யத்துக்கென்ன குறைச்சல். நீ எப்படியம்மா இருக்க?' என்று விசாரித்தனர் இருவரும்.

''நல்லா இருக்கோம்; உட்காருங்க...'' என்று, சோபாவைக் காட்டினாள்; உட்கார்ந்தனர்.

எட்டி நிற்கும் பேரப் பிள்ளைகளை பார்த்து, ''என்ன அப்படியே நின்னுட்டிங்க. தாத்தா, பாட்டிகிட்ட பேசுங்க. வத்சலா, டிபன் ரெடி தானே... மொதல்ல காபி கொடு... அப்பா தண்ணி சாப்பிடறீங்களா? மத்யான சமையலுக்கு என்ன செய்ய சொல்லட்டும்... சாப்பாடு உங்கள் சாய்ஸ்!

''அப்பாவுக்கு பிடிச்ச உருளை பொடிமாசும், நேந்திரம் சிப்சும் ஏற்கனவே ரெடி பண்ணியாச்சு. அப்பாவுக்கு சுகராயிருந்தாலும் இன்னைக்கு கேசரியும், பால் பாயசமும் அவசியம் சாப்பிட்டாகணும்... வேறென்ன செய்யட்டும்?''

''தடபுடல் பண்ணாதேடா, சேகர். எங்களுக்கு ஒரு கை தயிர் சாதம் போதும்... வர, வர உடம்பு, 'கன்ட்ரோல்' விட்டு போச்சு. புதுசு, புதுசா தொந்தரவுகள் முளைக்கறதால, இப்பல்லாம், 'ஸ்ட்ரிக்ட் டயட்' சொல்லேண்டி திரிபுரம்...'' என்றார், அப்பா.

''அவன் ஏதோ ஆசையாய் சொல்றான்; ஒரு வேளை சாப்பிட்டால் ஒண்ணும் ஆயிராது...''

''அம்மாவே சொன்னப்புறம் அப்பீல் ஏது? நீங்க எது கொடுத்தாலும் விழுங்கறேன்,'' என்றார், நாதன். வரும் வழியில் குழந்தை களுக்காக வாங்கின பட்சணங்களை வெளியில் எடுத்து வைத்தார்.

''ராமு வா... இது உனக்கு... மினிக்குட்டி... இந்தாடி செல்லம்... இது உனக்கு...'' என்று, வயசான குழந்தைகள் ரெண்டும், சிறு வயசு குழந்தைகளைக் கொஞ்சப் போக, சமையலறை போனான், சேகர்.

''வத்சலா... காபி ரெடியா?''

''பார்த்தால் தெரியலையா? வெந்நீர் போட்டுட்டிருக்கேன். நம்ம அவசரத்துக்கு டிகாஷன் பில்டர்ல இறங்கிடாது. அஞ்சு நிமிஷமாவது ஆகும். தண்ணி குடிச்சிட்டு கொஞ்சம் பொறுக்கச் சொல்லுங்க...

''அப்பா, அம்மாவைப் பார்த்ததும் தலைகால் புரியலை... உங்க இஷ்டத்துக்கு கேசரி, பால் பாயசம்ன்னு இழுத்து விடறீங்களே... இன்னைக்கு வேலைக்காரி கூட இல்லை; நான் ஒருத்தியே எல்லாம் இழுத்துப் போட்டுச் செய்யறேன். பார்க்கறீங்கல்ல...''

''அதுக்காக... புது வீடு கட்டி, முதன் முதலா பார்க்க வந்திருக்கவங்களை சும்மா அனுப்ப முடியுமா? நான் வேணும்ன்னா, கூட மாட உதவி பண்ணட்டுமா?''

''ஆஹா...! உங்க அப்பா, அம்மாவுக்கு ஏற்கனவே எம்மேல ரொம்ப நல்ல அபிப்ராயம். அவங்க எதிர்ல நான் உங்களை வேலை வாங்கறேன்னு தெரியணுமாக்கும்... போதும், போங்க...

''கேசரி பண்றேன்; பால் பாயசம் முடியாது. முந்தா நாள் கிரகப் பிரவேசத்துக்கு பண்ணின ஸ்வீட்ஸ் கொஞ்சம் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க...''

''உஷ்... சப்தமா பேசாதடி... காபியாவது சீக்கிரம் அனுப்பு,'' என்று சொல்லி வந்தான்.

பெற்றோரை பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தான், சேகர். தாத்தா மடியில் ஒன்றும், பாட்டி மடியில் ஒன்றுமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தன, குழந்தைகள்.

''டேய்... கீழ இறங்குங்க... பாட்டி, தாத்தாவுக்கு வலிக்கும்.''

''ஏன்டா விரட்ற? குழந்தைங்க எவ்வளவு ஆசையா உட்கார்ந்து பேசுதுங்க.''

''வீட்டைச் சுத்தி பார்த்துடலாமே... அப்புறம், குழந்தைகளோடு கொஞ்சிக்கலாம். அதுகளுக்கு, 'லீவு' தான்; எனக்குத்தான் ஆபீசு போகணும். ரெண்டு மணி நேரம், 'பர்மிஷன்'ல இருக்கேன்...''

''இதை முதல்லயே சொல்லியிருக்கக் கூடாதா? 'லீவு' நாளாய் பார்த்து வந்திருப்பமில்ல,'' என்றார், அப்பா.

''எனக்கெங்கப்பா, 'லீவு!' முனிசிபாலிட்டி ஆபீசின் மொத்த வேலையும் என் தலைல தான். வாங்க...'' என்று, அவர்களை அழைத்து வீட்டைச் சுற்றிக் காட்டினான்.

முதலில் பூஜை அறை.

''அம்மா... நீ அடிக்கடி சொல்லுவியே... 'ஷெல்ப், டேபிள் மேல சாமி படங்களை வச்சு சங்கடமா கும்பிடக் கூடாது. அதுக்குன்னு தனி அறை வேணும்'ன்னு. அதை மனசுல வச்சு கட்டினது. கதவுல மணிகள் கோர்த்து, உள்ளே நந்தாவிளக்கு போட்டிருக்கு.''

பிரமிப்பாய் பார்த்து, கன்னத்தில் போட்டு, அங்கேயே அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து விட்டாள், திரிபுரசுந்திரி.

உள்ளே சாமிப் படங்களும், மையமாய் முருகன் படமும்... பார்த்த மாத்திரத்தில் மனசுக்குள் சஷ்டிக்கவசம் ஓடியது.

''திரிபுரம், அவனுக்கு ஆபீசுக்கு நேரமாகுது. இன்னொரு நாள் சாவகாசமாய் வந்து பூஜை, தியானமெல்லாம் பண்ணலாம். எழுந்து வா,'' என்றார், நாதன்.

''என்னப்பா... வந்ததும், வராததுமாய் போறதைப் பத்தி பேசறீங்க...'' என்று வருத்தப்பட்டுக் கொண்ட சேகர், ''ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பிடிவாதம்ப்பா,'' என்றான்.

முறுவலித்தார், சிவகாமி நாதன்.

''இது படுக்கையறை... அட்டாச்சுடு டாய்லெட் பாத்ரூம்...''

''நல்லாயிருக்கு. அதென்ன ஜன்னலண்டை, அரைகுறையாய்...?''

''வேற ஒண்ணுமில்லை; 'ஏசி' போடலான்னு ஐடியா. வர, வர வெயில் நெருப்பைவிட மெட்ராஸ் மோசமாய்ட்டு போகுது... பேன் காத்து சட்டை பண்ண மாட்டேங்குதுப்பா...''

''வாஸ்தவம்தான்...''

''இந்த ரெண்டு அறை, பசங்களுக்கு. இது ராமுவுக்கு, இது மினிக்கு... தனித்தனியா இருந்துட்டால் பிரச்னையில்லை! ஒண்ணா சேர்ந்து இருந்தால் சும்மா இருக்காதுங்க; ஒண்ணையொண்ணு அடிச்சு மல்லு கட்டிக்கும். வத்சலா யோசனைப்படி கட்டினது...''

''வத்சலா எப்பவும் முன் யோசனைக்காரி தான்,'' என்று, திரிபுரம் வாய் திறந்தபோது, பார்வையிலேயே மனைவியை அடக்கினார், சிவகாமி நாதன்.

''அப்புறம்... இது ஸ்டோர் ரூம்; இப்படி வாங்க... இது சமையலறை. வத்சலா காபி...''

''இதோ ரெடியாகுது... வெளியில, மேல எல்லாம் காண்பிச்சுட்டீங்களா?''

''ஆமாம்டா சேகர்; அதையும் பார்த்துடலாமே,'' என்றார், நாதன்.

வீடு முழுக்க சுற்றிப்பார்த்து விட்டு வந்து உட்கார்ந்ததும் காபி வந்தது.

''வீடு நல்லா, அமைப்பாயிருக்கு. கிணத்துத் தண்ணி நல்லா இருக்கு. தென் திசைக் காத்தும் அபாரமா இருக்கு. மொட்டை மாடியில நின்னு பாக்கறப்ப துாரத்துல ஏதோ கோவில் தெரியுது...''

''இங்க சுத்துவட்டாரத்துல நிறைய கோவில் உண்டு...''

''சிட்டிக்கு வெளியேன்னாலும், சவுகர்யமாத்தான் இருக்கு. இப்படியொரு வீட்டைக் கட்டணும்ன்னு தான், வாழ்நாள் கனவு கண்டுகிட்டிருந்தார், இவர். ஆனால், கடைசி வரை அது கனவாகவே போயிடுச்சு...

''நாலு பொண்ணு, ஒரே பையன்; ஒவ்வொருத்தரையும் படிக்க வைக்க, வேலை வாங்கித் தர, கல்யாணம் முடிக்கன்னு... நிமிரும் போதெல்லாம் ஒரு பிரச்னையாய்...''

''திரிபுரம்... எதுக்கு பழசெல்லாம் பேசிகிட்டு...நாம கனவு கண்டதை பையன் நிறைவேத்தினாம் பாரு. அதுக்காக சந்தோஷப்படுவியா...''

''வீடு அமைப்புல ஏதாவது குற்றம் குறை இருந்தால் சொல்லுங்க மாமா,'' என்று கேட்டுக் கொண்டாள், வத்சலா.

''பூரணமா இருக்கம்மா... ஓரத்துல கொஞ்சம் பூச்செடிகள் போட்டுட்டால்...''

''அதுக்குத்தான் அந்த இடம் விட்டிருக்கு மாமா. செடிகள் போட்டால் கொசு வரும், பூச்சிகள் வரும்ங்கறார்,'' என்றவள், சேகரிடம் திரும்பி, ''கேட்டுக்கோங்க... அப்பாவே சொல்லிட்டார் பூச்செடி வைக்கலாம்ன்னு. நாளைக்கே நர்சரி போறீங்க... செடி வாங்கறீங்க...'' என்றாள், வத்சலா.

மாமாவிடம் திரும்பி, ''என்னமோ மாமா... வீட்டை கட்டிபுட்டோம். கைக்காசு ஒரு பங்குன்னால், கடன் நாலு பங்குன்னு ஆயிட்டுது... இனிமேல் எந்த செலவைக் குறைக்க... எதைவிடன்னு புரியலை...

''வாடகை வீட்லயே இருந்திருக்கலாமோன்னு தோணுது... நாளுக்கு நாள் விஷம் போல விலைவாசி ஏறுது. பார்க்கறவங்களுக்கு இதெல்லாம் தெரியுமோ! வசதியா இருக்கம்ன்னு நினைச்சுட்டு பணம் கேட்டு கையேந்தி வராங்க...'' என்றாள்.

''கல்யாணம் பண்ணிப் பார்; புது வீடு கட்டிப்பார்ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. அதோட கஷ்டம் தெரிஞ்சவங்க சொல்ல மாட்டாங்க; கேட்கவும் மாட்டாங்க...! புரியாம கேட்டு வர்றவங்களுக்கு இருந்தா கொடுக்கலாம்; இல்லேன்னா, தவிர்க்கலாம். வேறென்ன செய்ய முடியும்,'' என்றார், நாதன்.

''இப்படி பேசிகிட்டே இருந்தால் எப்படி? வாங்க, சாப்பாட்டுக்கு போவம்...''

அடுத்த ரெண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. குழந்தைகளுடன் சற்று விளையாடி, சாப்பிட்டு, கொஞ்சம் ஓய்வெடுத்த பின், ''சேகர், இப்ப நீ ஆபீஸ் கிளம்பணுமில்ல; எங்களுக்கு ஒரு டாக்சி பிடிச்சு கொடுத்திடேன்...''

''இருந்து நாளைக்கு போகலாமே மாமா...'' என்றாள், வத்சலா.

''பரவாயில்லைம்மா... வந்தாச்சு; பார்த்தாச்சு. போதும். அங்கே கொஞ்சம் வேலையிருக்கு,'' என்றார்.

டாக்சியுடன் வந்தான், சேகர்.

மருமகளிடம் சொல்லி குழந்தைகளுக்கு முத்தமிட்டு, வண்டியில் அமர்ந்தனர்.

''ஆபீஸ் போற வேலை இல்லைன்னா... நானும் கூடவே வருவேன்,'' என்றான், சேகர்.

''அதனால் என்ன... நாங்க பார்த்துக்கறோம்...'' என்ற நாதன், மகனிடம் மெல்லியக் குரலில், ''பணப் பிரச்னையில மாட்டிகிட்டியோ...'' என்று விசாரித்தார்.

''ஏம்பா கவலைப்படறீங்க...?''

''ரெண்டு மாசமா, 'ஹோம் பீஸ்' தாமதமா கட்றதா வார்டன் சொன்னார்.''

''அடுத்த மாசத்லயிருந்து கரெக்ட்டா அனுப்பிடறம்பா,'' என்றான், சேகர்.

''என்னங்க... புள்ளைகிட்ட போய் அப்படி கேட்கறீங்க. சேகர் ஒண்ணும் கைவிட்ற மாட்டான்,'' என்று கணவனைக் கோபித்துக் கொண்டாள், திரிபுரம்.

''எனக்குத் தெரியாதா? முதியோர் இல்லத்துல விட்டிருக்கிற தாய், தகப்பனுக்கு எத்தனை பேர் சரியா பணம் அனுப்பிகிட்டிருக்காங்க? நம்ம சேகரை போல வருமா? சும்மா பேச்சுக்கு ஞாபகப்படுத்தினேன்,'' என்றவர், எல்லார்க்கும் கை அசைத்து, ''போய்ட்டு வரோம்,'' என்றார்.

முதியோர் இல்லம் நோக்கி கிளம்பியது, டாக்சி.

''முன்னயாவது வாடகை வீட்ல இருந்தான்; இட நெருக்கடி, அது, இதுன்னு சொல்லி நம்மள, 'ஹோம்'ல விட்டுட்டான். இப்ப தான் சொந்த வீடு கட்டியிருக்கானே... இங்கயே தங்கிக்கோங்கன்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்லலை பார்த்தீங்களா?'' என்றாள், திரிபுர சுந்திரி.

''அவன் உன்னை வீட்ல வச்சுக்கலைன்னு கவலைப்படறத விட, வீட்டுக்கு உன் பெயரையாவது வச்சிருக்கானேன்னு சந்தோஷப்படு,'' என்றார், சிவகாமிநாதன்.

சந்தோஷத்துக்கு பதில், இரண்டு சொட்டு கண்ணீர் தான் வந்தது அந்த அம்மாவுக்கு.

பா. மித்ரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us