தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம்


PUBLISHED ON : அக் 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்., 10 சரஸ்வதி பூஜை

'தொழிலை கஷ்டப்பட்டு செய்யாதே; இஷ்டப்பட்டு செய். அது எளிமையாக இருக்கும்...' என்பர். எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை விருப்பத்துடன் செய்தால், அது நமக்கு சிரமமாக இருக்காது.

மாணவனுக்கு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள், வியாபாரிக்கு தராசு, படிக்கல் போன்று, ஒவ்வொரு தொழிலுக்கும் வெவ்வேறு விதமான ஆயுதம் தேவை. நம்மை வாழ வைக்கும் அந்த ஆயுதங்களுக்கு, பூஜை செய்து, நம் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் நன்னாளே, ஆயுத பூஜை. இவற்றுக்குரிய தெய்வம், சரஸ்வதி!

ஒவ்வொருவரும் தங்கள் ஆயுதங்களை சரஸ்வதியாகக் கருதி வழிபடுவதால், சரஸ்வதி பூஜையை, ஆயுத பூஜை என்பர்.

புரட்டாசி மாதம் வளர்பிறை நவமி திதியன்று கொண்டாடப்படும், ஆயுத பூஜையன்று, ஒரு கும்பத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, பூஜை செய்வர். கும்பத்தின் முன், ஆயுதங்களை வைப்பர். மறுநாள், விஜய தசமியன்று, காலையில் மீண்டும் பூஜை செய்து, அவற்றை பயன்படுத்த துவங்கினால், ஆண்டு முழுவதும், தொழில்வளம் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

மகாசரஸ்வதி, வீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, ஆர்ய சரஸ்வதி மற்றும் வஜ்ர சரஸ்வதி எனும் ஐந்து வகை சரஸ்வதி வழிபாடு, புத்த மதத்தில் உள்ளது.

வெண்மை நிறம் கொண்டவள், மகாசரஸ்வதி. இவள், தன் இரு கரங்களிலும் வீணை ஏந்தி, வலது கரத்தில் அபய முத்திரையும், இடது கரத்தில் வெண் தாமரையும் வைத்திருப்பாள். கல்வியை வழங்குபவளாக, இரு கரங்களில் வீணையை தாங்கியுள்ளாள், வீணா சரஸ்வதி. வலது கரத்தில் செந்தாமரை மலரும், இடது கரத்தில் புத்தகமும், மற்ற கரங்களில் தாமரை, சுவடி, கத்தி, கபாலம், சக்கரம் மற்றும் கலசம் ஏந்தியிருப்பாள், ஆர்ய சரஸ்வதி. மூன்று முகங்களையும், ஆறு கரங்களையும் கொண்டவளாக திகழ்கிறாள், வஜ்ர சரஸ்வதி. இடது கையில் புத்தகமும், வலது கையில் தாமரை மலரும் ஏந்தியுள்ளாள், வஜ்ர சாரதா.

சமண சமயத்திலும், சரஸ்வதி வழிபாடு உண்டு. அவளை, 'வாக்தேவி' என்று குறிப்பிடுவர். வாக்குக்கு அதிபதி என்பதால் இப்பெயர். மேலும், இவர்கள், 'சோடஷ வித்யாதேவி' எனும், 16 வடிவங்களில், சரஸ்வதியை வழிபடுகின்றனர். வேதத்தில் சரஸ்வதிக்கு வாகனமாக, அன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தால், நீரை விட்டு விட்டு பாலை மட்டும் அருந்தும் அன்னத்தைப் போல, உலகில் நன்மை, தீமை இரண்டும் கலந்திருந்தாலும், தீமையை விடுத்து, நன்மையை மட்டும், மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இதன் தத்துவம்.

தென்னகத்தில் சரஸ்வதிக்குரிய வாகனம் மயில்; இதன் தோகையில், வட்ட வடிவில், கண்கள் இடம் பெற்றிருக்கும். படிப்பவன், இரு கண்களால் மட்டுமல்லாமல், ஆயிரமாயிரம் கண்களோடு, கற்றுத் தெளிய வேண்டும் என்பது இதன் தத்துவம். அன்னத்தில் இருப்பவளுக்கு, ஹம்ஸ வாஹினி என்றும், மயில் மீதிருக்கும் சரஸ்வதிக்கு, வர்ஹ வாஹினி என்றும் பெயர்.

சரஸ்வதி பூஜையன்று மட்டுமல்ல, ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திரம் துவங்கி, பூராடம், உத்திராடம் மற்றும் திருவோணம் ஆகிய நான்கு நாட்கள், சரஸ்வதியை வழிபடுவது கல்வி அபிவிருத்தியைத் தரும். சரஸ்வதி பூஜை நன்னாளில் கல்வியையும், தொழிலையும் விருப்பமுடன் செய்ய உறுதியெடுப்போம்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us