தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது, 26; வீட்டிற்கு ஒரே பெண். என் பெற்றோர், நன்கு படித்து, நிறைய சம்பாதிக்கின்றனர். முதுகலை பட்டப் படிப்பு முடித்துள்ள நான், ஏழு ஆண்டுகளாக, ஒருவரை காதலிக்கிறேன். அவரும் என்னை மனப்பூர்வமாக விரும்புகிறார். முதுகலை படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, பொருளாதாரத்தில், என் பெற்றோரை விட, அவர்கள் சற்று குறைந்தவர்கள்.

இதனால், ஜாதி மற்றும் பணத்தைக் காரணம் காட்டி, எங்கள் காதலை ஏற்க மறுக்கின்றனர், என் பெற்றோர். அத்துடன், என்னையும் வேலைக்கு போகக் கூடாது என்று கூறி, அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகின்றனர்.

முடிந்தவரை போராடிப் பார்த்தேன்; மனம் இரங்கவில்லை, என் பெற்றோர். இதனால், மிகுந்த துயரத்தில் உள்ளேன். சரியாக தூங்க, சாப்பிட முடியவில்லை; என்னை நான், மிகவும் வருத்திக் கொள்கிறேன்; அவரும் அப்படித் தான். ஆனால், அவருடன் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இதுவரை குறையவில்லை.

வீட்டை விட்டுச் சென்று, திருமணம் செய்து கொள்ள, எங்கள் இருவரது மனமும் இடம் கொடுக்கவில்லை. எனக்காக, அவரும், பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்.

என் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள், என் பெற்றோர். அவர்கள் என் வாழ்க்கையை பற்றி, யோசிப்பதாக தெரியவில்லை. அப்படி யோசித்திருந்தால், என்னை இப்படி வைத்திருப்பார்களா...

இந்த வயதில் தான், வாழ்க்கையை அனுபவிக்க முடியும். ஆனால், ஒரு சிறைக் கைதியை போல், வீட்டில் என்னை அடைத்து வைத்துள்ளனர். அவர் மிகவும் நல்லவர்; எல்லா விதத்திலும், எனக்கு பொறுத்தமானவர். கண்டிப்பாக, என் பெற்றோரை விட, ஒரு படி மேலாக என்னை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்.

பெற்றோரை எதிர்த்து, திருமணம் செய்து கொள்வதா அல்லது அவர் வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்று பிரிந்து விடுவதா? ஆனால், அவரை மனதில் வைத்து, வேறு ஒருவருக்கு, என்னால் துரோகம் செய்ய முடியாது.

நீங்கள் தான், என் வாழ்கைக்கு நல்வழி காட்ட வேண்டும். இதுவரை, இதற்காக, யாரிடமும் ஆலோசனை கேட்டதில்லை. என் குடும்பத்தில் ஒருவராக உங்களை எண்ணி, இதை எழுதுகிறேன். உங்கள் வழிகாட்டுதலை, அப்படியே ஏற்கிறேன்.

— இப்படிக்கு,

உங்கள் அன்பு மகள்


அன்பு மகளுக்கு —

உன் ஏழு ஆண்டு காதல், வெறும் இனக் கவர்ச்சியாக இருக்க முடியாது. பக்குவமான மனது, உடல், மன ஒற்றுமைகளை பார்த்து, தக்க பருவத்தில் கனிந்து வந்த காதல் இது. மனித ஆயுளில், ஏழு ஆண்டுகள் என்பது, கணிசமான பகுதி.

உன் உண்மையான காதலை அங்கீகரிக்க, பெற்றோர் பிடிவாதமாக மறுப்பது அவர்களது பழமைவாத போக்கை காட்டுகிறது. தன் மகளின் காதலன் நல்லவனா, நன்கு படித்திருக்கிறானா, நிரந்தர பணியில் இருக்கிறானா, என்ன சம்பளம் வாங்குகிறான் என்பதை ஆராய்ந்து, எல்லாவற்றிலும் அவன் பாஸ் மார்க் வாங்கினால், காதலுக்கு, பச்சை கொடி காட்டலாம் உன் பெற்றோர்.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் காதலில், பத்தில், ஐந்து அம்சங்கள் சரியாக இருந்தால், அவர்களின் ஆசைக்கு உடன் படலாம். திருமணத்திற்கு பின், அவர்கள் வாழும் வாழ்க்கையின், லாப நஷ்டங்கள் அனைத்தும், அவர்களையே சாரும்!

இதற்கு மேலும் நீ, காத்திருப்பது தேவையற்றது; நீயும், உன் காதலனும் மேஜர்கள். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, பதிவு திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு பின் நீயும், ஏதாவது ஒரு வேலைக்கு சென்றால், பொருளாதார தன்னிறைவை ஏற்படுத்தும்.

சிறந்த காதலர்களாக இருக்கும் நீங்கள், சிறந்த கணவன் மனைவியாக வாழ்ந்து, உங்களது காதலின் வெற்றியை உலகிற்கு அறிவியுங்கள். காதலன் வீட்டார், உங்களது காதலுக்கு இணக்கமாக இருந்தால், அவர்களுடன் உறவு பாராட்டுங்கள்.

பேரனோ, பேத்தியோ பிறந்தால், உன் பெற்றோர் மனம் மாற வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கையில் எதற்கும் புலம்பி நிற்றல், அனாவசியம். தீர்க்கமாக, விவேகமான முடிவை எடுத்து செயலாற்றுவது உத்தமம்.

உன் காதல் திருமணம் வெற்றியடைய வாழ்த்துகள்!

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us