PUBLISHED ON : அக் 01, 2017

என் அலுவலக மேஜையில், 'எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது; உங்களுக்கு...' என்று, ஓர் அறிவிப்புப் பலகை இருக்கும். இதைப் பாராட்டியவர்களும் உண்டு; குறை சொன்னவர்களும் உண்டு.
'இப்படியா முகத்தில் அறைவது மாதிரி பலகை வைப்பீர்கள்?' என்பர் சிலர். அவர்களிடம், 'பலர், பல சமயங்களில், தங்களது சாவகாசத்தை என் மீது திணிப்பதைக் கண்டு, திணறிப் போயிருக்கிறேன். 'நம் சந்திப்பு ஆரம்பித்து நேரமாகி விட்டதே...' என்று கடிகாரத்தைப் பார்த்தாலும், குறிப்பறிந்து எழுவதில்லை.
'நான், என் வேலையில் மூழ்கினாலும், புரிந்து கொள்ளாமல், 'அப்புறம்... வேற என்ன விசேஷம்... எப்படி இருக்கு அரசியலல்லாம்... ரஜினி அரசியலுக்கு வருவார்ன்னு நினைக்கிறீர்களா...' என்று, பேச்சை ஆரம்பித்து, இங்கிதம் தெரியாமல், நம் வேலையைக் கெடுக்கின்றனர்.
'நம் நேரத்தை விழுங்குவோரோடு எப்படி மகிழ்வுடன் உரையாடுவது... அவர்கள் மனம் சங்கடப்படக் கூடாதே என்று பார்த்தால், நம்மைப் பாடாய் படுத்துகின்றனர். எனவே தான் இந்தப் பலகை...' என்று, விளக்கம் தருவது உண்டு.
எந்த வீட்டிற்குச் சென்றாலும், எனக்கு, வரவேற்பும், மரியாதையும் நன்றாக இருக்கும். காரணம், பதினைந்தாவது நிமிடத்தில் புறப்பட்டு விடுவேன் என்பதால்!
மற்றவர்களின் அவசரம், அவதி, பரபரப்பு, சூழ்நிலை மற்றும் மனநிலையை புரிந்து கொள்ளாமல், எதிரே அமர்ந்து, சாவகாசமாகப் பேச எண்ணும் நேரக் கொள்ளையர்கள், பணக் கொள்ளையர்களுக்கு நிகரானவர்களே!
எதிர்த்த வீட்டிற்கும், அடுத்த வீட்டிற்கும் செல்லக்கூட, தொலைபேசியில், 'வரலாமா... எப்போது வரலாம்; உங்களுக்குத் தொந்தரவு இல்லயே...' என, நேரம் குறித்து செல்லும், மேலை நாட்டவர்களின் பழக்கம், மோசமான சம்பிரதாயமாக நமக்கு தோன்றினாலும், இது, மிக நல்ல பழக்கம் என்பேன். நாமும் இதைப் பின்பற்ற முன்வர வேண்டும். இதற்குக் காரணங்களைச் சொல்கிறேன்...
சில பேர் சம்பிரதாயத்திற்காக, 'அதனாலென்ன பரவாயில்லை...' என்கின்றனரே தவிர, உடல்மொழியால், பேசும் தொனியால், சூழ்நிலையால், அவர்கள் ஏதோ அவசரத்தில் இருக்கின்றனர் என்பதைக் நாம் தான் குறிப்பால் உணர வேண்டும்.
மற்றவர்களுக்கு ஏதோ இக்கட்டான நிலையை உருவாக்கி யிருக்கிறோம் என்பதை உணர சில வழிகள் இருக்கின்றன. வீட்டுக்குள்ளிலிருந்து ஒரு குரல் வரும்... 'ஏங்க... பேங்க் நேரம் முடியப் போகுது...' 'மகள் இந்நேரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருப்பா...' 'ஏங்க... நான் ரெடி...' என, சங்கேதக் குரல்கள் கொடுக்கப்படும்; அப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில், எதிராளிக்கு நம் சந்திப்பை விட, வேறு ஏதோ முக்கியத்துவம் வாய்ந்த வேலை இருக்கும். இந்நிலையில், நாம் எழுந்து வராவிட்டால், இரு வித சிக்கல்கள் எழும்.
மறுபடி சந்திக்க நேரம் கேட்டால், 'ஐயோ... இந்தப் பாவி மறுபடி வந்து தொலைச்சிட்டான்னா என்ன செய்றது...' என்கிற நினைப்பு தான் முதலில் வந்து நிற்கும். எனவே, நாம் முழுமையாகத் தவிர்க்கப்படுவோம்.
அடுத்தது, எதற்காக நாம் சென்றோமோ அந்த வேலை ஆகாது. நம் விண்ணப்பங்கள் ஓரங்கட்டப்படும். 'என் வேலையைக் கெடுத்து, என், மூடைக் கெடுத்து, என் நேரத்தை விழுங்கி, நிர்பந்தமான சூழ்நிலைக்குத் தள்ளிய இவருக்கு, இந்த வேலையைச் சாதகமாக முடித்துத் தரத் தான் வேண்டுமா...' என்கிற கேள்வி, பெரிதாக எழும். இது, எந்த ஒரு காரியத்தையும் கெடுத்துவிடும்.
எனவே, மற்றவர்களின் சூழ்நிலையை உணர்ந்து, சுருக்கமாக பேசி, வெளியேறுவது உத்தமம்.
லேனா தமிழ்வாணன்