PUBLISHED ON : அக் 01, 2017

புதியதோர் உலகு செய்வோம்!
வன்முறையின் உச்சத்தில் உலகம்...
வரம்பின்றி ஓடுகிறது குருதியாறு!
வயதுவரம்பின்றி
சாகின்றனர் மக்கள்
மனிதநேயம் குன்றியதால்
மிருகங்களாயினர் பலர்!
தாய்மொழி பேசியதால்
வாய்மொழியின்றி நின்றனர் சிலர்
வாழ்வே கேள்விக்குறியாய்!
பட்டம் வாங்கச் சென்றவர்களை
படுகொலை செய்தனர்
இனவெறியின் பிடியில்
இளைய சமுதாயம் மேலைநாடுகளில்!
மனமென்னும் நிலத்தில்
மதமென்னும் விதையை நட்டு
வெறியென்னும் அமிலம் விட்டால்
வேரோடு சாய்ந்து விடும்
மனிதச் சமுதாயம்!
உதரத்தில் துவங்கட்டும் மாற்றம்
உயர் பண்போடு பிறக்கட்டும் மொட்டுக்கள்
அன்பால் வெற்றிகொள் உலகை - உன்
பண்பால் பெருமைப்படும் நாடே!
பிறக்கும் போது பெருமையில்லை
பிறர் மதிக்கும்போதுதான்
பெருமையும் பிறக்கிறது!
தாய்மையோடு தாயகத்தையும் போற்றுவோம்
வாய்மையோடு தரணியையும் நேசிப்போம்
புதியதோர் உலகு செய்வோம்
போரிடும் செயலை போராடி வெல்வோம்
அமைதி பூங்காவாகட்டும் அகிலம்
அகிம்சையோடு வெற்றிகொள் உலகை!
ரெஷ்மி சிவகுமார்,
கோவை.
