
விபத்துகள் பெருகி விட்ட இக்காலத்தில், வாகனம் ஓட்டிச் செல்லும் குடும்ப உறுப்பினர்கள், நல்லபடியாக திரும்ப வேண்டும் என்று விரும்பி, கடவுளை வேண்டுவர். இது மட்டுமல்ல, தீயணைப்பு, உயர்ந்த கட்டடங்களில் பணி உள்ளிட்ட ஆபத்தான வேலை செய்வோர், பத்திரமாக வீடு திரும்ப, வேண்டுவோரும் உண்டு.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகிலுள்ள, திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும், பிள்ளைத்திருநறையூர் அரையர், இவர்களுக்கெல்லாம் காவலாக இருக்கிறார்.
தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார், பிரம்மா. அவர் கேட்டபடி செய்த பெருமாள், இத்தலத்தில் பள்ளி கொண்டார். வழிபாடு இல்லாத இந்தச் சிலை, மண்ணுக்குள் புதைந்தது.
ஒருமுறை இங்கு வந்த மன்னர் வானவராயரின் கனவில் தோன்றிய சுவாமி, தான் புதைந்துள்ள இடம் பற்றி சொல்லி, சிலையை எடுத்து கோவில் கட்ட உத்தரவிட்டார். வேதத்தை உபதேசித்ததால், சுவாமிக்கு, வேதநாராயணர் என, பெயர் வந்தது.
பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் சுவாமியைத் தரிசிக்க வந்தார். அப்போது, சுவாமி சன்னிதி மேல் வேயப்பட்டிருந்த பனை ஓலையில், தீ பற்றும்படி மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார், பெருமாள்.
அதிர்ந்த பக்தர், சுவாமி மீது தீப்பிழம்பு விழாமல் இருக்க, மனைவி, குழந்தைகளை சிலை மீது படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக விழுந்து, தீப்பிழம்பு விழாமல் தடுத்தார். தன் மீது இவ்வளவு பாசம் கொண்ட அரையருக்கு, காட்சியளித்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தார்.
பிரகாரத்திலுள்ள ஆழ்வார் சன்னிதியில், பிள்ளைத்திருநறையூர் அரையர் வீற்றிருக்கிறார். டிரைவர்கள், ஆபத்தான தொழில் செய்வோர் மற்றும் இரவு நேர பயணம் செய்வோர், பாதுகாப்பு வேண்டி, இவரை வழிபடுகின்றனர்.
வேதநாராயணர் தலைக்கு அடியில் நான்கு வேதங்களை வைத்துள்ளார். பாதம் அருகில், குழந்தை பிரகலாதன் இருக்கிறார். ஆதிசேஷனும், அவரது மனைவியும், வேதநாராயணரை தாங்குகின்றனர். மேலே, ஆதிசேஷன்; கீழே, அவரது மனைவி என, இங்கு, 10 தலைகளுடன் நாகம் உள்ளது, மற்றொரு விசேஷம்.
ராமானுஜர் இங்கு வந்தபோது, சுவாமி அவரிடம், 'காவிரியில் நீராடி, காவி உடுத்தி வா...' என்றார். ராமானுஜரும் அவ்வாறே வந்தார். சித்திரை, திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர், காவியுடை அணிந்து எழுந்தருள்வார். மற்ற நாட்களில், வெள்ளை ஆடை அணிவிக்கப்படும்.
திருமணத்தடை உள்ளோர், ஜென்ம நட்சத்திரம் அல்லது வியாழனன்று, சுவாமி சன்னிதியில், 27 நெய் தீபம் ஏற்றி வழிபடுவர். இதை, நட்சத்திர தீபம் என்கின்றனர்.
இங்குள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி அனுமன் இருக்கிறார். இப்பகுதி மக்கள், தங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், இவர் முன், பேசி தீர்த்துக் கொள்வர். பொய் சொன்னாலோ, ஏமாற்றினாலோ, இவர் முன் சத்தியம் செய்து தரும்படி கேட்கும் வழக்கம் உள்ளது.
திருச்சியில் இருந்து, 52 கி.மீ., துாரத்தில் தொட்டியம். அங்கிருந்து, 5 கி.மீ., துாரத்தில், திருநாராயணபுரம் உள்ளது.
தி. செல்லப்பா

