
சிந்தித்து செயல்படுவீர்!
சமீப காலமாக, வடமாநில இளைஞர்கள் சிலர், வாடகை காரில், புதிய, 'டிவி'களை எடுத்து வந்து, வீடு வீடாக விற்பனை செய்ய வருகின்றனர்.
மார்க்கெட்டில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 'டிவி'யை, வெறும், 30 ஆயிரம் ரூபாய்க்கு தருவதாகவும், இறக்குமதி வரி இல்லாமல் வருவதால், தங்களுக்கு கட்டுப்படி ஆகிறதென்றும் சொல்வர். பேரம் பேசினால், 5,000 ரூபாய் குறைத்துத் தருவர். ஆசைப்பட்டு வாங்கி விடாதீர்.
'டிவி' பார்க்க, நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அதனுள், ரகசியமாக கேமரா வைத்திருப்பர். நீங்கள், 'டிவி'யை, 'ஆன்' செய்ததும், கேமரா இயங்கத் துவங்கி விடும்; நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. பட்டனில் இருக்கும் சிறு துளை அளவிலான, இந்த கேமரா, 'டிவி' முன், பெண்கள் உடை மாற்றுவது உட்பட, நாம் எது செய்தாலும், பதிவாகி விடும். 'கேமரா கன்ட்ரோல்' முழுதும், வட மாநிலங்களிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கும்.
அந்த வீடியோ பதிவை வைத்து, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை, சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஆகவே, பேராசைப்படாமல், அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலேயே எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி, நிம்மதியாக வாழ்வோம்.
நண்பர்களே... சிந்தித்து செயல்படுவீர்!
எம்.ரமேஷ்பாபு, கோவை.
முடியாதவர்களுக்கு உதவலாமே!
உடல் நலம் குன்றி, படுக்கையில் இருந்த தோழியை பார்க்க சென்றேன். 65 வயதை கடந்த அவளும், கணவரும் மட்டுமே உள்ளனர். நான் சென்றிருந்தபோது, உறவு பெண்கள் இரண்டு பேர் இருந்தனர்.
தோழியின் கணவர், சமையலறை சென்று, காபி தயாரிக்க முற்பட்டவுடன், நான் போய், 'அண்ணா... நான், காபி போடுகிறேன்...' என்றேன்.
ஆனால், உறவுக்கார பெண்கள், விருந்துக்கு வந்தது போல், உட்கார்ந்த இடத்தை விட்டு எழவில்லை. இதற்கிடையே, தோழிக்கு மிகவும் நட்புடன் இருந்தவளிள் மகள் வந்தாள்.
'மடமட'வென உள்ளே போய், எல்லாருக்கும் காபி தயாரித்து, பிஸ்கெட்டுடன் கொடுத்தாள். வீட்டை பெருக்கி சுத்தம் செய்து, சப்பாத்தி மாவு பிசைந்து, கூட்டு என, எல்லாம் நேர்த்தியாக செய்தாள்.
'ஐ.ஐ.எம்., என்ற உயரிய கல்வி நிறுவனத்தில் படித்து, மாதம், இரண்டு லட்சம் சம்பாதிப்பதாகவும், அவள் அம்மாவின் தோழி என்பதற்காக, ஆபீஸ் போவதற்கு முன் வந்து உதவி செய்வாள்...' என்றாள், தோழி.
உறவு பெண்கள், விரலசைக்க யோசிக்கும்போது, அந்த பெண்ணின் படிப்பும், பண்பும் வெகுவாய் கவர்ந்தன.
பெண்களே... முடியாமல் இருக்கும் வயதானோர் வீட்டுக்கு செல்லும்போது, வெட்டி பந்தா காட்டி உட்கார்ந்திருக்காமல், நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம்!
— எஸ். வெண்மதி, சென்னை.
நினைவு சின்னங்களான, மரங்கள்!
எங்கள் ஊரில், எல்லா வீடுகளிலும், மரங்கள் வரிசையாக இருக்கும். அதேபோல், ஊருக்கு பொதுவான மந்தையை சுற்றிலும், 10க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அங்கு, சிறு வயது முதல் விளையாடி வருகிறோம். எங்கு சென்றாலும், ஊர் திரும்பியவுடன், அங்கு சென்று ஓய்வு எடுக்காமல் இருந்ததில்லை.
கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களுக்கு, அங்கு வைக்கப்பட்ட நினைவு சின்னங்கள் தான், அந்த மரங்கள். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அவ்விடத்தில் அமர்ந்தால், மனம் லேசாகி விடும். அப்படிப்பட்ட இடத்தில் உள்ள மரங்களை வெட்டி, கலையரங்கம் கட்டுவதாக, கவுன்சிலரின் உறவினர் கூறினார்.
கலையரங்கம் கட்டினால், மது அருந்துவதற்கும், புகை பிடிப்பதற்கும், சீட்டு விளையாடுவதற்கும் தான் பயன்படும்; நல்லவற்றிற்கு பயன்படாது என்று எண்ணி, உள்ளூர் இளைஞர்கள் இணைந்து, மனு மேல் மனு கொடுத்து, அந்த இடத்தை மீட்டனர்.
அதுமட்டுமல்லாமல், 'முன்னோர்களின் சேவையை மதிப்போர் சங்கம்' என்ற ஒன்றை அமைத்து, அந்த இடங்களில் உள்ள மரங்களை பேணி, காத்து வருகின்றனர், இளைஞர்கள்.
'எதற்கெடுத்தாலும், சங்கம் வைக்கும் பல ஊர்களில், இயற்கையை பேண, சங்கம் வைத்த நண்பர்களே... உங்களுக்கு, எங்கள் வாழ்த்துகள்...' என, மனம் திறந்து பாராட்டி வந்தோம்.
'மரங்களை வளர்க்க முடியாவிட்டாலும், இருக்கிற மரங்களை வெட்டக் கூடாது...' என, உறுதிமொழி ஏற்போம்; வாழ்க பாரதம்!
- ரா. முத்தம்மாதேவி, திருப்பூர்.

