
'கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை; கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை...' என்ற பழமொழி ஒன்று உண்டு.
கர்ணனின் வள்ளல் தன்மை அந்த அளவிற்கு உயர்ந்தது. அவனின் இந்தக் கொடைப் பெருமை, அந்தக் காலத்திலேயே பிரபலமாக இருந்தது.
'கர்ணனைப் போன்ற கொடையாளி கிடையாது...' என்று பலரும் பாராட்ட, அர்ஜுனனுக்குத் தாங்க முடியவில்லை.
'கண்ணா, நீ இருக்கும் போது, என்னை விட கர்ணனுக்கு அதிகப் பெருமை கிடைக்கச் செய்வது அழகா...' என்று கேட்டான், அர்ஜுனன்.
அர்ஜுனனின் மனதில் பொறாமை வந்து விட்டதை உணர்ந்தார், கண்ணன்.
'என்ன செய்யலாம் அர்ஜுனா... தானம் செய்வதில் கர்ணனுக்கு ஈடாக, யாரையும் சொல்ல முடியவில்லையே; வேண்டுமானால், இதை நிரூபிக்கிறேன் வா...' என அழைத்தார்.
வெள்ளி மலை, -தங்க மலை என, இரு மலைகளை அர்ஜுனனிடம் காட்டி, 'இந்த இரு மலைகளையும், இன்று மாலை சூரியன் மறைவதற்குள், நீ தானம் கொடுத்து விட்டால், தானத்தில் கர்ணனுக்குச் சமமாக உன்னை நினைப்பேன்...' என்றார்.
கோடாலியை எடுத்து, மலைகளை நெருங்கினான், அர்ஜுனன். இரண்டு மலைகளில் இருந்தும் வெட்டி வெட்டி, வருவோர் -போவோர்க்கு எல்லாம் கொடுத்தான்.
அந்தி சாயும் நேரம் இன்னும், 12 நிமிடங்கள் மட்டுமே இருக்க, மலைகளில் கால் பகுதியைக் கூட அர்ஜுனன், தானம் கொடுத்து முடிக்கவில்லை.
'அர்ஜுனா... இன்னும் அரை நாழிகை நேரம் தான் இருக்கிறது. இதே, கர்ணனாக இருந்தால் எவ்வளவு சீக்கிரமாக முடித்திருப்பான் தெரியுமா...' என்றார், கண்ணன்.
அதைக் கேட்டதும் அர்ஜுனனுக்கு, இயலாமையுடன் கோபமும் சேர்ந்து கொண்டது.
'கர்ணன் என்ன, என்னை விட பலசாலியா... நிறைய வெட்டி வெட்டிக் கொடுத்து, இந்த மலைகளைத் தானம் செய்திருப்பானா...' என்றான்.
'கண்டிப்பாக... இப்போது பார்...' என்ற கண்ணன், கர்ணனை அழைத்து, 'கர்ணா... இந்த இரு மலைகளையும் இன்னும் கால் நாழிகை நேரத்திற்குள் நீ, தானம் செய்து விட வேண்டும்...' என்றார்.
'அப்படியே கண்ணா... இது என் பாக்கியம்...' என்ற கர்ணன், இரு வழிப்போக்கர்களைக் கூப்பிட்டு, 'ஐயா... நீங்கள், தங்க மலையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள், வெள்ளி மலையை எடுத்துக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, ஒரு சில விநாடிகளுக்குள் தானத்தை அளித்து முடித்து விட்டான்.
அர்ஜுனன் தலை குனிந்து, கண்ணனின் திருவடிகளை பார்த்தான்.
'அடுத்தவர்களின் பேரையும், புகழையும் கண்டு, பொறாமைப்படுவதில் பலனில்லை. எல்லா காரியங்களுக்கும் சுலபமான வழிகள் இருக்கின்றன. ஒரே காரியத்தில் ஊறிப் போனவர்களுக்குத் தான், அதைப் பற்றிய சுலபமான வழிகள் தோன்றும்...' என்ற பாடத்தை அறிந்தான், அர்ஜுனன்.
பி. என். பரசுராமன்