
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து,35 ஆண்டுகளுக்கு பிறகு, கமலஹாசனை இயக்கப் போகிறார், மணிரத்னம். அப்படி அவர்கள் இணையும் அந்த படமும், சரித்திர கதையில், இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு, வெளியாக உள்ளது.
இதுவரை எந்த சரித்திர படங்களிலும் சொல்லாத கதை அம்சம் மட்டுமின்றி, நடிப்புக்காக, எந்த அளவுக்கு வேண்டுமானாலும், 'ரிஸ்க்' எடுக்கும், கமலஹாசனின் கேரக்டரையும் உலகளாவிய தரத்துடன் சித்தரிக்கப் போகிறாராம், மணிரத்னம்.
இந்த படத்திற்காக, எடை குறைத்து, இளமையாக தன்னை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ள கமலஹாசன், சில சரித்திர கால போர் பயிற்சிகளையும் முறையாக எடுத்து, நடிக்க தயாராகி வருகிறார்.
— சினிமா பொன்னையா
ஆண்ட்ரியாவுக்கு வந்த, ஆவேசம்!
தன் மீது அழுத்தமாக பதிந்துள்ள, ஆபாச நடிகை என்ற முத்திரையை அழிப்பதற்காக, எத்தனை முயற்சி எடுத்தாலும், மாற்ற முடியவில்லை என்று, 'பீல்' பண்ணுகிறார், ஆண்ட்ரியா.
அதோடு, 'சென்டிமென்ட் கதைகளை என்னிடத்தில் கூறும் இயக்குனர்களே கூட, ஏதாவது ஒரு இடத்தில் குளியல் காட்சி, படுக்கையறை காட்சி இருப்பதாக கூறுகின்றனர். இதன் காரணமாகவே, ஆபாச முத்திரையிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.
'என்னை ஆபாச கோணத்தில் பார்ப்பதை நிறுத்தி விட்டு, 'சென்டிமென்ட்' ஆன கதைகளுடன் வாருங்கள். அன்பு பாசத்தை கொட்டித் தீர்த்து, ரசிகர்களை பாச மழையில் நனைய வைத்துக் காட்டுகிறேன்...' என்று, இயக்குனர்களிடம் அன்பான கோரிக்கை வைத்துள்ளார், ஆண்ட்ரியா.
— எலீசா
அண்ணாச்சியிடம், 'சரண்டர்' ஆகும், சுந்தர்.சி!
சமீபகாலமாக, சுந்தர்.சி இயக்கும் படங்கள், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவதால், அவரை நம்பி மெகா, 'ஹீரோ'கள் எவரும், 'கால்ஷீட்' கொடுப்பதற்கு தயாராக இல்லை. அதனால், அவர்களுக்காக காத்திருந்து காலத்தை வீணடிக்க விரும்பாமல், தற்போது, லெஜென்ட் என்ற படத்தில் நடித்த, அண்ணாச்சி சரவணனை வைத்து, ஒரு படம் இயக்க முடிவு செய்துள்ளார், சுந்தர்.சி.
'இந்த படத்தையும், என் வழக்கமான முழு நீள நகைச்சுவை கதையில் இயக்க திட்டமிட்டுள்ளேன். அதோடு, லெஜென்ட் படத்தைப் போலவே, இந்த படத்திலும், அண்ணாச்சி சரவணனுக்கு, பிரபல கவர்ச்சி நடிகையை ஜோடி சேர்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
தீவிர, 'ஒர்க் - அவுட்'டில், சமந்தா!
'மையோசிடிஸ்' எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுக்காக, சிகிச்சை எடுத்து வந்த, சமந்தா, தான் நடித்து வெளியான, யசோதா படம், 'ஹிட்' அடித்ததை அடுத்து, மீண்டும் புத்துணர்ச்சியுடன் புதிய படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.
அதே வேகத்தில், 'ஜிம்'மில் தீவிர, 'ஒர்க் - அவுட்'டிலும் இறங்கிய சமந்தா, தெலுங்கில் நடித்து வரும், குஷி படத்திற்காக, தன் உடற்கட்டை கனகச்சிதமாக மாற்றி வருகிறார்.
'ரசிகர்களின் அன்பான ஆதரவு எனக்கு இருக்கும் வரை, எந்த நோயும் எதுவும் செய்துவிட முடியாது. எந்த நிலையிலும் நான் வீழ்ந்து போக மாட்டேன். சினிமாவில், சாதனை மேல் சாதனை செய்து கொண்டே இருப்பேன்...' என்று, 'தில்'லாக கூறுகிறார்.
— எலீசா
கறுப்புப்பூனை!
* தான் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து, 'ஹிட்' அடித்ததால், தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. அதனால், இனிமேல் தான் எந்த மாதிரியான கதைகளில் நடித்தாலும் தனக்காகவே ஒரு பெரும் கூட்டம் தியேட்டரை நோக்கி படையெடுக்கும் என்று நினைத்திருந்தார், மெரினா நடிகர்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படத்தில், பெரிதாக கதையே இல்லாமல் வெத்து, 'பில்ட் - அப்' காட்சிகளாக வைத்திருந்தனர். ஆனால், அப்படமோ நடிகரை அதலபாதாளத்தில் தள்ளி விட்டது. அதன் காரணமாக, வெத்து, 'பில்ட் - அப்' வேலைக்கு ஆகாது. நல்ல கதை தான் படத்தை ஓட வைக்கும் என்பதை புரிந்து கொண்டார்.
இப்போது, 'பில்ட் - அப்' கொடுப்பதை நிறுத்தி விட்டு, நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் கதைகளில் நடிக்கப் போவதாக கூறி வருகிறார்.
* போட்டி நிறைந்த சினிமாவில், பரபரப்பு வளையத்துக்குள் இருந்தால் தான், 'பிசி' ஆன நடிகையாக திகழ முடியும் என்று நினைக்கிறார், பூமி நடிகை. எனவே, வம்பு நடிகருடன் இணைத்து தன்னை பற்றி வெளியான, 'கிசுகிசு'க்கள் அடங்கி விட்டதால், இப்போது அடுத்தபடியாக தன்னுடன் நடித்து வரும் நடிகர்களுடன் இணைத்து, தன் அபிமானிகள் மூலம், 'கிசுகிசு'க்களை தீமூட்டி விடுகிறார்.
'இதுபோன்ற விஷயங்கள் மார்க்கெட்டை, 'டேமேஜ்' பண்ணி விடாதா...' என்று மற்றவர்கள் கேட்டால், 'அதெல்லாம் அந்த காலம். இப்போதெல்லாம் உச்சக்கட்ட பரபரப்பு தான், நம்மை இந்திய அளவில் பிரபலப்படுத்தும். இப்படித் தான் பல நடிகையர் வளர்ந்து கொண்டிருக்கின்றனர்...' என்று, சில மெகா நடிகையரின் பெயரையும் பட்டியலிடுகிறார், பூமி நடிகை.
சினி துளிகள்!
* சிம்பு, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துவிட்ட, நிதி அகர்வால், அடுத்தபடியாக, மேல் தட்டு 'ஹீரோ'களுடன் நடிக்க, கல் எரிந்து வருகிறார்.
* சில புதிய இயக்குனர்களின் கூட்டணி சொதப்பி விட்டதால், ஏற்கனவே தன்னை வைத்து, 'ஹிட்' கொடுத்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க, ஆர்வம் காட்டி வருகிறார், சிவகார்த்திகேயன்.
* பிரபல, 'ஹீரோ'களுடன் பலப்பரீட்சை பார்க்க வேண்டும் என்பதற்காக, விஷால் நடித்துள்ள, லத்தி படம், கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் நிலையில், அதே நாளில், தான் கதையின் நாயகியாக நடித்துள்ள, கனெக்ட் என்ற படத்தையும் வெளியிடுகிறார், நயன்தாரா.
அவ்ளோதான்!