sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பொன்மகள் வந்தாள்!

/

பொன்மகள் வந்தாள்!

பொன்மகள் வந்தாள்!

பொன்மகள் வந்தாள்!


PUBLISHED ON : டிச 04, 2022

Google News

PUBLISHED ON : டிச 04, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அடியே ரமணி... நான் சொல்றத நல்லா காது கொடுத்து கேட்டுக்க. புருஷனுக்கு பொங்கி போட்டோமா, படுத்தோமா, எந்திரிச்சோமா, புள்ளைங்கள பெத்தோமா, வளத்தோமா, செத்தோமான்னு வாழ்ந்துக்க.

''அப்பதான் நீ மஞ்சக்கயித்தோட மருவாதையா வாழுவ. அதுதான் உனக்கும், உன் வவுத்துல வளர்ற புள்ளைக்கும் நல்லது.

''அதவுட்டுட்டு, 'நான் படிச்சிருக்கேன்; பேங்க்ல அதிகாரி உத்தியோகம் கெடச்சிருக்கு; நா வேலைக்குதான் போவேன்'னு அடம்புடிச்சா, அத்துக்கிட்டு போயி வாழாவெட்டியாதான் கெடக்கணும்,'' என்று, வயித்துப்பிள்ளைகாரி என்றும் பாராமல் தன் மகன் தாக்கி, எழ முடியாமல் முனகிக் கொண்டிருக்கும் மருமகளிடம் உறுமிக் கொண்டிருந்தாள், ஜெயலட்சுமி.

தெருவில் உள்ளோர் அனைவரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஜெயலட்சுமியின் வாய்க்கு பயந்து, கீழே கிடந்த ரமணியை துாக்க, யாரும் முன்வரவில்லை. இதில் பலர், அவளிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளதால், மூர்ச்சையாகி நின்று, வேடிக்கை பார்த்தன ஆண் (அ)சிங்கங்கள் பல.

சுண்டினால் ரத்தம் வரும் நல்ல நிறத்தழகி, ரமணி. சாமூத்ரிக்கா லட்சணம் பொருந்திய பேரழகி என்று கூட சொல்லலாம். பலவித கனவுகளோடு பி.காம்., படிப்பில், இருபாலர் அரசு கல்லுாரியில் சேர்ந்தாள். அவள் வகுப்பிலேயே அவனும் சேர்ந்தான். இவளுக்கு நேரெதிர் நிறம் தான் என்றாலும், கருப்பழகன்.

இரண்டாண்டுகள் நட்பாய் சென்ற இருவரின் கல்லுாரிப் பயணம், மூன்றாமாண்டில் காதலாய் பரிணாமம் பெற்றது. கசிந்துருகினர். சுபமாக கல்லுாரி படிப்பு முடிந்த அதே வேளையில், அவன் அரசு பணிக்கு தேர்வாகி, பயிற்சிக்கு சென்றான். இவள், எம்.காம்., படிப்பில் சேர்ந்தாள்.

பயிற்சி முடிந்து, அவன் பணியில் சேர, இவள் படிப்பை முடித்து, வங்கி மேலாளர் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தாள். மெல்ல இருவர் வீட்டிலும் உருகிய காதல் கசிந்தோடியது.

துவக்கத்தில், பேயாட்டம் ஆடினாள், ஜெயலட்சுமி. ஆனால், ரமணியின் தாய் கோதையை பார்த்தவுடன், தனக்கு ஒரு பலியாடு சிக்கியதாக, ஆனந்த கூத்தாடினாள். அவளிட்ட கட்டளைகளுக்கெல்லாம் பூம்பூம் மாடு போல தலையாட்டினாள், கணவனை இழந்த முதுகெலும்பற்ற, கோதை.

திருமணத்திற்கு, 15 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கம், ஹீரோ ஹோண்டா வண்டி மற்றும் பூஜை சாமான்கள், பித்தளை, -எவர்சில்வர் பாத்திரங்கள், கட்டில், -மெத்தை, பீரோ, சோபா என, தன் சக்திக்கு மீறி சகலமும் கொடுத்து, தன் மகளை தாரை வார்த்தாள்; மறு வீடு வரை மட்டுமே தன் மகள் வாழ்க்கை இனிக்கும் என்றறிந்திடாத, கோதை.

சுபமாக முடிந்த காதல் திருமணத்தின் முதல் ஐந்து நாட்கள் மகிழ்ச்சியாகவே கழிந்தது, ரமணிக்கு. தாலி பிரித்து, மறு வீடு போய், மாமியார் வீடு சேர்ந்தாள்.

அதன் பிறகு தான், தன் காதல் கணவனின் சுயவுரு கண்டாள். அன்னையின் சொல் கேட்டு அவளை கசக்கினான். காதலித்தபோது பதறியடித்து, அவளின் பசி தீர்த்தவன், பட்டினி போட்டு பாடாய் படுத்தினான்.

செம்பருத்தி பூவை விடவும் மென்மையான மெல்லிய மேனியாளை, அடித்து, உதைத்து, செங்குருதி காணச் செய்தான். அத்தனை கொடுமைகளையும் கண்டும், தட்டிக் கேட்க திராணியற்று, வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாயிற்று, ரமணியின் மாமனார் வீரப்பனுக்கு.

மகனையும், மனைவியையும் எதிர்த்து கேட்காவிட்டாலும், அவர்கள் இல்லாத நேரங்களில் ரமணிக்கு, ஆறுதலான வாஞ்சை வார்த்தைகள் மட்டுமே சொல்ல முடிந்தது அவரால்.

இன்று, அவர்களின் கொடுமை சற்று எல்லை மீறிப் போனது. அவளின் வேதனை கண்டு பொறுக்க முடியாமல், நடந்த சம்பவங்களை, கோதைக்கு போனில் தெரியப்படுத்தினார்.

பின்பு, கீழே கிடந்த ரமணியை மெல்லத் துாக்கி சுவரில் அவளை சாய்த்து, அருந்த நீர் கொடுத்தார். நடுங்கிய கைகளில் அதை வாங்கிப் பருகினாள், ரமணி.

''தோ பார்டா அதிசயத்த... அவ புருஷன கைக்குள்ள போட்டது பத்தாம, சிரிக்கி மவ, எம் புருஷனையும் கைக்...'' என, ஜெயலட்சுமி முடிப்பதற்குள், அவளுடைய கன்னம், வீரப்பன் கைகளால் பதம் பார்க்கப்பட்டது.

அதிர்ச்சியில், தாய் - மகன் இருவரும் உறைந்து நிற்க, ஆட்டோ வந்து நின்றது.

ஆட்டோவிலிருந்து இறங்கி, ஓடி வந்தாள், கோதை. மகள் குத்துயிரும், குலையுயிருமாக இருப்பதை கண்டு நெஞ்சிலடித்து, 'உனக்கு நல்ல சாவே வராது' என்று, கதறி அழுதபடி, தன் சம்பந்தி ஜெயலட்சுமியை சபித்தாள்.

ஆட்டோகாரரும், வீரப்பனும், ரமணியை துாக்கிக் கொண்டு, ஆட்டோவை நோக்கி ஓடினர். அவ்வேளையில், தாக்கப்பட்ட அவளது அடிவயிற்றிலிருந்து இக்கொடுமைகளை காண விரும்பாத ஓர் உயிர், ரத்தமாக அவளது கால்வழியே வழிந்து, தன் தாத்தா கைகளை நனைத்தது.

மருத்துவமனையில் மெல்லத் தேறிய ரமணியிடம், கோதை அளித்த வன்கொடுமை புகாரின்படி, விசாரணை நடத்தினார், ஆய்வாளர் ராஜன்.

''உங்கள் பெயர்?''

''ரமணி!''

''கணவர் பெயர்?''

பதில் இல்லை.

''மாமியார் பெயர்?''

பதில் இல்லை.

''எப்படி இந்த காயங்கள் ஏற்பட்டன?''

பதில் இல்லை.

''இதோ பாரும்மா... நீங்க, எங்களுக்கு ஒத்துழைச்சா தான், எங்களால நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கும்,'' என்றார், ஆய்வாளர் ராஜன்.

''அவங்க குற்றவாளிங்க இல்ல. என் குடும்பத்தினர்,'' திக்கித் திணறினாள், ரமணி.

தலையில் அடித்து, பைலை மூடி எழுந்தவர், ரமணியை பார்த்து, ''படிச்சிருக்க, வேலையும் கிடைச்சிருக்கு. உன் வாழ்க்கை உன் கையில். நல்ல முடிவா எடும்மா,'' என்றபடி அங்கிருந்து அகன்றார்.

சற்று உடல்நிலை தேறிய பின், மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டாள், ரமணி. கட்டுகளுடனே தன் தாய் எவ்வளவு தடுத்தும் கேளாமல், மாமியார் வீடு நோக்கிப் பயணப்பட்டாள்.

வீட்டிற்குள் சென்று தன் துணிமணிகளை மட்டும் எடுத்து, வாசல் வரை வந்தவளை, தடுத்து நிறுத்தியது, ஜெயலட்சுமியின் குரல்.

''நில்லுடி... நீ பாட்டுக்கு வந்த, எடுத்த கிளம்புற, என்ன எகத்தாளமா... வாங்கனது பத்தலையோ...'' என கேட்டதும், அவளை நோக்கி திரும்பினாள், ரமணி.

மெல்ல தன் கைகளை நெஞ்சருகே கொண்டு சென்று, அங்கே ஊஞ்சலாடிய உணர்வற்ற மஞ்சள் கயிற்றை அறுத்து, தன் மாமியாருக்கு பின் நின்றுக்கொண்டிருந்த காதல் கணவன் முகத்தை நோக்கி விட்டெறிந்தாள். அவன் தலைகுனிய, வாய் பிளந்தாள், ஜெயலட்சுமி.

ஊரார் அனைவரும் கண்ணிமைக் காமல், பார்த்து ரசித்தனர்.

அம்மா வீட்டுக்கு வந்தவள், அடுத்து வங்கி பணியிலும் சேர்ந்தாள்.

மேலாளர் என்ற கர்வம் சிறிதும் இன்றி, தன்னைப் போல் பாதிக்கப்பட்ட, வாழ்க்கையில் உயர துடிக்கும் பெண்களை, களம் சென்று, இனம் காண, தானே தனியாக களப்பயணம் மேற்கொண்டாள்.

பல நவரத்தினங்களை கண்டெடுத்தாள். சரியான ஆவணங்கள் இருந்தும், பிணையம் இல்லாதவர்களுக்கு தானே பிணையக் கையெழுத்திட்டாள். லட்சங்கள், கோடிகள் என, வங்கி கடனுதவி பெற்றுத் தந்தாள்.

தன் காயங்களையும், வலிகளையும் அவர்களது வெற்றியில் ஆற்றினாள். இவள் களப்பணியில், வங்கிக் கடன் பெற்றோரின் தவணை, இதுநாள் வரை தவறியதே இல்லை.

இன்று-

ரமணியின் பணி நிறைவு விழா.

நுாற்றுக்கணக்கில் பெண்கள், கண்களில் ஆனந்த கண்ணீருடன் திரண்டிருந்தனர். கலெக்டர் வரும் நேரம் நெருங்கியது. என்ன செய்வதென்றே அலுவலர்களுக்கு புரியவில்லை.

கலெக்டர் வந்தவுடன், நேரே விழா மேடைக்கு செல்லாமல், ரமணியை தேடிச் சென்றார். அவள் கையை பிடித்து, விழா மேடைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தார். இது, காண்போரை மயிர்கூச்செறியச் செய்தது.

விழா துவங்கி,- ஒவ்வொருவராக அழைக்கப்பட, அனைவரும் ரமணியை புகழ்ந்து, பாராட்டினர்.

''அடுத்தபடியாக, சிறப்பு அழைப்பாளரான, கலெக்டர் அவர்கள் இப்போது பேசுவார்,'' என, தொகுப்பாளிணி கூறியதும், அழகிய சிரிப்புடன், 28 வயது இளம் கலெக்டர் மேடையேறினாள்.

''அனைவருக்கும் வணக்கம். ரமணியம்மாவால் இத்தனை பேர் பலன் பெற்றுள்ளீர்கள் என்பது, எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. நானும், ரமணி அம்மாவால் பலனடைந்தவள் தான். என் அம்மாவுக்கு மறுவாழ்வு தந்த புண்ணியவதி, நம் ரமணியம்மா...'' என்றதும், கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆயிற்று.

''கணவனை இழந்து, வாழ வழியில்லாது நின்ற அம்மாவுக்கு, தானே பிணையக் கையெழுத்திட்டு, வங்கி கடனுதவி பெற்றுத் தந்தார். ரமணியம்மாவை பொறுத்தவரை, கடன் கொடுத்தவுடன் விட்டுவிடுபவர் அல்ல; பின்தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருப்பார்.

''அப்படித்தான் என் அம்மாவையும் ஊக்கப்படுத்தினார். என் கனவை அறிந்து, கல்விக்கடன் வழங்கி, கனவை நினைவாக்கினார்...''

எந்தவித சலசலப்பும் இன்றி, கலெக்டர் பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தது, கூட்டம்.

''இப்படி பலர் வாழ்வில் ரமணியம்மா ஒளியேற்ற வேண்டும் என்று, இறைவன் சித்தம் இருப்பதால் தானோ என்னவோ, ரமணியம்மாவின் மண வாழ்வு ஒளிக்குன்றிப் போனது. ரமணியம்மாவுக்கு செய்த கொடுமை தானோ என்னவோ, அவரின் கணவரும், மாமியாரும், கோர விபத்தில் உருத்தெரியாமல் இறந்து போயினர்.

''இந்த செய்திகள் எல்லாம் இப்போது தான் எனக்கு தெரிய வந்தது. என் தாத்தா தான், ரமணியம்மாவின் மண வாழ்வு ரணங்கள் குறித்து தெரிவித்தார். என் தாத்தா வேறு யாருமல்ல...'' என்று நிறுத்தினாள்.

ரமணியை பார்த்து, ''ரமணியம்மாவின் மாமனார் தான், அவர். அதோ, கூட்டத்தோடு கூட்டமாக தன் மருமகள் அனைவராலும் பாராட்டப்படுவதை கேட்டு, தன் மகன் மற்றும் மனைவியின் பாவங்களை கழுவிக் கொண்டிருக்கிறார். என்னை, உங்க மகளாக ஏத்துக்குவீங்களா,'' என கேட்டபடி, ரமணியின் கால்களில் விழுந்து, வணங்கினாள், கலெக்டர்.

தன் கணவரின் இரண்டாம் தாரத்து மகள் தான் கலெக்டர் என்பதறிந்து, கட்டியணைத்து, உச்சி முகர்ந்தாள், ரமணி.

கூட்டத்திலிருந்து ஒரு பெண்மணி, ''பொன்மகள் வந்தாள்...'' என்று கூவினாள்.

புனைப்பெயர்: பூ.மா.ப்ரீத்தி விஜயகுமார்வயது: 37படிப்பு: முதுகலை பொருளியல் எம்.ஏ., ஆசிரியர் பட்டயப்பயிற்சி, தையற்கலை, அழகுக்கலை.பணி: கிளை பொறுப்பாளர், தக் ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா, புதுச்சேரி. பகுதி நேர செய்தி வாசிப்பாளர் அகில இந்திய வானொலி நிலையம் மற்றும் உள்ளூர் 'டிவி' புதுச்சேரி.சொந்த ஊர்: புதுச்சேரி.வெளியான படைப்புகள்: எய்ட்ஸ் விழிப்புணர்வு குறும்படம், கவிதை, கட்டுரை எழுதியுள்ளார்.பெற்றுள்ள விருதுகள்: உலக தமிழ் பண்பாட்டு சங்கம் - சிங்கப் பெண் விருது; குறும்பட போட்டியில், மூன்றாம் பரிசு; 100க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கேற்று, கவிதை, பேச்சு, ஓவியம், கோலம் மற்றும் சமையல் உட்பட பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.

லட்சியம்: எழுத்துலகின் உயரிய விருதுகளான நோபல் பரிசு, புலிட்சர் பரிசு, புக்கர் பரிசு, பெய்லியின் புனைக்கதைக்கான பெண்கள் பரிசு பெற விருப்பம்.கதைக் கரு பிறந்த விதம்: பெண்கள் எவ்வளவு பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும் நான்கு சுவற்றுக்குள், 99 சதவீதம் பேர் அனுபவிக்கும் கொடுமைகளின் உச்சம் தான், இக்கதை உருவாக காரணம்.






      Dinamalar
      Follow us