
அ. ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி: தி.மு.க., இளைஞரணி செயலராக, உதயநிதியை மீண்டும் நியமித்திருப்பது, தி.மு.க.,வில் தகுதியானவர்கள் இல்லை என்பதாலா?
இருப்பர்... ஆனால், தி.மு.க., தான் குடும்ப அரசியல் செய்கிறதே... அதனால் தான், உதயநிதிக்கு மீண்டும் அதே பதவி! விரைவில், அவர் அமைச்சராகவும் ஆகி விடுவார் பாருங்கள்!
அ. மணி, துாத்துக்குடி: என் நண்பன் ஒருவன், அவனுக்கு பலரும் கேடு நினைக்கின்றனர் என்று சொல்கிறானே... அவனுக்கு, நான் என்ன சொல்வது?
'கெடுவான் கேடு நினைப்பான்' என்று, தமிழில் ஒரு பழமொழி உள்ளதை கேள்விப்பட்டதில்லையா... மறந்தும் கூட, அடுத்தவருக்கு கெடுதல் செய்ய நினைக்கக் கூடாது. அவ்வாறு நினைப்பவர்களுக்கு, அதுவே கேடாக அமைந்து, துன்பத்தைக் கொடுக்கும்!
* தே. அண்ணாதுரை, தேனி: டில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சிறையில் உல்லாசமாக வாழ்கிறாரே...
எல்லாம் பணம் செய்யும் வேலை தான்!
* ஆ. மாணிக்கம், பொள்ளாச்சி: 'கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு இருப்பது சகஜம்...' என்கிறாரே, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி...
ராஜிவ் கொலை வழக்கில் கைதான ஆறு பேரையும், தி.மு.க.,வினர் சந்தோஷத்துடன் வரவேற்று, அவர்களுக்கு இனிப்பும் வழங்கியுள்ளனரே... இனியும் கூட்டணியில் இருந்தால் மக்கள் என்ன நினைப்பர் என்பதை, அவர் புரிந்து கொள்ளவில்லை!
லெ. நா. சிவக்குமார், சென்னை: 'கவர்னர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல...' என்கிறாரே, தமிழக கவர்னர் ரவி...
பா.ஜ., ஆட்சி உள்ள மாநிலங்களில் கவர்னர், 'ரப்பர் ஸ்டாம்ப்' தான்... இல்லாத மாநிலங்களில், அவர்கள் கை ஓங்கித்தான் இருக்கும்!
கே. கதிரேசன், சென்னை: 'சினிமாவைப் போல் அரசியலிலும் ஜெயிப்பேன்...' என்கிறாரே, நடிகர் கமலஹாசன்... இது, நடக்குமா?
எம்.ஜி.ஆர்., தவிர, சிவாஜி உட்பட பல நடிகர்களும் கட்சி ஆரம்பித்தனர்... என்ன ஆனார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா... அதே கதை தான் கமலஹாசனுக்கும்!
ஆர். ஆனந்த், விருதுநகர்: இந்திய கம்யூனிஸ்ட், மூத்த தலைவர், நல்லகண்ணுவின் வீட்டில், இயேசுநாதர் படம் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளதே...
முதல்வர் ஸ்டாலின் வீட்டிலும் மாட்டப்பட்டிருக்கும். அவரின் குடும்பத்தார் அனைவரும், அனைத்து, ஹிந்து கோவில்களுக்கும் சென்று வழிபடுகின்றனரே!