
பா - கே
சாரல் மழை பெய்து கொண்டிருந்த ஒரு இனிமையான மாலை வேளை...
நண்பர்கள் அனைவரும், 'பீச்'சில் கூடியிருந்தோம். காரினுள் அமர்ந்தபடியே அன்வர்பாய் வீட்டிலிருந்து வந்த, முந்திரி பக்கோடாவை கொறித்துக் கொண்டிருந்தோம்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, சமீபத்தில் விடுதலை ஆன, ஆறு பேர் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அதில் எனக்கு ஆர்வம் இல்லாததால், சாரலை ரசித்துக் கொண்டிருந்தேன்.
காதில், 'ப்ளூ டூத்' மாட்டி, ஆங்கில பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.
சற்று நேரத்தில், மேற்படி, 'டாபிக், போர்' அடித்ததோ என்னவோ, லென்ஸ் மாமாவின் ஒரு காதிலிருந்த, 'ப்ளூ டூத்'தை எடுத்து, தன் காதில் மாட்டிய ராமசாமி அண்ணாச்சி, 'ஓய் லெஞ்சு, இதுக்கு ஒயர் கியர் ஏதுமில்லையா... ஒண்ணும் கேட்கவில்லையே...' என்றார்.
'பெரிசு... உம் மண்டையில் சரக்கு இருக்கா... இது பேர், 'ப்ளூ டூத்' வலது - இடது என்று குறிப்பிட்டிருப்பதை அந்தந்த பக்க காதில் வைத்து கொண்டால் தான் கேட்கும். நீர், வலது காதில் வைப்பதை, இடது காதில் சொருகிக் கொண்டால் எப்படி கேட்கும்?
'சரி... இப்ப எதுக்கு என்னை, 'டிஸ்டர்ப்' செய்றீர்... நீர் ஏதாவது இங்கிலீஷ்ல பேசி, 'டென்ஷன்' படுத்துவீங்கன்னு தானே, ஒதுங்கி இருக்கிறேன். இவங்க பேச்சில் கலந்துக்க வேண்டியது தானே...' என்றார், லென்ஸ் மாமா.
'ஒண்ணும், 'இன்ஸ்டன்ஸா இல்ல...' என்று ராமசாமி அண்ணாச்சி முடிப்பதற்குள், 'இந்த இம்சைக்கு தான் உம்மோடு பேச பயப்படுறேன்... அது, 'இன்ட்ரஸ்ட்'பா...' என்று கடுகடுத்தவர், அவரிடமிருந்து, 'ப்ளூ டூத்'தை பிடுங்காத குறையாக வாங்கி, தன் வலது காதில் பொருத்தியபடி, வேறு பக்கம் திரும்பிக் கொண்டார், மாமா.
இதற்கிடையில், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வரும் நண்பர் ஒருவர், இடை செருகலாக, தகவல் ஒன்றை சொல்ல ஆரம்பித்தார். அது:
பல வெளிநாடுகளில், குற்றம்சாட்டப்பட்டு, சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளை, விடுதலை செய்யும்போது, அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பொருட்டு, நவீன தொழில்நுட்பம் ஒன்றை கடைப்பிடிக்கிறாங்க.
தாய்லாந்து நாட்டுல, 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே அடையாள அட்டை கொடுத்துடுவாங்க. அதில், குறிப்பிட்ட நபரோட புகைப்படம், முகவரி, மச்சம் போன்ற உடல் அடையாளங் களுடன், கை ரேகை, குடும்ப பின்னணி, படிப்பு, வேலை விபரம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். குற்றவாளிகள் என்றால், கூடுதலாக, அவர்கள் செய்த குற்றங்கள், தண்டனை விபரங்கள் பதிவு செய்திருப்பர்.
சிங்கப்பூரில், கைதிகள், சிறையிலிருந்து விடுதலை ஆகும்போதே, அவங்க உடம்புல மின்னணு அடையாளம் ஒன்றை போட்ட பின்னரே வெளியே அனுப்புவர். அவங்க நடவடிக்கைகளை தினமும் கண்காணிப்பது வழக்கம்.
இதே முறை அமெரிக்காவிலும் உண்டு. இங்கு, கூடுதலாக, ஒலியெழுப்பும் சிறு கருவியை உடலில் எங்காவது மாட்டி விட்டுடுவாங்க. போலீஸ் தவிர, வேறு யாராலும் அதை கழட்ட முடியாது.
குற்றவாளி, குறிப்பிட்ட எல்லையை தாண்டிப் போனால், அந்த கருவி அலறி, அதிகாரிகளுக்கு காட்டி கொடுத்து விடும். அதுமட்டுமல்லாமல், 'மைக்ரோ சிப்' ஒன்றை, ஊசி மூலம் உடம்பினுள் செலுத்திடுவாங்க. அதுக்கப்புறம், அந்த ஆள் எங்கே போனாலும், என்ன செய்தாலும், ஒன்று விடாமல் போலீசுக்கு தெரிந்து விடும்.
இதுபோல், இங்கேயும் அறிமுகப்படுத்தினா, குற்றவாளிகள் திருந்துவர், குற்றச் செயல்களும் குறையும்.
- இவ்வாறு கூறி முடித்தார், நண்பர்.
லென்ஸ் மாமா, மொபைல் போனில் கேட்டுக் கொண்டிருந்த நிகழ்ச்சி முடிந்து விட்டதோ என்னவோ, 'ப்ளூ டூத்'தை கழட்டி அதற்குறிய சிறிய பெட்டியில் பாதுகாப்பாக வைத்தார்.
இதைப் பார்த்த அண்ணாச்சி, 'லெஞ்சு, கோவிச்சுக்காதப்பா, 'ப்ளூ டூத்'தோ, பச்சை டூத்தோ, எனக்கும் ஒண்ணு வாங்கி தாயேன். என் பேர பசங்க மாதிரி, காதில் மாட்டிக்கிட்டு பாட்டு கேட்பேனுப்பா...' என்றார்.
'எந்த காதில், எதை வைப்பது என்று தெரியாமல் மாத்தி மாத்தி வெச்சுட்டு, அவங்களையும், 'டென்ஷன்' ஆக்கப் போறீரா...' என்று மாமா கூறவும், அமைதியானார், ராமசாமி அண்ணாச்சி.
ப
'வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்'ன்னு சொல்வது போல், அதிகப்படியான துக்கம் ஏற்படும்போது, கண்ணீர் விட்டு அழ வேண்டுமாம். கண்ணீரை அடக்கி வைத்தால், அது, பல உடல் கோளாறுகளை ஏற்படுத்தி விடும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
ஆஸ்துமா, ஒற்றை தலைவலி மற்றும் வயிறு உபாதைகளை அது ஏற்படுத்தும் என்கின்றனர்.
அமெரிக்காவில், நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரில், பீட்டர் ஜோசப் என்ற ஆராய்ச்சியாளர், கண்ணீரை பற்றி ஆராய்ந்து, பல உண்மைகளை கூறியுள்ளார்.
ஒருவரை, உண்மையா அழ வைத்து, அந்த சமயம் வர்ற கண்ணீரை சேகரித்து, பரிசோதித்ததில், அவருக்கு இருக்கும் உடல் கோளாறுகளை கண்டுபிடித்து விடலாம் என்று நிரூபித்துள்ளார். சந்தோஷத்தில் வரும் கண்ணீரை வைத்து எதையும் கண்டுபிடிக்க முடியாதாம்.
சாதாரணமா வர்ற கண்ணீரை, 'பேசல்' கண்ணீர் என்றும், துக்கத்தில் அழும்போது வரும் கண்ணீரை, 'ரிப்ளெக்ஸ்' கண்ணீர் என்றும் குறிப்பிடுகிறார். இது இரண்டும் கலந்துவிட்டால், கண்ணீரின், 'காம்போசிஷன்' மாறி விடுமாம். அதனால், பரிசோதனை முடிவை சரியாக கணிக்க முடியாது என்றும் கூறுகிறார்.
- எங்கோ, எதிலோ எப்போதோ படித்தது.
இதை படிக்கும்போது, நம்மூரில் முன்பெல்லாம் கூலிக்கு மாரடிப்பவர்கள் பற்றி நினைவுக்கு வந்தது.
கிராமப்புறங்களில், யாராவது இறந்துவிட்டால், ஒப்பாரி வைப்பதற்காகவே, பணம் கொடுத்து, ஆட்களை கூப்பிட்டு வருவாங்க. இது எதுக்குன்னா, இறந்து போனவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள், துக்கத்தை அடக்கி வைத்திருப்பர். இந்த ஒப்பாரிக்காரர்களின் அழுகையை கேட்டால், அவங்களும் கதறி அழுதுடுவாங்க; பாரமும் குறைந்து விடும் என்று, கேள்விப்பட்டுள்ளேன்.
நம் முன்னோர் கெட்டிக்காரர்கள் என்றும் நினைத்துக் கொண்டேன்.